
இப்படி கடைத்தெரு வீடுகளை பார்த்துக்கொண்டே சென்றால்
10 நிமிடங்களில் தலைக்காவேரி செல்லுவதற்கான பாதை வந்து
விடுகிறது. அதில் செல்லும் முன் ஊரை திரும்பிப்பார்த்தால்
பசுமையான மலைச்சரிவில் பசை தடவி ஒட்ட
வைத்தாற்போல காணப்படும் வீடுகள், கடைகள் சாலைகள்,....
அதன் அழகு மனதை கொள்ளை கொண்டது.
இதனுடன் குளுமையான ஒரு சீதோஷண நிலை. மனதில்
சொல்ல முடியாத ஒரு சந்தோஷம் ஆக்கிரமித்துக்கொண்டது.
நகர வாழ்கையின் பரபரப்பை விட்டு விலகி அமைதியான
சூழ்நிலையில் இப்படி இயற்கை காட்சிகளை காணும் போது
நாம் அடையும் சந்தோஷம் எல்லையற்றதாக இருக்கிறது.
மெர்காராவிலிருந்து தலைக்காவேரி சுமார் 35 கி.மீ இருக்கும்.
வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை சுமாரான
பாராமரிப்பு..இரண்டு புரமும் பசுமையான மேற்கு தொடர்ச்சி
மலைகள், சரிவுகளில் காப்பி தோட்டங்கள், இலேசான குளிர்
என மிகவும் சுகமான அனுபவத்துடன் பயணப்பட்டோம்.
தலைக்காவேரி.....
காவேரி நதி ஆரம்பிக்கும் இடம்.
அழகிய பசுமையான மேற்கு தொடர்ச்சி மலைக்களுக்கிடையே
உள்ளது இந்த இடம். காவேரி ஒரு சிறு ஊற்றாக தன்
பயணத்தை இங்கிருந்து தொடங்குகிறாள். சுமார் 3
கீமீ.பூமிக்கடியிலேயே ஓடி அதன் பிறகு காடுகளில்
வெளிப்பட்டு ஓடுவதாக கூறப்படுகிறது. குடகு மலைப்பகுதியில்
உள்ள பாகமண்டலா என்கிற இடத்தில் கனிகா என்கிற
நதியுடனும், சுஜோதி என்கிற கண்களுக்கு புலப்படாத புராண
நதியுடனும் காவேரி சங்கமிக்கிறது. இங்கு பாகதீஸ்வரா என்கிற
ஈஸ்வரின் கோவில் உள்ளது. இந்த மூர்த்தியின் பெயராலேயே
இந்த இடம் பாகமண்டலா என்று அழைக்கப்படுகிறது.
.இங்குதான் காவேரியை நாம் பார்க்க முடிகிறது.
இரு நதிகளுமே மிகச்சிறிய ஓடை
அளவிற்கே இருப்பதை பார்க்க முடிகிறது.. 3 நதிகள்
சங்கமிப்பதால் இந்த இடத்தை திரிவேணி சங்கமம் என்றும்
அழைக்கிறார்கள்.
பாகமண்டலா. |
பாகமண்டலா திரிவேணி சங்கமம். |
பாகமண்டலாவில் காவிரி. |
திரிவேணி சங்கமம். |
பாகதீஸ்வரா கோவில் |
பாகமண்டலாவிலிருந்து மறுபடி காவேரி காடுகளின் வழியே ஓடி மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு வெளிவந்து பிறகு ஸ்ரீரங்கபட்டிணம் சிவன்னசமுத்திரம் ஆகியஇடங்களின் வழியே தமிழகத்தை அடைகிறது.
அடுத்த பதிவு
அபி நீர்வீழ்ச்சி.....
அன்புடன்
ரமாரவி.