விழிப்புணர்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 26, 2011

ஐஸ்வரியா ராயும் ஆயிரம் ரூபாய் தங்கமும்.....

நவம்பர் 14 ம் தேதி, என் வீட்டு வேலை செய்யும் ரத்னா,வேலைக்கு வரும்போதே மிக பரபரப்புடன் வந்தார்.அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:-


 “அம்மா டி.வி. போடுங்க ஐஸ்வரியாராய்க்கு குழந்தை பிறந்திடுச்சா பார்த்து சொல்லுங்க”.

 “எதுக்கு ரத்னா”? என்ன குழந்தை அப்படீன்னு தெரிஞ்சுக்கணுமா”?

  “ஆமாம் மா,அவங்களுக்கு பெண் குழந்தை பிறந்துதுனாக்க தங்க ஒரு கிராம் 1000 ருபாய்க்கு கொடுக்கறாங்களாம், வட்டிக்காரர் கிட்ட கேட்டு பணம் வாங்கிக்கணும் இல்லைன்னா, வீட்டுல இருக்க எல்லாத்தையும் கொண்டு வச்சாவது கடன் வாங்கி நந்தினிக்கு (அவரின் 13 வயது பெண்) ஒரு 15/20 கிராம் வாங்கிவிட வேண்டும்”

“என்ன ரத்னா? நீ என்ன சொல்லற? தங்கம் விக்கற விலையில அது யாரு அது 1000 க்கு கொடுப்பது”?

 “எங்க வீட்டு கிட்ட பேசிக்கிட்டாங்கம்மா.எல்லோரும் வாங்கப் போறாங்களாம்”

 “அதெல்லாம் இருக்காது ரத்னா யாராவது கதை கட்டி விட்டிருப்பாங்க.தங்கம் விக்கற விலையில அவ்வளவு குறைச்சலாக யாரும் கொடுக்க மாட்டாங்க”


 “இல்லம்மா!!  நீங்க வீட்டுக்குள்ளேயே இருக்கீங்களா அதனால உங்களுக்கு ஒண்ணும் தெரியலை. !!!!!!!!!!!!!!!!.  நிஜம்மா கொடுக்கறாங்களாம், நீங்களும் அண்ணங்கிட்ட சொல்லி ஏதாவது வாங்கிக்கோங்க ”.


  “ரத்னா நீ பாட்டுக்கு வட்டிக்கு கடன் எல்லாம் வாங்காத,எனக்கென்னமோ இது புரளின்னுதான் தெரியறது. எவனாவது வட்டிக்கடைக்காரன் உங்களை எல்லாம் ஏமாத்த கிளப்பி விட்டிருப்பான்.நீங்களும் வட்டிக்கு பணத்த வாங்கி, தங்கமும் வாங்காம பணத்தையும் செலவழிச்சு நஷ்டப்பட வேண்டிதான். அதனால நான் சொல்லறதை கேளு.2 நாள் பொறு, அவங்களுக்கு குழந்தை பிறக்கட்டும், அப்ப என்ன ஆகிறதுன்னு பார்க்கலாம்”

  “சரிம்மா” என்று சொன்னாலும்,

 இவங்களுக்கு ஒண்ணுமே தெரியலையே, இவங்க படிச்சவங்க இல்லை போல இருக்கு என்கிற மாதிரி என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார்.





அவர் மறுநாள் வேலைக்கு வரவில்லை.அதற்கு அடுத்த நாள் வருவதற்குள் எனக்கு மண்டை வெடித்து விட்டது. என்னாச்சோ என்னமோ? ஐஸுக்கு இன்னும் குழந்தை பிறந்த தகவல் வேறு வரவில்லையே, ரத்னா கடன் வாங்கி விட்டாரா? ஏமாந்து போய்விட போகிறார் என்று ஏதேதோ எண்ணங்கள்..

16ம் தேதி காலையில் வந்தார்,வந்தவுடன் நான் உடனே கேட்டேன்

 “கடன் ஏதாவது வாங்கிவிட்டையா ரத்னா? என்னாச்சு தங்கம் கொடுக்கிறார்களா? குழந்தை பிறந்து விட்டதா?"

  "இன்னும் இல்லம்மா. கடன் இப்ப வாங்க வேண்டம் அப்படீன்னு எங்க அத்தை(மாமியார்) சொல்லிருச்சு”

  “ரத்னா மாமியார் சொன்னத கேளு.யாரும் இப்ப தங்கம் விக்கற விலையில ஒரு கிராம் 1000 த்துக்கு கொடுக்க மாட்டாங்க”

  “சரிம்மா, பார்க்கலாம்” என்று நான் சொன்னதை கேட்டு பட்டும் படாமலும் பதில் சொல்லிவிட்டு சென்றார்..


 நான் அறிவுறுத்திவிட்டேன், புரியவில்லையா இல்லை நான் சொல்லுவது  பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை.சரி போகட்டும் எல்லாம் அவள் தலை எழுத்து என்று நான் பேசாமல் இருந்து விட்டேன்.


அன்று சாயந்திரம் ஐஸுக்கு பெண் குழந்தை பிறந்த விவரம் தெரியவந்த உடன், எனக்கு ரத்னா நினைவுக்கு வந்தார். பெண் குழந்தை பிறந்தால்தான் தங்கம் விலை கம்மி என்றும் ஆண் குழந்தை பிறந்தால் ஒன்றும் கிடையாது என்று ரத்னா சொன்னாளே! ஆண் குழந்தையாவது பிறந்திருக்கக் கூடாதோ? எத்தனை பேர்கள் ஏமந்தார்களோ? பாவம்! என்று மறுபடியும் எனக்கு ஏதேதோ  எண்ணங்கள்!!!





மறுநாள் காலை ரத்னா வந்தவுடன் அவரே, “அம்மா நீங்க அன்னைக்கே சொன்னீங்களா? நானும் யோசிச்சேன்.எங்க அத்தை வேற சொல்லிச்சா? அதனால் பெரியவங்களா சொல்லறாங்களே அப்படீன்னு நல்ல வேளை நான் கடன் வாங்கலை.யாரும் அப்படி தங்கம் எல்லாம் கொடுக்கலை.எங்க வீடுங்க இருக்கற பக்கம் யாரோ ஏமாத்தி இருக்காங்க.அப்படி எங்க வீட்டாண்ட இரண்டு பேர் வட்டிக்கு வாங்கிட்டாங்க. சரி தங்கம் கிடைக்கலன்னு பணத்த அப்படியே அன்னைக்கே திருப்பி கொடுக்கலாம்ன்னு போனா,வட்டிக்கடைகாரர் பிடித்த வட்டியை திருப்பி கொடுக்க மாட்டேன்,அடுத்த மாத வட்டியும் கொடு அப்படி இப்படின்னு ஒரே தகராறு பண்ணியிருக்காங்க! அப்பறமா எப்படியோ ஒரு மாத வட்டியோட விட்டாரு.பாவம் அவங்க ஒரு நாள் கூட பணத்தை வச்சுக்கல அதுக்குள்ள 350/400 நஷ்டம் ஆயிருச்சு.”


  “நல்ல வேளை ரத்னா ஏதோ நீயாவது என்பேச்சையும், உன் மாமியார் பேச்சையும் கேட்டியே? பாவம் நஷ்டப்பட்டவங்க, இனிமேலாவது இதையெல்லாம் நம்பாதே! பாரு உங்க மாமியாருக்கு எல்லாம் தெரிந்திருக்கு.”என்றேன்.


  “அதெல்லாம் இல்லைம்மா! அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது, மூணு வருஷத்துக்கு முன்ன ஏதோ கொஞ்சம் பணம் கட்டினாக்க 6 மாசத்தில பாத்திரம் கிரண்டர்,மிக்ஸி எல்லாம் தரேன்னு சொன்னங்களா,அதை நம்பி நான் 4000மும் அவங்க 3000 மும் கட்டி ஏமாந்து போயிடோம் அதுலேர்ந்து அவுங்க பணவிஷயத்துல ஜாக்கிரதையா இருக்காங்க.”.(அந்த அமர்க்களத்தையெல்லாம் அப்பறமா ஒரு நாள் உங்களுக்கு சொல்லறேம்மா இப்ப நேரம் இல்ல என்று சொல்லியிருக்கிறார்.)


  “பாரு ரத்னா,உங்க மாமியார் ஒரு தடவை பட்டவுடன் எவ்வளவு நன்றாக புரிந்து கொண்டு விட்டாங்க! நீயாவது ஏதோ கொஞ்சம் படிச்சவ (7வது வரைக்கும் படித்திருக்கிறாராம்.) உங்க மாமியாரப்பாரு படிக்கலைனாலும் விவரமா இருக்காங்க அவங்கள பார்த்து தெரிஞ்சுக்கோ” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.



இப்படி ஏமாறும் எத்தனையோ பேர்களில் இந்த ஒரு தடவை ஒரு ரத்னா காப்பாற்றப்பட்டார். அவர் சொன்னதிலிருந்து அவர் இருக்கும் இடத்தில் இரண்டு பேர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிரார்கள் என்று தெரிகிறது.நமக்கு தெரியாமல் எத்தனைபேரோ?  இந்த முறை அவரை சற்று யோசிக்கவைத்து உடனடியாக கடன் வாங்காமல் தடுக்க முடிந்தது. மேலும் படிப்பறிவே இல்லாத அவரின் மாமியார் அனுபவத்தால் திருந்தி ஜாக்கிரதையாக இருக்கிறார்.ஆனால் ரத்னா இன்னும் திருந்தினாரா தெரியவில்லையே?  இனிமேலாவது ஏமாறாவது இருப்பாரா? இந்தமுறை ஏதோ எங்கள் பேச்சை கேட்டு பேசாமல் இருந்தார்!!யாரும் ஏதுவும் சொல்லவில்லை என்றால் கட்டாயம் கடன் வாங்கி இருப்பார்.மற்றவர் அனுபவத்திலிருந்து தாம் பாடம் கற்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வருமா? இவர்களுக்கெல்லாம் யார்? எப்படி? விழிப்புணர்வை ஏற்படுத்துவது?


ஒன்று மட்டும் தெரிகிறது -- விழிப்புணர்வு என்பது படிப்பதினால் வருவதில்லை, புரிந்து கொள்வதினால் வருகிறது.






வெள்ளி, ஜூலை 29, 2011

குடி குடியை கெடுக்கும்....




சென்ற வாரத்தில் ஒருநாள் என் பெரிய பெண் எம்.சி.ஏ. படிப்புக்கான நுழைவு தேர்வு எழுத செல்லவேண்டியிருந்தது.தேர்வு நடைபெற்ற கல்லூரி எங்கள் வீட்டிலிருந்து வெகுதூரத்தில் இருந்ததால் ,அவளுடன் நானும் செல்ல வேண்டியதாயிற்று.

அவளுக்கு 2 மணி நேரத்துக்கு எழுத்து தேர்வு என்பதால் அவள் முடித்துவிட்டு வரும் வரை அந்த கல்லூரியின் அலுவலகத்தில் காத்திருந்தேன்.

 அங்கு இருந்த அலுவலக உதவியாளர் ஒருவர் தொலைபேசியில் அழைப்பவர்களுக்கு பதில் சொல்வது, நேரில் வருபவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வது என சுறுசுறுப்பாக பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் கன்னடம்,ஹிந்தி,தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளையும் சரளமாக பேசுவதை பார்த்ததும் அவரிடம் பேச்சு கொடுத்து அவரை பற்றி தெரிந்து கொண்டேன்.
அவரை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றியது.      
அவர் என்னிடம் கூறியதை அப்படியே கொடுத்திருக்கிறேன்.





 “அம்மா, என் பெயர்---------,எங்க குடும்பம் எனக்கு 12 வயது இருக்கும் போதே விழுப்புரத்தில்  இருந்து இங்கு பெங்களூர் வந்து குடியேறி விட்டோம். என் தந்தை நாங்கள் இங்கு வருவதற்க்கு முன் இறந்து விட்டார். எனக்கு இரு சகோதரிகள். வீட்டில் நான் ஒரே ஆண் பிள்ளை என்றும் சிறியவன் என்பதனாலும் என்னை கண்டிக்க யாரும் இல்லை.என் சகோதரிகள் என்னிடம் மிகுந்த பாசத்தினால் நான் என்ன செய்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.கண்டிக்க யாரும் இல்லாத காரணத்தினால் வேண்டாத சகவாசங்கள் ஏற்பட்டு குடி பழக்கத்துக்கு ஆளாகி விட்டேன்.என்னை திருத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நான் ஒத்துழைக்கவில்லை,அதனால் திருமணம் செய்து வைத்தாலாவது நல்லது நடக்கும் என் நினைத்து,எனக்கு என் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தார்கள்.

ஆனால் திருமணமாகி ஒரு பெண் 2 ஆண் குழந்தைகள் என்று குடும்பம் ஆனவுடன் கூட என் குடி பழக்கம் அதிகமானதே தவிர குறையவில்லை.

சுமார் 10 வருடங்களுக்கு முன் என் நண்பர் ஒருவர் AA எனப்படும் Alcoholics Anonymous கூட்டத்திற்க்கு என்னை வற்புறுத்தி அழைத்து சென்றார். முதலில் நான் இஷ்டமில்லமல்தான் சென்றேன்.ஆனால் தொடர்ந்து சென்ற போது தான் என்னுடைய குடி பழக்கத்தின் விளைவுகள் எனக்கு உறைக்க ஆரம்பித்தது. என் குடும்பம் பற்றியும் எண்ணத்தொடங்கினேன்.கூட்டத்தில் என்னை போன்று குடி பழக்கத்திற்கு ஆளாகி தற்போது தவறை உணர்ந்து திருந்தியவர்களின் பேச்சை கேட்டவுடன் என்னாலும் குடி பழக்கத்தை விட்டுவிட்டு சாதாரணமான வாழ்க்கை வாழ முடியும் என நினைத்தேன்.




என்னை AA விற்க்கு அழைத்து சென்ற நண்பர் மற்றும் என் குடும்பத்தினர் உதவியுடன் 14 வருடங்களாக பழகியிருந்த என் குடி பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டேன். இப்பொழுது இந்த வேலையில் சேர்ந்து என் குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி வருகிறேன். அடுத்த ஜனவரி மாதத்துடன் நான் குடி பழக்கத்தை விட்டு 10 வருடம் ஆகிவிடும்”, என்றார்.

மேலும் அவர்,“நீங்க என்னிடம் இது பற்றி கேட்பதுடன் என் மனைவி குழந்தைகளிடம் என் குடி பழக்கம் பற்றி கேட்க வேண்டும்.என்னால் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டம், அவமானம் கொஞ்சம் நஞ்சமல்ல.நான் அவர்களை ரொம்பவும் துன்புறுத்திவிட்டேன்”,என மிகவும் வருத்தபட்டு கூறினார். “ஆனால் இப்பொழுது என் வாழ்க்கை சீர் ஆகிவிட்டது இரு மகன்களும் 8வது 5வது படிக்கிறார்கள். பெண் 10வது முடித்து விட்டாள். அவளுக்கு 19 வயதுஆகிறது, அடுத்தவருடம் திருமணம் செய்யலாம் என்றிருக்கிறேன்” என்றும் சொன்னார்.


நான் உங்களை பற்றி எழுதலாமா? என்று அவரிடம் கேட்ட பொழுது  “கட்டாயம் எழுதுங்கள் அம்மா ஆனால் ஊர்,பெயர் எல்லாம் வேண்டாம் எங்கள் கூட்டத்தில்(AA) விளம்பரம் கூடாது என்று சொல்லிருக்கிறார்கள்,ஆனால் நான் சொன்னதை கட்டாயம் எழுதுங்கள் என்னை பார்த்து 4 பேர் திருந்தினால் நல்லது.  குடி என்பது ஒரு வியாதி அது குணமாகிவிடும் என்ற நினைப்போடு கூட்டத்திற்க்கு வந்தால் கட்டாயம் என்னைப்போல் திருந்தி நல்ல வாழ்க்கை வாழலாம்” என்று கூறினார்.



 எந்த கெட்ட பழக்கமும் ஒரு வியாதிதான், அந்த வியாதி தீருவதற்கான மருந்து மனதிடமும், விடமுயற்சியும் தான். இதைதான் அவருடைய பேச்சு உணர்த்தியது.

இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என எண்ணியதால் இந்த பதிவு.





படங்கள்: நன்றி கூகுள்.

--------------------------------------------------------------------------------------------------------------















புதன், ஜூலை 27, 2011

தாய் மொழி.......சிறு விளக்கம்.

என்னுடைய “ தாய் மொழி” என்கிற பதிவுக்கு “ சங்கப்பலகை” பதிவு திரு அறிவன் என்பவர் கருத்தில் கீழ்கண்டவாறு தெரிவித்திருந்தார். 




//நீங்கள் வசிப்பது எங்கு என்று தெரியவில்லை.. இந்தியாவில் தமிழத்தில் தான் என்றால் இப்பதிவை விட நகைமுரணான விதயம் எதுவும் இருக்காது.. இந்தியாவுக்கு வெளியில் என்றாலும் தமது சொந்த மொழியைப் பயிற்றுவிப்பதையும் படிக்க வைப்பதையும் ஒரு முயன்று செய்யும் செயலாகப் பார்க்கும் மனநிலை தமிழர்களின் அறிவு வெறுமையைத்தான் சுட்டுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. தாய்மொழியைக் கற்காதவன் முகவரியற்றவன் போன்றவன் என்பது பொதுநோக்கு. வருத்தப் பட வைப்பதற்காக எழுதவில்லை..வருந்தப்பட்டிருப்பதால் எழுதுகிறேன்..
தாய் மொழி....... 12:31 AM இல் இல் அறிவன்#11802717200764379909 என்பவர்///

அவருடைய கருத்தை வெளியிட்டுவிட்டு கருத்துக்கு நன்றி என கூறிவிட்டு நான் செல்ல விரும்பவில்லை. 

நான் சொல்லவந்த விஷயம் என்னவென்றால்,

இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் ஆங்கில வழி கல்வியைதான் விரும்புகின்றனர்.வேகமாக வளர்ந்து வரும் உலகத்தில் அவர்களும் வளர ஆங்கிலம் அவசியமாகும். இது அவர்களுடைய எதிர்காலத்திற்க்கு நல்லது என்கிற எண்ணத்தினால் பெற்றோராகிய நாமும் அவர்களை ஆங்கில வழி கல்வி கற்க வைக்கிறோம். இப்படிபட்ட சூழ்நிலையில் அவர்கள் ஆங்கிலத்தையே தாய்மொழியாக்கி கொண்டுவிடுகிறார்கள்.இத்தகைய நிலையில் அவர்களுக்கு பெற்றோராகிய நாம்தாம் அவர்களுக்கு எடுத்துச்சொல்லி புரியவைக்க வேண்டும்.
அதைதான் நானும் செய்தேன்.

என் பெரிய பெண்ணுக்கு 8 வயதும்,சிறியவளுக்கு 2 வயதும் ஆன சமயத்தில் நான் என் கணவரின் வேலை மாற்றல் காரணமாக சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்துவிட்டேன்.இங்கு அவர்களை பள்ளியில் சேர்த்தபொழுது கர்நாடகா பள்ளிகளில் கன்னடம் கட்டாய பாடம் என்பதால் அதுவும்,இரண்டாம் மொழியாக ஹிந்தியும் எடுத்துக்கொள்ள் வேண்டிய இருந்ததால்(இங்கு பள்ளிகளில் தமிழ் பாடம் சொல்லிக்கொடுப்பது இல்லை) அவ்விரண்டு மொழிகளுமே படிக்க வைக்க வேண்டியதாயிற்று. இங்கு கர்நாட்டகாவில் இருப்பது போல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியைதான் கற்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பள்ளிக்கூட பாடம், வீட்டு பாடம் அதைதவிர பெற்றோர்கள் வேலை இதற்கு நடுவில் அவர்களுக்கு தம் தாய்மொழி கற்க வேண்டியதின் அவசியத்தை புரிந்து கொள்ளும் பக்குவத்தை அவர்கள் அடைய 10 வயதாவது ஆக வேண்டும்.இப்பொழுதுள்ள தலைமுறையினரிடம் மேற்கத்திய மோகத்துக்கு நடுவில் தாய்மொழியினுடைய அருமையை புரிய வைக்க பிரயத்தப்படதான் வேண்டும.

. திரு அறிவன் அவர்கள் வருத்தப்பட்டது போல் தாய்மொழியை கற்க வைப்பது ஒரு முயன்று செய்யும் செயலாக ஆகிவிட்டதே என எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது. 


வெள்ளி, ஜூலை 22, 2011

தாய் மொழி.......



மூன்று வருடங்களுக்கு முன் ஒருநாள் என் சின்ன பெண் பள்ளிகூடத்திலிருந்து வந்த போது,  “அம்மா இந்தா உனக்கு தான் லைப்ரரிலேர்ந்து இந்த புக் எடுத்துண்டு வந்தேன்.
நீயும் அப்பாவும் போன தடவை புக் எக்ஸிபிஷனுக்கு போன போது ,  ‘பார்திபன் கனவு’ வேண்டும்ன்னு தேடினீங்களே, இது அதோட ட்ரான்ஸ்லேஷன்”
என்று என் மகள் ஒரு புத்தகத்தை கொடுத்தாள்.

நான் உடனே பரபரப்பாக அதை வாங்கி பார்த்தேன்.
நிருபமா ராகவன் என்கிற 16 (அ) 17 வயது பெண் கல்கியின் பார்த்திபன் கனவு புத்தகத்திலிருந்து முக்கியமான அத்தியாயங்களை அதன் கதை மாறாத வண்ணம் சுவைபட ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தார்.



நான் அதை படித்து முடித்து 2 நாட்களில் அவளிடம் திருப்பி கொடுத்தேன்.அவள் , “இதுல என்னம்மா இருக்கு கல்கியோட புத்தகத்தையெல்லாம் தேடி தேடி படிக்கிரீங்க” என்றாள் .நான் அவளிடம், “நீ ஒண்ணு பண்ணு நாளைக்கு உனக்கு பள்ளிக்கூடம் விடுமுறைதானே ?இதை படித்து பார்த்துவிட்டு அப்பறமாக இந்த கேள்விய கேளு” என்று சொல்லி விரட்டிவிட்டேன். இயல்பாகவே புத்தகம் படிப்பதில் அவளுக்கு ஆர்வம் அதிகம் அதனால் உடனே படிக்க ஆரம்பித்து ஒரே நாளில் முடித்துவிட்டாள்.(சிறிய புத்தகம்தான்)

படித்து முடித்த அவள் என்னிடம் வந்து சொன்னது, “அம்மா என்னால் நம்ப முடியவில்லை இத்தனை அற்புதமான மர்ம வரலாற்று கதை இது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. (அவள் ஆங்கிலத்தில் சொன்னது : "mom I can't believe it! its superb. I haven't read such a mysterious historical story till now. I just love this.I want to read such stories, can I get some other book?")

   நான் உடனே அவளிடம், “ இந்த கதையை எழுதியவர் மிகப்பெரிய எழுத்தாளர் அவருடையது நிறைய புத்தகங்கள் இருக்கு நீ தமிழ் படிப்பதென்றால் சொல்லு நான் வாங்கி தருகிறேன் , ஆனால் கல்கியோட கதையெல்லாம் நீ படிப்பதற்க்கு ரொம்ப நாள் ஆகும். உனக்கு சின்ன சின்ன குழந்தைகள் கதை புத்தகங்கள் வாங்கி தருகிறேன்.முதலில் அதை படி” என்று சொல்லிவிட்டு. பால இராமாயணம்,பால பாரதம், தசாவதாரக்கதைகள் என்ற புத்தகங்களை கொடுத்தேன்.




அவளும் தமிழ் எழுத்துக்களை என்னிடம் கற்றுக்கொண்டு மிகவும் மெதுவாக படிக்க தொடங்கினாள்.  கடந்த இரண்டு வருடங்களில் அவளிடம் தமிழ் படிப்பதில் முன்னேற்றம் தெரிகிறது. பள்ளிக்கூட பாடங்களுக்கு மத்தியில் தினசரி படிக்க முடியாததால் கோடை விடுமுறைகளில் மட்டுமே படிப்பதாலும் அவளால் வேகமாக தமிழ் கற்க முடியவில்லை.
ஆனால் அவளிடன் தமிழ் படிக்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டு விட்டதால் தொடர்ந்து கற்று வருகிறாள்.

பெரிய பெண்ணுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் குறைவு, அவள் சங்கீத பிரியை.பாட்டு கேட்பதிலும்,பாடுவதிலும்தான் கவனம் அதிகம். ஆனால் தங்கையின் ஆர்வத்தை பார்த்து அவளும் இப்பொழுது கொஞ்சம் படிக்க ஆரம்பித்துள்ளாள்.

இப்பொழுதெல்லாம் புத்தக கண்காட்சி என்றாலே இருவரும் ஆர்வமாக கிளம்பிவிடுகிறார்கள், தமிழ் புத்தகங்களை பார்க்க,இங்கு பெங்களூர் கண்காட்சியில் தமிழ் புத்தகம் நிறைய கிடைப்பதில்லை, இந்த வருடம் சென்னைக்கு அழைத்து போகும்படி கேட்டுள்ளார்கள். அந்த அளவிற்க்கு ஆர்வம் வந்துள்ளது.



தமிழ் வளர்சிக்கு எல்லோரும் பெரியதாக ஏதேதோ செய்கிறார்கள். அந்த மாதிரி புத்தகம் போடுவதோ மற்றபடி வளர்ச்சி பணிகளில் பங்கு பெறவோ என்னால் முடியும் என தோன்றவில்லை, தகுதியும் இருப்பதாக தெரியவில்லை. அதனால் என் தாய் மொழி என்னுடன் முடிந்து விடாமல்,குறைந்தது அடுத்த தலைமுறைக்காவது எடுத்துச்செல்ல என் பெண்களுக்கு படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என தோன்றியது.

அதனால் தமிழ் புத்தகங்கள் வாங்கி கொடுப்பது, ஒய்வு நேரங்களில் பேசும்போது அவர்கள் உபயோக படுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் சொல் கண்டு பிடிக்க சொல்வது ,என,  “எந்த நல்ல செய்கையும் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்” என்று சொல்வதற்க்கு ஏற்றபடி, என்னால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறேன்.



-------------------------------------------------------------------------------------------------------------