வெள்ளி, ஜூலை 22, 2011

தாய் மொழி.......



மூன்று வருடங்களுக்கு முன் ஒருநாள் என் சின்ன பெண் பள்ளிகூடத்திலிருந்து வந்த போது,  “அம்மா இந்தா உனக்கு தான் லைப்ரரிலேர்ந்து இந்த புக் எடுத்துண்டு வந்தேன்.
நீயும் அப்பாவும் போன தடவை புக் எக்ஸிபிஷனுக்கு போன போது ,  ‘பார்திபன் கனவு’ வேண்டும்ன்னு தேடினீங்களே, இது அதோட ட்ரான்ஸ்லேஷன்”
என்று என் மகள் ஒரு புத்தகத்தை கொடுத்தாள்.

நான் உடனே பரபரப்பாக அதை வாங்கி பார்த்தேன்.
நிருபமா ராகவன் என்கிற 16 (அ) 17 வயது பெண் கல்கியின் பார்த்திபன் கனவு புத்தகத்திலிருந்து முக்கியமான அத்தியாயங்களை அதன் கதை மாறாத வண்ணம் சுவைபட ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தார்.



நான் அதை படித்து முடித்து 2 நாட்களில் அவளிடம் திருப்பி கொடுத்தேன்.அவள் , “இதுல என்னம்மா இருக்கு கல்கியோட புத்தகத்தையெல்லாம் தேடி தேடி படிக்கிரீங்க” என்றாள் .நான் அவளிடம், “நீ ஒண்ணு பண்ணு நாளைக்கு உனக்கு பள்ளிக்கூடம் விடுமுறைதானே ?இதை படித்து பார்த்துவிட்டு அப்பறமாக இந்த கேள்விய கேளு” என்று சொல்லி விரட்டிவிட்டேன். இயல்பாகவே புத்தகம் படிப்பதில் அவளுக்கு ஆர்வம் அதிகம் அதனால் உடனே படிக்க ஆரம்பித்து ஒரே நாளில் முடித்துவிட்டாள்.(சிறிய புத்தகம்தான்)

படித்து முடித்த அவள் என்னிடம் வந்து சொன்னது, “அம்மா என்னால் நம்ப முடியவில்லை இத்தனை அற்புதமான மர்ம வரலாற்று கதை இது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. (அவள் ஆங்கிலத்தில் சொன்னது : "mom I can't believe it! its superb. I haven't read such a mysterious historical story till now. I just love this.I want to read such stories, can I get some other book?")

   நான் உடனே அவளிடம், “ இந்த கதையை எழுதியவர் மிகப்பெரிய எழுத்தாளர் அவருடையது நிறைய புத்தகங்கள் இருக்கு நீ தமிழ் படிப்பதென்றால் சொல்லு நான் வாங்கி தருகிறேன் , ஆனால் கல்கியோட கதையெல்லாம் நீ படிப்பதற்க்கு ரொம்ப நாள் ஆகும். உனக்கு சின்ன சின்ன குழந்தைகள் கதை புத்தகங்கள் வாங்கி தருகிறேன்.முதலில் அதை படி” என்று சொல்லிவிட்டு. பால இராமாயணம்,பால பாரதம், தசாவதாரக்கதைகள் என்ற புத்தகங்களை கொடுத்தேன்.




அவளும் தமிழ் எழுத்துக்களை என்னிடம் கற்றுக்கொண்டு மிகவும் மெதுவாக படிக்க தொடங்கினாள்.  கடந்த இரண்டு வருடங்களில் அவளிடம் தமிழ் படிப்பதில் முன்னேற்றம் தெரிகிறது. பள்ளிக்கூட பாடங்களுக்கு மத்தியில் தினசரி படிக்க முடியாததால் கோடை விடுமுறைகளில் மட்டுமே படிப்பதாலும் அவளால் வேகமாக தமிழ் கற்க முடியவில்லை.
ஆனால் அவளிடன் தமிழ் படிக்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டு விட்டதால் தொடர்ந்து கற்று வருகிறாள்.

பெரிய பெண்ணுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் குறைவு, அவள் சங்கீத பிரியை.பாட்டு கேட்பதிலும்,பாடுவதிலும்தான் கவனம் அதிகம். ஆனால் தங்கையின் ஆர்வத்தை பார்த்து அவளும் இப்பொழுது கொஞ்சம் படிக்க ஆரம்பித்துள்ளாள்.

இப்பொழுதெல்லாம் புத்தக கண்காட்சி என்றாலே இருவரும் ஆர்வமாக கிளம்பிவிடுகிறார்கள், தமிழ் புத்தகங்களை பார்க்க,இங்கு பெங்களூர் கண்காட்சியில் தமிழ் புத்தகம் நிறைய கிடைப்பதில்லை, இந்த வருடம் சென்னைக்கு அழைத்து போகும்படி கேட்டுள்ளார்கள். அந்த அளவிற்க்கு ஆர்வம் வந்துள்ளது.



தமிழ் வளர்சிக்கு எல்லோரும் பெரியதாக ஏதேதோ செய்கிறார்கள். அந்த மாதிரி புத்தகம் போடுவதோ மற்றபடி வளர்ச்சி பணிகளில் பங்கு பெறவோ என்னால் முடியும் என தோன்றவில்லை, தகுதியும் இருப்பதாக தெரியவில்லை. அதனால் என் தாய் மொழி என்னுடன் முடிந்து விடாமல்,குறைந்தது அடுத்த தலைமுறைக்காவது எடுத்துச்செல்ல என் பெண்களுக்கு படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என தோன்றியது.

அதனால் தமிழ் புத்தகங்கள் வாங்கி கொடுப்பது, ஒய்வு நேரங்களில் பேசும்போது அவர்கள் உபயோக படுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் சொல் கண்டு பிடிக்க சொல்வது ,என,  “எந்த நல்ல செய்கையும் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்” என்று சொல்வதற்க்கு ஏற்றபடி, என்னால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறேன்.



-------------------------------------------------------------------------------------------------------------

37 கருத்துகள்:

M.R சொன்னது…

நல்ல எண்ணம் சகோதரி .

நண்பர்களிலேயே நல்ல நண்பன் நல்ல புத்தகம் தான் .

தமிழ் வளர்க்கும் தங்கள் எண்ணம் ,நல்ல எண்ணம் என்று பாராட்டுகிறேன் சகோதரி

Angel சொன்னது…

.என் மகளும் நிறைய புக்ஸ் படிப்பா.நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகம் லேன்ட் மார்க்கில் கிடைக்குமா ரமா .முடிந்தால் எங்கே கிடைக்கும் என்று ஈமெயில் செய்யவும் .தற்சமயம் என் மகள் வாசித்து கொண்டிருப்பது DIARY OF ANN FRANK .பிள்ளைகளை படிக்க நாம்தான் ஊக்கபடுத்த வேண்டும் .பாராட்டுக்கள் .உங்களுக்கும், மகள்களுக்கும் .

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல எண்ணம் சகோதரி.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வாங்க ரமேஷ். உங்க கருத்துக்கும்,பாரட்டுக்கும் நன்றி

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வாங்க angelin, நான் பெரும்பாலும் புத்தகங்களை புத்தக கண்காட்சியில் வாங்கி விடுவேன். நான் உங்களுக்கு எங்கு கிடைக்கும் என விசாரித்துவிட்டு தகவல் தருகிறேன்.நன்றி.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வாங்க குமார். நன்றி..

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல முயற்சி.
மனமார பாராட்டுகிறேன்.
வாழ்த்துக்கள்.

Karthikeyan Rajendran சொன்னது…

தாய் மொழி எனபது கண்போன்றது அதை கற்பதில் உங்கள் குழந்தைக்கு உள்ள ஆர்வத்தை மென்மேலும் வளர்க்க என் வாழ்த்துக்கள். சகோ! அதே போல நமது தமிழ்நாட்டினுடைய தொன்மையையும் , பழமையையும், அதன் இனிமையையும் சொல்லிக்கொடுக்க தவறாதீர்கள்,

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நல்ல எண்ணம். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். சொன்னது…

இந்த விஷயத்தில் நான் ஃபெயில் மார்க். என் மக்கள் புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லாதிருக்கிறார்கள். அந்த ஆர்வத்தை உங்கள் பெண்களிடம் ஏற்படுத்தி விட்ட உங்களுக்கு ஃபுல் மார்க்! புத்தகங்களை விட சிறந்த நண்பன் உண்டா என்ன?

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//Rathnavel சொன்னது…
நல்ல முயற்சி.
மனமார பாராட்டுகிறேன்.
வாழ்த்துக்கள்.//
வனக்கம் ஐயா, நன்றி பாரட்டுக்கும் வாழ்த்துகளுக்கும்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வாங்க கார்த்தி, நன்றி கருத்துக்கு.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…
நல்ல எண்ணம். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்//
வாங்க ஐயா, கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வாங்க ஸ்ரீராம்,நன்றி..

சுசி சொன்னது…

வணக்கம் ரமா,
தங்கள் தொடர் பதிவு அற்புதம். நீங்களும் கல்கி ரசிகையா? ஆமாம், சூரியனை எல்லோரும் தான் விரும்புவார்கள். இதில்லென வியப்பு என்கிறீர்களா அதுவும் சரிதான். கல்கியை படிப்பதற்காகவாவது குழந்தைகளுக்கு தமிழ் கற்றுகொடுக்க வேண்டும். பொங்கலின் போது சென்னை வந்து விடுங்கள். அப்போது புத்தக கண்காட்சி நடக்கும்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வாங்க தா.தலைவி கருத்துக்கு நன்றி.
ஆம் பொங்கல் சயமத்தில் சென்னைக்கு வரவேண்டும்.

மாய உலகம் சொன்னது…

நல்ல முயற்சி இன்றைய பெற்றோர்கள் பின்பற்றவேண்டியது .... எம்மொழி கற்கினும் தமிழ்மொழிக்கீடாகுமா .... வாழ்த்துக்கள் சகோ

மாய உலகம் சொன்னது…

பதிவுகளுக்கேற்ற படங்களும் அருமை

Madhavan Srinivasagopalan சொன்னது…

நல்ல செயல்.. complements..

ம்ம்.. பார்க்கலாம். . எனது பசங்களையும் நானோ, எனது மனைவியோ தமிழ் படிக்க வைக்க முடிகிறதா என்று..

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வாங்க மாய உலகம். கருத்துக்கு நன்றி.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வாங்க மாதவன், நன்றி.

குணசேகரன்... சொன்னது…

நல்ல அன்னையாக இருக்கிறீர்கள்.. புத்தகம் படிக்கும் பழக்கம் பெரும்பாலும் இல்லாத இன்றைய தலைமுறையில் உங்கள் மகள்கள் செயல் உங்களின் நல்ல வளர்ப்பினை எடுத்துரைக்கிறது.. வாழ்த்துக்கள்..
நலம் விசாரிப்புக்கு மனமார்ந்த நன்றி.. இப்போது நலம்.

குணசேகரன்... சொன்னது…

வாழ்க்கையின் விசயங்களை எழுத்தாளர் பாலகுமாரன் விவரித்து எழுதுவார். முடிந்தால் படித்துப் பார்த்து குழந்தைகளுக்கு கொடுங்கள்
அவர் எழுதிய புத்தகங்கள் 90% நான் படித்துவிட்டேன்.
அதில் எனக்கு பிடித்தவை:
மெர்க்குரிப் பூக்கள் - முதல் நாவல்
இரும்பு குதிரைகள் - விருது பெற்ற நாவல்
துளஸி - மிகவும் அருமை
முன்கதைச் சுருக்கம் - சுய சரிதம்
தலையணைப் பூக்கள் - என்னை மிகவும் கவர்ந்தது
என் அன்புள்ள அப்பா - மிகவும் அருமை.எனக்கு பிடித்தது
பணம் காய்ச்சி மரம்
நெளி மோதிரம்
என்னுயிர் தோழி
பெண்ணாசை - வாழ்வியல்
என் கண்மணித் தாமரை - அருமை

பாலகுமாரன் எழுதிய புத்தகங்கள்

Link:

http://balakumaranpesukirar.blogspot.com/2007/11/blog-post.html

பதிப்பகத்தார் விலாசம்
விசா பப்ளிகேஷன்ஸ்,
C /o திருமகள் நிலையம்,
55, வெங்கட் நாராயணா சாலை,
தி.நகர், சென்னை -600 017,
Ph : 2434 2899
Fax : 91-44-24341559

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வாங்க குணா. வாழ்த்துக்களுக்கு நன்றி.

பாலகுமாரன் அவர்களின் புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் குறிப்பிட்டு இருப்பவற்றில் ஒன்றி இரண்டு தவிர மற்றவை அனைத்தும் நான் படித்திருக்கிறேன்.கட்டாயம் என் பெண்களுக்கு பாலகுமாரனை அறிமுகம் செய்கிறேன். நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

என் தாய் மொழி என்னுடன் முடிந்து விடாமல்,குறைந்தது அடுத்த தலைமுறைக்காவது எடுத்துச்செல்ல என் பெண்களுக்கு படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என தோன்றியது.//

பகிர்வுக்கும், முயற்சிக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வாங்க ராஜி மேடம், கருத்துக்கு நன்றி.

மனோ சாமிநாதன் சொன்னது…

தாய்மொழியை மறந்து ஆங்கிலமே தினமும் பேச்சு வழக்காய்க்கொன்ட வீடுகள் தான் இன்றைக்கு அதிகம்! தமிழ் மொழியை, புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் உங்களை நிச்சயம் பாராட்ட வேன்டும்! இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் நாளை நிச்சயம் சிற‌ந்த பெண்களாகத்தான் உருவார்கள்! உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வாங்க மனோ மேடம். என் பதிவிர்க்கு உங்களை வரவேற்கிறேன். நன்றி கருத்துக்கும்,வாழ்த்துகளுக்கும்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>“எந்த நல்ல செய்கையும் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்”

செம

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் படம் பெரிதாக உள்ளது.. மீண்டும் எடிட்டிங்க்கில் போய் படத்தில் மவுசை வைத்தால் மினிமம,மேக்சிமம்,மீடியம் 3 ஆப்ஷன் கேட்கும், சரி பண்ணவும்..


லைன் அலைன்மெண்ட் சரி இல்லை.. அதற்கு எடிட்டிங்க்கில் போய் லாஸ்ட் ஆப்ஷன் செலக்ட் பண்னவும்

RAMA RAVI (RAMVI) சொன்னது…

நன்றி செந்தில் குமார்.
படத்தையும் அலைன்மெண்டையும் சரி செய்கிறேன். நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குழந்தைகளுக்கும் நமது மொழியைக் கற்றுக் கொடுக்கவேண்டும் என்ற உங்களது எண்ணம் பாராட்டுக்குரியது சகோ. நமது மாநிலத்தில் இருந்து வெளியேறிவிட்டால் நமது மொழியை மறந்து விட வேண்டுமா என்ன?

நல்ல முயற்சிக்கு பாராட்டுகள்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வாங்க வெங்கட் கருத்துக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

20,012013இன்று உங்களின் படைப்பு வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமானது பாராட்டுக்கள் அருமையான பதிவு நல்ல கருத்தை விதைத்துள்ளீர்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

Ranjani Narayanan சொன்னது…

நம் குழந்தைகளுக்கு நம் தாய்மொழியைக் கட்டாயம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
நானும் என் பிள்ளைக்குத் தமிழ் மொழியை வீட்டிலேயே சொல்லிக் கொடுத்தேன்.
என் பேரன்களுடனும் நான் தமிழிலேயே பேசுகிறேன். அதனால் பேச்சுத் தமிழ் நன்றாக வந்திருக்கிறது.
இந்த கோடைவிடுமுறையில் இருவருக்கும் எழுத படிக்க சொல்லித் தரவேண்டும் என்ற என் ஆசையை உங்கள் இந்தப் பதிவு மேலும் தூண்டிவிடுகிறது.

நல்ல பகிர்வுக்கும், திருமதி மனோ அவர்களால் வைடூரியமாக இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப் பட்டதற்கும் வாழ்த்துகள்!

கோமதி அரசு சொன்னது…

தமிழ் புத்தகங்கள் வாங்கி கொடுப்பது, ஒய்வு நேரங்களில் பேசும்போது அவர்கள் உபயோக படுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் சொல் கண்டு பிடிக்க சொல்வது ,என, “எந்த நல்ல செய்கையும் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்” என்று சொல்வதற்க்கு ஏற்றபடி, என்னால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறேன்.//

நல்ல முயற்சி. இது போதுமே! வீட்டில் இருந்து தான் எந்த நல்ல காரியமும் செயல்படுத்தவேண்டும்.
உங்கள் முயற்சி பாராட்டப் படவேண்டிய விஷயம். வீட்டில் தமிழ் பேசவைப்பது தமிழ் கற்றுக் கொடுப்பது சிறப்பு.
வாழ்த்துக்கள் வலைச்சரத்தில் வைடூரியமாய் ஜொலிப்பதற்கு.
மனோ அவர்களுக்கு நன்றி நல்ல பதிவை பகிர்ந்தற்கு.