நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 07, 2013

பயம்.......




எனக்கு சிறு வயது முதலே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம்.   4 /5 ம் வகுப்புகளில் இருந்த போது ஆனந்த விகடன்,கல்கி குமுதம் போன்றவற்றில் ஜோக்குகள் படிக்க தொடங்கி,பிறகு மெதுவாக சிறுகதைகள் படிக்கும் பழக்கமும் வந்தது. அதன் பிறகு 12ம் வகுப்பு படிக்கும் பொழுது நாவல்கள் படிக்க தொடங்கினேன்.முதலில் எனக்கு துப்பறியும் நாவல்கள்தான் அதிகம் பிடித்தது.  கல்கி அவர்களின் நாவல்கள் படிக்க ஆரம்பித்ததும்,சரித்திர நாவல்கள் மிகவும் பிடிக்க ஆரம்பித்தது.பிறகு மெதுவாக சமூக நாவல்கள்,அறிவியல் சம்பத்தப்பட்ட புத்தகங்கள் என எல்லாவற்றையும் படிக்க தொடங்கினேன்.


கல்லூரி படிப்பு முடித்ததும் அரசு பணியில் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன உத்தரவிற்காக காத்திருந்த போது நான் அதிகமாக படித்தேன்.காலையில் மாவட்ட நூலகத்திற்கு சென்று இரண்டு புத்தகங்களுடன் திரும்பி வந்து உடன் படிக்கத்தொடங்கி விடுவேன். இரண்டு நாட்களில் இரு  புத்தகங்களையும் முடித்துவிட்டு வேறு இரு புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பேன்.சில சமயம் இரு புத்தகங்களையும் ஒரே நாளில் முடித்துவிட்டு காலையில் திரும்ப நூலகம் செல்வதற்காக ஆவலுடன் காத்திருந்ததும் உண்டு.


சுமார் 25 வருடங்களுக்கு முன் பெரும்பாலும் எல்லோருக்கும் அரசு,அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களிலேயேதான் வேலை இருக்கு. அதனால் இரவு தாமதமாக வருவது எல்லாம் கிடையாது.8 அ 8.30 மணிக்குள்ளேயே வீட்டு வேலைகள் முடிக்கப்பட்டு,சிறுது நேரம் வானொலியில் பாடல்கள் பிறகு செய்திகள் கேட்டுவிட்டு 9.30 மணிக்குள் தூங்கிவிடுவோம். இப்பொழுது இருப்பது போல தொலைக்காட்சி,கணணி எல்லாம் கிடையாது. அதலால் வானொலிப்பெட்டிதான் பொழுது போக்கு சாதனம்.


சில சமயம் நூலகத்திலிருந்து எடுத்து வரும்புத்தகத்தை பகலில் படிக்க முடியவில்லை என்றால் இரவு படிக்க ஆரம்பிப்பேன்.ஆனால் வீட்டில் வேலைகள் முடித்து எல்லோரும் தூங்கச்சென்று விட்ட பிறகு என்னால் படிக்க முடியாது. இரவு கண் விழித்து படித்தால் உடல் நலத்திற்கு தீங்கு என்று அம்மா இரவு படிப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.சுவாரசியமாக படித்துக்கொண்டிருக்கும் எனக்கு புத்தகத்தை மூடவே மனம் வராது. இருந்தாலும் விளக்கு அணைத்து விட்டு எல்லோரும் படுத்துக்கொண்டு விட்டால் என்னால் படிக்க முடியாது.நானும் படுத்துகொண்டு விடுவேன் ஆனால் தூக்கம் வராது.அடுத்து கதையில் என்ன நிகழ்திருக்குமோ என்கிற ஆர்வம் என்னை தூங்கவிடாது. 


சற்று பொறுமையாக எல்லோரும் தூங்குவதற்கு காத்திருப்பேன். பிறகு மெள்ள எழுந்து அடி மேல் அடி வைத்து சத்தம் போடாமல் பக்கத்து அறைக்கு சென்று படிக்க ஆரம்பிப்பேன்.அறையின் மூலைக்கு சென்று சுவற்றில் சாய்ந்து கொண்டு தரையில் சரிந்து உட்கார்ந்து கொண்டு மடியில் புத்தகத்தை வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவேன். அவ்வளவுதான் புத்தகத்தை தவிர உலகில் வேறு எதுவே இல்லை என்பது போல ஒரு உணர்வுதான் நான் என்னையே மறந்திருப்பேன்.பிறகு முழுவதும் படித்து முடித்த பிறகு கூட சுய நினைவுக்கு வர மாட்டேன். முடிவுப்பகுதியை மறுபடியும் படிப்பேன்.


அதன் பிறகு புத்தகத்தை மூடும் பொழுது ஏதோ பெரியதாக சாதித்துவிட்ட மாதிரி இருக்கும்.ஒரு சில வினாடிகள் என்னைச்சுற்றி என்ன நிகழ்கிறது என்கிற உணர்வே இருக்காது. பிறகு மெல்ல நிசப்தமான அந்த சூழ்நிலையை உணர்வேன். நிசப்தம் என்றால் அப்படி ஒரு சத்தமற்ற தன்மையாக இருக்கு. அதை உணர்ந்த உடன் அடி வயற்றிலிருந்து ஒரு பயம் உடல் முழுவது ஆக்கிரமித்துக்கொள்ளும். இடத்திலிருந்து அசைய கூட முடியாது. அந்த பயத்தை உணர்ந்தவுடன் உடல் வியர்த்து நடுங்க அரம்பிக்கும். மின் விசிறி சுழலுகிறதா என்று பார்பதற்கு தலையை நிமிர்த்த கூட தைரியம் இருக்காது. மெதுவாக கண்களை மட்டும் உயர்த்தி மின் விசிறி சுற்றுவதை பார்க்கும் பொழுது அத்தனை நேரம்  காதுகளில் விழாமல் இருந்த அதன் சத்தம் மெதுவாக காதுகளில் விழுந்து எனது பயத்தை மேலும் அதிகரிக்கும். பிறகு மெதுவாக கடிகார சத்தம்,   சுவற்றுக்கோழி கத்தும் சத்தம், தெருவில் நாய் குரைக்கும் சத்தம், எங்கோ தூரத்தில் வேகமாக செல்லும் ஒரே ஒரு வாகனத்தின் சத்தம் என்று மெதுவாக ஒவ்வொரு சத்தமாக கேட்கும்,

ஆனால் எல்லா சத்தங்களையும் மீறி அந்த இரவின் நிசப்தம் இருக்கிறதே அதைதான் அதிகம் உணர முடியும்.அந்த உணர்வு, அந்த பயம்...என்னை இருக்கும் இடம் விட்டு நகர விடாது. அதுவும் ஏதாவது திகில் நாவல் அல்லது  துப்பறியும் நாவல் படித்திருந்தால் போச்சு.................அம்மா அப்பாவை கூப்பிடலாம் என்று மெதுவாக கூப்பிட முயன்றால் தொண்டை அடைத்துக்கொள்ளும் வாயிலிருந்து சப்தமே வராது. யாராவது எழுந்திருக்க மாட்டார்களா என்று மனது அடித்துக்கொள்ளும். அப்படியே உட்கார்ந்து இருப்பேன்.


என்னை மீறி தூக்கம் வரும் பொழுது அப்படியே சரிந்து கையை தலைகாணியாக வைத்துக்கொண்டு தூங்கிவிடுவேன்.காலையில்   “அப்படி என்ன புத்தகம் வேண்டியிருக்கு? உடம்புக்கு வந்தால் என்ன செய்வது?விளக்கை கூட அணைக்காமல்”, என்கிற அம்மாவின் பாசமான குரலைக் கேட்கும் போது என்னுடைய பயமெல்லாம் காணாமல் போயிருக்கும். அடுத்த புத்தகம் எப்பொழுது படிக்கலாம் என்கிற ஏக்கத்தோடு எழுந்திருப்பேன்.




இது மாதிரி ஒரு நாள் மட்டும் இல்லை பல நாட்கள் படித்திருக்கிறேன்.அம்மா திட்டுவார்கள் என்று தெரிந்தும்,என்னுடைய பயம் தெரிந்தும்  நாவல் படிப்பதில் இருந்த ஆர்வம் என்னை படிக்க தூண்டியது. 


பல வருடங்கள் கழித்து சென்ற வாரம் ஒரு நாள் இது மாதிரி நள்ளிரவு தாண்டும் வரை ஒரு புத்தகம் படித்தேன்.சுமார் 1 மணி வரை படித்துவிட்டு புத்தகத்தை மூடும் பொழுது எனக்கு என்னுடைய பயம் நினைவுக்கு வந்தது. ஆனால் சிறு வயதில் நான் உணர்ந்த  பயத்தை இப்பொழுது உணரவில்லை. காரணம் .......வயது தந்த முதிர்ச்சியா? .அல்லது அப்பொழுது இருந்த அந்த நிசப்தம் இப்பொழுது இல்லாதாலா? தெரியவில்லை.   


முன் மாதிரி இல்லாமல், தற்போது  தனியார் துறை, மென்பொருள்துறை என்று பணி புரிவர்கள் அதிகம். பணி முடித்து இரவு தாமதமாக வருபவர்களும் அதிகம்.அதனால் நள்ளிரவு தாண்டியும், ஒரிரு வீடுகளில் கேட்ட தொலைக்காட்சி சப்தம், அடிக்கடி இல்லை என்றாலும், அவ்வப்பொழுது செல்லும் வண்டிகளின் சப்தம் என்று,.....அன்று நான் அனுபவித்த அந்த நிசப்தம் இப்பொழுது என்னால் உணர முடியவில்லை.


சரி அப்படி என்ன புத்தகம் படித்தேன், இரவு கண்விழித்து என்று கேட்கிறீர்களா? சுஜாதா அவர்களின் 24 ருபாய் தீவு. முன்பு எப்பொழுதோ படித்தது. மீண்டும் படித்தேன். அவருடை புத்தகங்களை எத்தனை முறை திருப்பிப்படித்தாலும் ஓவ்வொரு முறையும் முதல் முறை படிக்கும் பொழுது எற்படும் அந்த விறு விறுப்பு குறையாமல் இருக்கிறது.




நன்றி
ரமாரவி.

புதன், ஆகஸ்ட் 24, 2011

கோகுலாஷ்டமி/கிருஷ்ணஜயந்தி.......





கோகுலாஷ்டமி, ஸ்ரீஜயந்தி,கிருஷ்ண ஜயந்தி எல்லாமே பகவான் கிருஷ்ணரின் பிறந்த தினத்தை நாம் கொண்டாடும் நாளை குறிக்கிறது.

கிருஷ்ணஜயந்தி என்ற உடன் நினைவுக்கு வருவது சீடை தான்.சின்ன சின்ன உருண்டையா கரகரன்னு.......




சிறுவயதில் பள்ளிக்கு போய்விட்டு திரும்பும் ஒரு நாளில் அம்மா பரண் மேலிருந்து பித்தளை டப்பா, பெரிய தூக்கு எல்லாம் எடுத்து தேய்த்து கவிழ்த்து வைத்திருப்பதை பார்த்தவுடன் கிருஷ்ண ஜயந்தி வருவது புரிந்துவிடும்.(மீதி பண்டிகைகளுக்கு இவ்வளவு பாத்திரங்கள் தேவை இல்லை.ஸ்ரீஜயந்திக்கு மாத்திரமே குறைந்தது 10/12 பெரிய தூக்கு, டப்பாக்கள் தேவை.)

இருந்தாலும் அம்மாவிடம், “கிருஷ்ண ஜயந்தி வருதாமா?நிறையா சீடை முறுக்கு எல்லாம் செய்வீயா?” என்று கேட்டு உறுதி படுத்திக்கொள்வோம். அம்மாவும், “ஆமாம்! சமத்தா எதையும் தொடாமல் இருந்தா நிறையா பண்ணிக்கொடுப்பேன்” என்றவுடன் சந்தோஷமாக இருக்கும்.

அதற்கு அடுத்து இரண்டு தினங்கள்,சாயந்திரம் பள்ளியிலிருந்து திரும்பி வரும் பொழுது வீடு முழுக்க எண்ணை வாசனையும்,இனிப்பு வாசனையுமாக இருக்கும்.

மறுபடியும் அம்மாவின், “ சமத்தா எதையும் தொடாமல் இருந்தாக்க நாளைக்கு கிருஷ்ண ஜயந்தி, பெருமாளுக்கு பண்ணிவிட்டு உங்களுக்கு சாப்பிடரத்துக்கு கொடுப்பேன்” என்ற வார்த்தைகளுக்கு கட்டுபட்டு சமர்த்தாக இருப்போம்.எதையாவது தொட்டுவிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திடும் என்று ஏற்கனவே பயமுறுத்தி வைத்திருந்ததால் பேசாமல் இருந்துவிடுவோம்.

கிருஷ்ணஜயந்தி அன்று பெரும்பாலும் பள்ளி விடுமுறையாக இருக்கும். காலையிலிருந்தே சாயங்காலம் பூஜைக்கு தயாராகிவிடுவோம்.அடிக்கடி அம்மாவிடம் சென்று , “எப்பம்மா பெருமாளுக்கு பண்ணணும்” என்று தொணத்தொணத்தபடியே இருப்போம்.அம்மாவும் நிதானமாக சாயந்திரம் அப்பா அலுவலகத்திலிருந்து வந்ததும் என்று பதில் சொன்னபடி வீட்டு வேலைகளில் முழுகியிருப்பார்.

மாலை 5 மணி ஆனவுடன் அம்மா வாசலில் பெருக்கி தண்ணீர் தெளித்து பெரியதாக கோலம் போட்டுவிட்டு,வீட்டினுள்ளும் சிறு சிறு கிருஷ்ணர் பாதம் வைப்பதை வேடிக்கை பார்த்தபடி அம்மா கூடவே நடந்துகொண்டிருப்போம்.






எங்க வீட்டில் புஜை அறை தனியாக கிடையாது. சமையல் அறையிலேயே ஒரு அலமாரியில் பெருமாள் படங்கள் வைக்கப்பட்டு இருக்கும்.அங்கேயே பூஜை செய்வோம்.
அந்த அலமாரியின் அடியிலேயே பெரியதாக கோலம் போட்டு குத்து விளக்கு ஏற்றி வைக்கப்படும்.பெரிய தட்டில்,வெற்றிலை பாக்கு,மல்லிகை, முல்லை,சாமந்தி ஆகிய பூக்களும்,வாழை, திராட்சை ,சாத்துக்குடி, கொய்யா,நாவல் பழம்,மாதுளை இன்னும் பிற பழங்கள், வெண்ணை, மற்றும் பண்டிகைக்காக செய்த பக்‌ஷணங்கள் எல்லாம் அம்மா எடுத்து வைப்பார்.

சுமார் 6/30 மணிக்கு மேல் தெரு முனையில் அப்பா வருவது தெரிந்தவுடன் ஓடிபோய் அவர் கையை பிடித்துக்கொண்டு, “அப்பா சீக்கிரமா பெருமளுக்கு பண்ணணும் வேகமா வா” என்றபடி அவரை அழைத்து வருவோம். அவரும் சிரித்தபடியே வந்து குளித்துவிட்டு பூஜையை ஆரம்பிப்பார். ஒரு 1/2 மணி நேரம் போல பூஜையெல்லாம் முடித்துவிட்டு முதலில் பெருமாள் தீர்த்தம் தருவார்.பிறகு வெண்ணை,சுக்கு வெல்லம்,ஆகியவற்றை பிரசாதமாக கொடுப்பார்.சுக்கு காரம் நாக்கை தாக்க ,அப்பாவிடம் இன்னும் கொஞ்சம் வெண்ணை கொடு என்று கேட்டு வாங்கி சாப்பிடுவோம்..

அதன் பின் அப்பா, “இனிமேல் நீங்க என்ன பக்‌ஷணம் வேண்டுமானால் சாப்பிடலாம் பெருமாளுக்கு பண்ணியாச்சு” என்பார். இரண்டு மூன்று தினங்களாக தொடக்கூடாது என்று சொல்லிவிட்டு இப்பொழுது சாப்பிடலாம் என்றவுடன் ஒரு திகைப்புதான் தோன்றும். அவரிடன், “நிஜமாவே சாப்பிடலாமாப்பா” என்று கேட்டு உறுதி செய்து கொண்டு முதலில் சீடை வைத்திருக்கும் தூக்கில் கையை நுழைப்போம். அதற்குள் அம்மா, “ கண்டபடி கையெல்லாம் போடக்கூடாது பக்‌ஷணம் கெட்டுப்போயிடும் நீங்க கூடத்துல போய் உட்காருங்க நான் தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லுவார்.

தூக்கில் நுழைத்த கையை வெறும் கையாக எடுக்காமல் கிடைத்த சீடையை அள்ளி (சின்ன கையில் ஒரு 3 அல்லது 4 சீடைகள் வரும்)அப்படியே வாயில் அடைத்துக்கொள்ளுவோம்.





அம்மா தட்டில் கொண்டு வருவதை பார்த்து “என்னம்மா நிறையா வைச்சிருந்தயே இவ்வளவுதானா?” என்று கேட்போம்.
அம்மா, “தட்டு நிறைய வெச்சுண்டு சாப்பிட்டா உடம்புக்கு வரும், கண்ணு வேற படும். கொஞசம் கொஞ்சமா எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கோ எல்லாம் உங்களுக்கு பண்ணதுதான்.” என்றவுடன் சந்தோஷமாக சாப்பிட ஆரம்பிப்போம்.

அதற்கு அடுத்த நாளிலிருந்து ஒரு வாரம் வரையில் சாயங்கால டிபன் பக்‌ஷணங்கள்தான்.

அதன் பின் சற்று பெரியவர்களானவுடன் சீடை உருட்டும் வேலை செய்வோம்.உருட்டும் போதே சாப்பிடவேண்டும் என்கிற உணர்வை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வோம்(இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திவிடுமே)

இன்னும் சற்று வயதான உடன் அம்மாவுடன் கூட மாட வேலை செய்தல் கோலம் போடுதல் எல்லாம் செய்வோம். பூஜை முடிந்ததும் பக்‌ஷணம் எடுத்துக்கோங்கோ என்று அம்மாவே கூப்பிட வேண்டும்.அப்படி கூப்பிட்டாலும், “ நீ வைச்சுடும்மா நான் வேணுங்கறச்சே எடுத்துக்கறேன்” என்று பதில் சொல்லி இருக்கிறோம். இருந்தாலும் ஒரு நிமிடம் உள்ளே சென்று அந்த சீடையை மட்டும் சாப்பிட்டுவருவோம்.

சிறு குழந்தைகள் மாதிரி அவசரமாக சாப்பிடுவதை வயது தடுத்தாலும்,பண்டிகை என்ற சந்தோஷம் கட்டாயமாக மனதில் இருந்தது.

இப்பொழுது........

கிருஷ்ண ஜெயந்தின்னா சீடை முறுக்குதானா?  பிஸ்ஸா , சமோசா,வெஜ் பர்கர் எல்லாம் கிடையாதா என்று கேட்கிரார்கள் இந்த காலத்து குழந்தைகள்.

பண்டிகை என்றவுடன் ஆவலோடு அந்த எதிர்பார்ப்பு, சந்தோஷம் எல்லாமே மிகவும் குறைந்து விட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------