
“அப்பாடா...கால் வலி உயிர் போறது, ...அந்த பேப்பரை கொஞ்சம் இப்படி கொடுங்கோ”
என்றபடி வந்து சோபாவில் உட்கார்ந்தார்,மனைவி.
பேப்பரை எடுத்து கொடுத்த கணவன், “அடுப்புல என்ன வைச்சிருக்க ? ஏதோ தீயர மாதிரி இருக்கு.”
“இப்பதான் பீன்ஸ் காய பாணலில போட்டு நிறைய ஜலம் விட்டுட்டு அடுப்ப சின்னதாக்கி வைச்சிட்டு வந்தேன். இன்னும் 10/15 நிமிஷமாவது ஆகும் அதுல ஜலம் குறையறத்துக்கு. என்ன நீங்க என்னை சின்ன குழந்தைன்னு நினச்சிண்டு இருக்கீங்களா? தீயரது கீயரதுன்னு!! சித்த பேசாம இருங்கோ”
கணவன் : “சரி.. இனிமே நான் ஒண்ணும் சொல்லலை! என்றபடி எழுந்து உள்ளே போனார்.

சிறிது நேரம் கழித்து.
மகள்: அம்மா அடுப்புல என்ன வைச்சிருக்க! ஏதோ தீயரது!
மனைவி:ஐய்யய்யோ! பீன்ஸ்ஸ வைச்சிட்டு மறந்து போய் பேப்பர் படிக்க உட்கார்ந்துட்டேன்” என்றபடி வேகமாக சமையலறைக்கு போனார்.
சத்தம் கேட்டு வெளியே வந்த கணவர்: “என்னாச்சு? ..பார்த்தையா நான் அப்பவே சொன்னேன் ஏதோ தீயரதுன்னு நீ தான் கேட்கலை.”
மனைவி: “ஆமாம் இப்ப வாங்கோ அப்ப வெறுமயாவது பய முறுத்தினேள்.!!!இப்ப நிஜமாவே தீயரச்சே வந்து சொல்லாதீங்கோ,!!!!உங்களோட இதே தொல்லையா போச்சு,பரவாயில்லை ஒரு நாள் தீஞ்சுபோன காய சாப்பிடுங்கோ!”
“நான் என்னடி பண்ணட்டும் !!சொன்னலும் தப்பு சொல்லவிட்டலும் தப்புங்கிற”
என்றபடி நகர்ந்தார்.
சுமார் 30 வருடங்களுக்கு முன் எங்க அம்மாவிற்கும் அப்பாவிற்கும் நடந்த வாக்குவாதம்.
இது முந்தாநாள் அப்படியே எங்க வீட்டிலும் ரீபீட் ஆச்சு.இங்க என்னம்மா அப்பாவிற்கு பதிலா நானும் என் கணவரும்.
“சொன்னலும் தப்பு சொல்லட்டாலும் தப்பு” என்ற என் கணவரின் வார்த்தைகளை கேட்டவுடன் எனக்கு என் அம்மா அப்பா பேசிக்கொண்டது நினைவுக்கு வந்து ஏகமாக சிரிப்பு வந்து சிரிக்க ஆரம்பித்தேன்.
“இப்ப எதுக்கும்மா சிரிக்கற பீன்ஸ் தீஞ்சு போனத்துக்கா? ”என்ற என் பெண்களின் கேள்வியை கூட சட்டைப் பண்ணாமல் சிரித்துக்கொண்டிருந்தேன்.
காலம் எவ்வளவு மாறினாலும் இந்த தங்கமணி..ரங்கமணி ..வாக்குவாதங்கள் மாறுவதே இல்லை.
சற்று நேரத்தில் என் சிரிப்பு அடங்கியதும்,என் கணவர் பெண்களிடம், “உங்கம்மா இப்ப எதுக்கு சிரிச்சா?” என்றார்.
அதுக்கு என் சின்ன பெண், “அப்பா ....இப்ப கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டா 2 நாள் கழிச்சு “பிளாக்” ல பாரு உனக்கு ஏன் சிரிச்சன்னு தெரிஞ்சுடும்”
நான் மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தேன்........
