வெள்ளி, ஜூலை 29, 2011

குடி குடியை கெடுக்கும்....




சென்ற வாரத்தில் ஒருநாள் என் பெரிய பெண் எம்.சி.ஏ. படிப்புக்கான நுழைவு தேர்வு எழுத செல்லவேண்டியிருந்தது.தேர்வு நடைபெற்ற கல்லூரி எங்கள் வீட்டிலிருந்து வெகுதூரத்தில் இருந்ததால் ,அவளுடன் நானும் செல்ல வேண்டியதாயிற்று.

அவளுக்கு 2 மணி நேரத்துக்கு எழுத்து தேர்வு என்பதால் அவள் முடித்துவிட்டு வரும் வரை அந்த கல்லூரியின் அலுவலகத்தில் காத்திருந்தேன்.

 அங்கு இருந்த அலுவலக உதவியாளர் ஒருவர் தொலைபேசியில் அழைப்பவர்களுக்கு பதில் சொல்வது, நேரில் வருபவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வது என சுறுசுறுப்பாக பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் கன்னடம்,ஹிந்தி,தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளையும் சரளமாக பேசுவதை பார்த்ததும் அவரிடம் பேச்சு கொடுத்து அவரை பற்றி தெரிந்து கொண்டேன்.
அவரை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றியது.      
அவர் என்னிடம் கூறியதை அப்படியே கொடுத்திருக்கிறேன்.





 “அம்மா, என் பெயர்---------,எங்க குடும்பம் எனக்கு 12 வயது இருக்கும் போதே விழுப்புரத்தில்  இருந்து இங்கு பெங்களூர் வந்து குடியேறி விட்டோம். என் தந்தை நாங்கள் இங்கு வருவதற்க்கு முன் இறந்து விட்டார். எனக்கு இரு சகோதரிகள். வீட்டில் நான் ஒரே ஆண் பிள்ளை என்றும் சிறியவன் என்பதனாலும் என்னை கண்டிக்க யாரும் இல்லை.என் சகோதரிகள் என்னிடம் மிகுந்த பாசத்தினால் நான் என்ன செய்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.கண்டிக்க யாரும் இல்லாத காரணத்தினால் வேண்டாத சகவாசங்கள் ஏற்பட்டு குடி பழக்கத்துக்கு ஆளாகி விட்டேன்.என்னை திருத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நான் ஒத்துழைக்கவில்லை,அதனால் திருமணம் செய்து வைத்தாலாவது நல்லது நடக்கும் என் நினைத்து,எனக்கு என் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தார்கள்.

ஆனால் திருமணமாகி ஒரு பெண் 2 ஆண் குழந்தைகள் என்று குடும்பம் ஆனவுடன் கூட என் குடி பழக்கம் அதிகமானதே தவிர குறையவில்லை.

சுமார் 10 வருடங்களுக்கு முன் என் நண்பர் ஒருவர் AA எனப்படும் Alcoholics Anonymous கூட்டத்திற்க்கு என்னை வற்புறுத்தி அழைத்து சென்றார். முதலில் நான் இஷ்டமில்லமல்தான் சென்றேன்.ஆனால் தொடர்ந்து சென்ற போது தான் என்னுடைய குடி பழக்கத்தின் விளைவுகள் எனக்கு உறைக்க ஆரம்பித்தது. என் குடும்பம் பற்றியும் எண்ணத்தொடங்கினேன்.கூட்டத்தில் என்னை போன்று குடி பழக்கத்திற்கு ஆளாகி தற்போது தவறை உணர்ந்து திருந்தியவர்களின் பேச்சை கேட்டவுடன் என்னாலும் குடி பழக்கத்தை விட்டுவிட்டு சாதாரணமான வாழ்க்கை வாழ முடியும் என நினைத்தேன்.




என்னை AA விற்க்கு அழைத்து சென்ற நண்பர் மற்றும் என் குடும்பத்தினர் உதவியுடன் 14 வருடங்களாக பழகியிருந்த என் குடி பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டேன். இப்பொழுது இந்த வேலையில் சேர்ந்து என் குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி வருகிறேன். அடுத்த ஜனவரி மாதத்துடன் நான் குடி பழக்கத்தை விட்டு 10 வருடம் ஆகிவிடும்”, என்றார்.

மேலும் அவர்,“நீங்க என்னிடம் இது பற்றி கேட்பதுடன் என் மனைவி குழந்தைகளிடம் என் குடி பழக்கம் பற்றி கேட்க வேண்டும்.என்னால் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டம், அவமானம் கொஞ்சம் நஞ்சமல்ல.நான் அவர்களை ரொம்பவும் துன்புறுத்திவிட்டேன்”,என மிகவும் வருத்தபட்டு கூறினார். “ஆனால் இப்பொழுது என் வாழ்க்கை சீர் ஆகிவிட்டது இரு மகன்களும் 8வது 5வது படிக்கிறார்கள். பெண் 10வது முடித்து விட்டாள். அவளுக்கு 19 வயதுஆகிறது, அடுத்தவருடம் திருமணம் செய்யலாம் என்றிருக்கிறேன்” என்றும் சொன்னார்.


நான் உங்களை பற்றி எழுதலாமா? என்று அவரிடம் கேட்ட பொழுது  “கட்டாயம் எழுதுங்கள் அம்மா ஆனால் ஊர்,பெயர் எல்லாம் வேண்டாம் எங்கள் கூட்டத்தில்(AA) விளம்பரம் கூடாது என்று சொல்லிருக்கிறார்கள்,ஆனால் நான் சொன்னதை கட்டாயம் எழுதுங்கள் என்னை பார்த்து 4 பேர் திருந்தினால் நல்லது.  குடி என்பது ஒரு வியாதி அது குணமாகிவிடும் என்ற நினைப்போடு கூட்டத்திற்க்கு வந்தால் கட்டாயம் என்னைப்போல் திருந்தி நல்ல வாழ்க்கை வாழலாம்” என்று கூறினார்.



 எந்த கெட்ட பழக்கமும் ஒரு வியாதிதான், அந்த வியாதி தீருவதற்கான மருந்து மனதிடமும், விடமுயற்சியும் தான். இதைதான் அவருடைய பேச்சு உணர்த்தியது.

இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என எண்ணியதால் இந்த பதிவு.





படங்கள்: நன்றி கூகுள்.

--------------------------------------------------------------------------------------------------------------















புதன், ஜூலை 27, 2011

தாய் மொழி.......சிறு விளக்கம்.

என்னுடைய “ தாய் மொழி” என்கிற பதிவுக்கு “ சங்கப்பலகை” பதிவு திரு அறிவன் என்பவர் கருத்தில் கீழ்கண்டவாறு தெரிவித்திருந்தார். 




//நீங்கள் வசிப்பது எங்கு என்று தெரியவில்லை.. இந்தியாவில் தமிழத்தில் தான் என்றால் இப்பதிவை விட நகைமுரணான விதயம் எதுவும் இருக்காது.. இந்தியாவுக்கு வெளியில் என்றாலும் தமது சொந்த மொழியைப் பயிற்றுவிப்பதையும் படிக்க வைப்பதையும் ஒரு முயன்று செய்யும் செயலாகப் பார்க்கும் மனநிலை தமிழர்களின் அறிவு வெறுமையைத்தான் சுட்டுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. தாய்மொழியைக் கற்காதவன் முகவரியற்றவன் போன்றவன் என்பது பொதுநோக்கு. வருத்தப் பட வைப்பதற்காக எழுதவில்லை..வருந்தப்பட்டிருப்பதால் எழுதுகிறேன்..
தாய் மொழி....... 12:31 AM இல் இல் அறிவன்#11802717200764379909 என்பவர்///

அவருடைய கருத்தை வெளியிட்டுவிட்டு கருத்துக்கு நன்றி என கூறிவிட்டு நான் செல்ல விரும்பவில்லை. 

நான் சொல்லவந்த விஷயம் என்னவென்றால்,

இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் ஆங்கில வழி கல்வியைதான் விரும்புகின்றனர்.வேகமாக வளர்ந்து வரும் உலகத்தில் அவர்களும் வளர ஆங்கிலம் அவசியமாகும். இது அவர்களுடைய எதிர்காலத்திற்க்கு நல்லது என்கிற எண்ணத்தினால் பெற்றோராகிய நாமும் அவர்களை ஆங்கில வழி கல்வி கற்க வைக்கிறோம். இப்படிபட்ட சூழ்நிலையில் அவர்கள் ஆங்கிலத்தையே தாய்மொழியாக்கி கொண்டுவிடுகிறார்கள்.இத்தகைய நிலையில் அவர்களுக்கு பெற்றோராகிய நாம்தாம் அவர்களுக்கு எடுத்துச்சொல்லி புரியவைக்க வேண்டும்.
அதைதான் நானும் செய்தேன்.

என் பெரிய பெண்ணுக்கு 8 வயதும்,சிறியவளுக்கு 2 வயதும் ஆன சமயத்தில் நான் என் கணவரின் வேலை மாற்றல் காரணமாக சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்துவிட்டேன்.இங்கு அவர்களை பள்ளியில் சேர்த்தபொழுது கர்நாடகா பள்ளிகளில் கன்னடம் கட்டாய பாடம் என்பதால் அதுவும்,இரண்டாம் மொழியாக ஹிந்தியும் எடுத்துக்கொள்ள் வேண்டிய இருந்ததால்(இங்கு பள்ளிகளில் தமிழ் பாடம் சொல்லிக்கொடுப்பது இல்லை) அவ்விரண்டு மொழிகளுமே படிக்க வைக்க வேண்டியதாயிற்று. இங்கு கர்நாட்டகாவில் இருப்பது போல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியைதான் கற்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பள்ளிக்கூட பாடம், வீட்டு பாடம் அதைதவிர பெற்றோர்கள் வேலை இதற்கு நடுவில் அவர்களுக்கு தம் தாய்மொழி கற்க வேண்டியதின் அவசியத்தை புரிந்து கொள்ளும் பக்குவத்தை அவர்கள் அடைய 10 வயதாவது ஆக வேண்டும்.இப்பொழுதுள்ள தலைமுறையினரிடம் மேற்கத்திய மோகத்துக்கு நடுவில் தாய்மொழியினுடைய அருமையை புரிய வைக்க பிரயத்தப்படதான் வேண்டும.

. திரு அறிவன் அவர்கள் வருத்தப்பட்டது போல் தாய்மொழியை கற்க வைப்பது ஒரு முயன்று செய்யும் செயலாக ஆகிவிட்டதே என எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது. 


திங்கள், ஜூலை 25, 2011

பார்த்து ரசிக்க படங்கள்...



மைசூர் பயண கட்டுரைக்கு பிறகு பேலூர், ஹளேபீடு பற்றி பயண கட்டுரைஎழுதலாம் என்றிருந்தேன்.இந்த மாதத்திய பதிவில் “ கோபி ”அவர்கள் அவ்வூர்கள் பற்றி பயண கட்டுரையை அற்புதமாக எழுதியுள்ளார்.  அதனால் நாங்கள் சென்றபோது எடுத்த சில படங்களை மட்டும் கொடுத்துள்ளேன்.



பாற்கடலை கடைவது




ஹளேபீடு கோவிலின் உள்ளே ஒரு தூணில் சிற்ப வேலைப்பாடு.



மாஹாபலி சக்ரவர்த்தி வாமன அவதார பெருமளுக்கு 3 அடி மண் தானம் வழங்கும் காட்சி.

ராமர் ஒரே பாணத்தில் 7 மரங்களை துளைப்பது.







மஹாபாரதப்போரில் சக்கரவியூஹம்..

இராவணன் கைலாச மலையை தூக்குதல்


விநாயக பெருமான்.



வெள்ளி, ஜூலை 22, 2011

தாய் மொழி.......



மூன்று வருடங்களுக்கு முன் ஒருநாள் என் சின்ன பெண் பள்ளிகூடத்திலிருந்து வந்த போது,  “அம்மா இந்தா உனக்கு தான் லைப்ரரிலேர்ந்து இந்த புக் எடுத்துண்டு வந்தேன்.
நீயும் அப்பாவும் போன தடவை புக் எக்ஸிபிஷனுக்கு போன போது ,  ‘பார்திபன் கனவு’ வேண்டும்ன்னு தேடினீங்களே, இது அதோட ட்ரான்ஸ்லேஷன்”
என்று என் மகள் ஒரு புத்தகத்தை கொடுத்தாள்.

நான் உடனே பரபரப்பாக அதை வாங்கி பார்த்தேன்.
நிருபமா ராகவன் என்கிற 16 (அ) 17 வயது பெண் கல்கியின் பார்த்திபன் கனவு புத்தகத்திலிருந்து முக்கியமான அத்தியாயங்களை அதன் கதை மாறாத வண்ணம் சுவைபட ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தார்.



நான் அதை படித்து முடித்து 2 நாட்களில் அவளிடம் திருப்பி கொடுத்தேன்.அவள் , “இதுல என்னம்மா இருக்கு கல்கியோட புத்தகத்தையெல்லாம் தேடி தேடி படிக்கிரீங்க” என்றாள் .நான் அவளிடம், “நீ ஒண்ணு பண்ணு நாளைக்கு உனக்கு பள்ளிக்கூடம் விடுமுறைதானே ?இதை படித்து பார்த்துவிட்டு அப்பறமாக இந்த கேள்விய கேளு” என்று சொல்லி விரட்டிவிட்டேன். இயல்பாகவே புத்தகம் படிப்பதில் அவளுக்கு ஆர்வம் அதிகம் அதனால் உடனே படிக்க ஆரம்பித்து ஒரே நாளில் முடித்துவிட்டாள்.(சிறிய புத்தகம்தான்)

படித்து முடித்த அவள் என்னிடம் வந்து சொன்னது, “அம்மா என்னால் நம்ப முடியவில்லை இத்தனை அற்புதமான மர்ம வரலாற்று கதை இது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. (அவள் ஆங்கிலத்தில் சொன்னது : "mom I can't believe it! its superb. I haven't read such a mysterious historical story till now. I just love this.I want to read such stories, can I get some other book?")

   நான் உடனே அவளிடம், “ இந்த கதையை எழுதியவர் மிகப்பெரிய எழுத்தாளர் அவருடையது நிறைய புத்தகங்கள் இருக்கு நீ தமிழ் படிப்பதென்றால் சொல்லு நான் வாங்கி தருகிறேன் , ஆனால் கல்கியோட கதையெல்லாம் நீ படிப்பதற்க்கு ரொம்ப நாள் ஆகும். உனக்கு சின்ன சின்ன குழந்தைகள் கதை புத்தகங்கள் வாங்கி தருகிறேன்.முதலில் அதை படி” என்று சொல்லிவிட்டு. பால இராமாயணம்,பால பாரதம், தசாவதாரக்கதைகள் என்ற புத்தகங்களை கொடுத்தேன்.




அவளும் தமிழ் எழுத்துக்களை என்னிடம் கற்றுக்கொண்டு மிகவும் மெதுவாக படிக்க தொடங்கினாள்.  கடந்த இரண்டு வருடங்களில் அவளிடம் தமிழ் படிப்பதில் முன்னேற்றம் தெரிகிறது. பள்ளிக்கூட பாடங்களுக்கு மத்தியில் தினசரி படிக்க முடியாததால் கோடை விடுமுறைகளில் மட்டுமே படிப்பதாலும் அவளால் வேகமாக தமிழ் கற்க முடியவில்லை.
ஆனால் அவளிடன் தமிழ் படிக்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டு விட்டதால் தொடர்ந்து கற்று வருகிறாள்.

பெரிய பெண்ணுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் குறைவு, அவள் சங்கீத பிரியை.பாட்டு கேட்பதிலும்,பாடுவதிலும்தான் கவனம் அதிகம். ஆனால் தங்கையின் ஆர்வத்தை பார்த்து அவளும் இப்பொழுது கொஞ்சம் படிக்க ஆரம்பித்துள்ளாள்.

இப்பொழுதெல்லாம் புத்தக கண்காட்சி என்றாலே இருவரும் ஆர்வமாக கிளம்பிவிடுகிறார்கள், தமிழ் புத்தகங்களை பார்க்க,இங்கு பெங்களூர் கண்காட்சியில் தமிழ் புத்தகம் நிறைய கிடைப்பதில்லை, இந்த வருடம் சென்னைக்கு அழைத்து போகும்படி கேட்டுள்ளார்கள். அந்த அளவிற்க்கு ஆர்வம் வந்துள்ளது.



தமிழ் வளர்சிக்கு எல்லோரும் பெரியதாக ஏதேதோ செய்கிறார்கள். அந்த மாதிரி புத்தகம் போடுவதோ மற்றபடி வளர்ச்சி பணிகளில் பங்கு பெறவோ என்னால் முடியும் என தோன்றவில்லை, தகுதியும் இருப்பதாக தெரியவில்லை. அதனால் என் தாய் மொழி என்னுடன் முடிந்து விடாமல்,குறைந்தது அடுத்த தலைமுறைக்காவது எடுத்துச்செல்ல என் பெண்களுக்கு படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என தோன்றியது.

அதனால் தமிழ் புத்தகங்கள் வாங்கி கொடுப்பது, ஒய்வு நேரங்களில் பேசும்போது அவர்கள் உபயோக படுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் சொல் கண்டு பிடிக்க சொல்வது ,என,  “எந்த நல்ல செய்கையும் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்” என்று சொல்வதற்க்கு ஏற்றபடி, என்னால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறேன்.



-------------------------------------------------------------------------------------------------------------

புதன், ஜூலை 20, 2011

மூன்று முடிச்சுகள் [தொடர் பதிவு]

மதிப்பிற்குரிய ஐயா திரு வை.கோபலகிருஷ்ணன் அவர்கள் என்னை தொடர் பதிவிட அழைத்திருக்கிறார். நன்றி ஐயா.

கேள்விகளை நீ கேட்கிறாயா? இல்லை நான் கேட்கட்டுமா என்கிற, “திருவிளையாடல்” படத்தில் வருகிற மாதிரி கேட்டால், நான் நாகேஷ் மாதிரி எனக்கு கேட்கத்தான் தெரியும் என்று சொல்லியிருப்பேன்.

ஆனால் இங்கே கேள்விகள் ஏற்கனவே கேட்கப்பட்டு விட்டதால் வேறு வழியில்லாமல் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்::

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

1. என் குடும்பம்.


2.புத்தகங்கள் படிப்பது.


3. என் பெண்களுடன் செலவிடும் நேரம்.


2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?


1. சமைப்பது.


2. மிகவும் சத்தமான இடம்


3. மருத்துவ மனைக்கு செல்வது.




3) பயப்படும் மூன்று விஷயங்கள்


1.இரவு நேரத்தில் பேருந்தில் நெடும் தூர பயணம்.
  
2. உடல்நலக்குறைவு.(மருத்துவ மனைக்கு போகாமல் இருக்க முடியாதே அதனால் )


3. என் பெண்களுக்கு நல்ல விதமான வாழ்க்கை அமைய வேண்டுமே என்கிற பயம்.


4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?


1. உலக வாழ்க்கை 


2. உண்மையான ஒழுக்கமானவர்களுக்கு கெடுதல் நடப்பது.     
     
3. உண்மையற்று ஒழுக்கமற்றவர்களுக்கு நல்லதே நடப்பது.






5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?




1. நான் படிக்க உபயோக படுத்தும் மூக்குக்கண்ணடி.


2. என்னுடைய செல் போன்.


3. அப்பொழுது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்.


6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?


1.குழந்தைகளின் மழலை பேச்சை கேட்டால் மனம் விட்டு சிரிப்பேன்.


2.தொலைக்காட்சியில் வரும் நகைசுவை காட்சிகள்.


3. இன்றைய அரசியல் நிலவரம்.


7)தாங்கள் தற்போது செய்து கொண்டு  இருக்கும் மூன்று காரியங்கள்?




1. திரு.நாரயணமூர்த்தி எழுதிய A Better India Better World புத்தகம் 

        படித்துக்கொண்டிருக்கிறேன்.


2. அடுத்த பதிவிர்க்கான வரைவு 


3. பரணிலிருந்து பொருட்களை இறக்கி சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.


    (வீடு மாற்றப்போவதால்)


8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?


1.ஒரு நாவல் எழுத வேண்டும்.


2.உலக நாடுகளுக்கு சுற்று பயணம்.


3.கடமைகளை முடித்துவிட்டு ஊரில் வீடு வாங்கிக்கொண்டு அமைதியான வாழ்க்கை.


9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயஙகள்?


    மேலே குறிப்பிட்டுள்ள மூன்றும்..




10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?




 1. மிக சத்தமாக வைக்கப்படும் தொலைக்காட்சி (அ) வானொலி.


 2. பொய் பேசுவது


 3.வம்பு பேசுவது




11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?




 1.வீணை வாசிக்க

 2. ஏதாவது அன்னிய மொழி.


 3. தமிழ்.(இன்னும் சிறப்பாக கற்க வேண்டும் என்கிற ஆவல்)


12) பிடிச்ச மூன்று உணவு வகை?


 1. சாம்பார் சாதம்


 2. பஜ்ஜி.


 3. பாகற்காய் பிட்லை.




13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?


 1. “தாயே தநதையே” என தொடங்கும் பிரபந்த பாசுரம்.


 2. கடவுள் ஒரு நாள் உலகை காண என்ற பாடல்.

 3.அந்தந்த சமயங்களில் பிரபலமாக இருக்கும் பாடல்.




14) பிடித்த மூன்று படங்கள்?

  1. ஆங்கிலம்--பென் ஹர்
  
  2. ஹிந்தி ---   ரங் தே பஸந்தி.

  3. தமிழ்--- நிறைய இருக்கிறது,எழுதுவதற்க்கு இடம் போதாது.





15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?

  1. புத்தகங்கள்

  2. படிப்பது
  
  3. சந்தோஷம் 


16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?


 1.தோழி angelin (காகிதபூக்கள் பதிவர்)


 2. நண்பர்.சி.பி. செந்தில்குமார் (அட்ரா சக்க)


 3. நண்பர். R.கோபி. 

செவ்வாய், ஜூலை 19, 2011

நண்பர்கள்..




இராஜராஜேஸ்வரி மேடம் நண்பர்கள் பற்றி எழுதும்படி கேட்டிருந்தார்.நன்றி மேடம்..

நான் சாதாரணமாக நன்றாக கலகல என்று பேசி பழகும் பழக்கம் உள்ளவள். அதனால் எனக்கு தோழிகள் நிறைய பேர் உண்டு. ஆனால் ஆப்தமான நட்பு என்றால் சில பேர்கள் தான் அவர்கள்:

என்னுடைய முதல் தோழி சாந்தி.அவர்கள் குடும்பமும் எங்கள் குடும்பமும் பக்கத்து பக்கத்து வீடு. இருவரும் வேறு வேறு பள்ளியில் படித்தோம்.பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் உடனே நாங்கள் விளையாட ஆரம்பித்தால் அவ்வளவுதான் நேரம் போவதே தெரியாது,பக்கத்து வீடு... பெரியவர்களும் நண்பர்கள் என்பதால் நாங்கள் விளையாடுவதற்க்கு தடையே கிடையாது. அவளின் தம்பியும் என் தம்பியும் நண்பர்கள் அதனால் நாங்கள் நால்வரும் மற்றும் தெருவில் இருந்த மற்ற சிறுவர் சிறுமியருடன் விளையாட ஆரம்பித்தால் தெருவே கல கலத்து போய்விடும்
5 வயதில் ஆரம்பித்த அவள் நட்பு 13 வயதுவரை தொடர்ந்தது. பிறகு அவர்கள் வீடு மாற்றி சென்றுவிட்டார்கள்.



தி.நகர்,பர்க்கிட் ரோடு சாரதா வித்யாலயா பள்ளியில் படிக்கும் போது 6ம் வகுப்பில் எனக்கு அறிமுகம் ஆனவள் ரோஸலீன் என்பவள்..10ம் வகுப்பு வரையில் நாங்கள் இருவரும் இணை பிரியாமல் இருந்தோம். நான் சாரணியர் இயக்கத்தில் சேர்ந்து பேட்ரோல் லீடராக இருந்தேன், அவள் மிகவும் தைரியமானவள் அவளை வற்புறுத்தி மாணவியர் தலைவி ஆக்கிவிட்டோம்.நானும் லீடர் அவளும் மாணவியர் தலைவி என்பதால் ஒன்றாகவே இருப்போம்.

 பள்ளியில் அப்பொழுதெல்லாம் வாரத்தில் 2 நாட்கள் கொடியேற்றம் இருக்கும்.காலையில் தலைமைஆசிரியர் அல்லது மூத்த ஆசிரியர் யாராவது கொடி ஏற்றுவார்கள்.எனக்கு சாயந்திரம் வேளைகளில் கொடியை மடிக்கும் பணி ரொம்ப் பிடிக்கும். நமது தேசிய கீதம் பாடிமுடிக்கப்பட்டவுடன் மாணவர் தலைவி கொடியிறக்கம் செய்துவிட்டு இன்னுமொரு மாணவி எதிர்ப்பக்கம் பிடித்துக்கொள்ள அந்த கொடியை மடிக்க வேண்டும். கட்டாயம் அந்த இன்னொரு மாணவி நானாகதான் இருப்பேன். எனக்கு பிடிக்கும் என்பதனால் வேறு யார் கேட்டாலும் விடாமல் என்னை மட்டுமே அழைத்து செல்வாள்..அப்படி பட்ட நட்பு..
10வது முடித்த பிறகு +1 க்கு நாங்கள் இருவரும் வேறு வேறு பள்ளிகளுக்கு சென்றபிறகு அவளை பார்க்க முடியவில்லை...



+1 வந்த பிறகு நிறைய தோழிகள் கிடைத்தார்கள்..யாமினி, கீதா சுமதி, மாலதி, ஜெயலஷ்மி இன்னும் பலர் ஆனால் நெருக்கம் வருவதற்க்குள் பள்ளி படிப்பு முடிந்து கல்லூரி படிப்பு தொடங்கிவிட்டது.

கல்லூரி காலங்களில் நாங்கள் 10 பேர்கள் ஒரு கூட்டமாக இருப்போம் அதில் நான்,சுதா,கலா,சுவர்ணமாலா ஆகிய நால்வரும் ரொம்ப நெருக்கம். யூனிவர்சிடிக்கு போவது, நூலகத்துக்கு போவது,என்று ஒன்றாகவே இருப்போம். இதில் சுதாவும் நானும் பேசிக்கொண்டே இருப்போம். வகுப்பில் குறிப்பு எடுக்கும் போதும் கைகுட்டையை வாயருகில் மூடினால் போல் வைத்துக்கொண்டு ஆசிரியருக்கு தெரியாமல் பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டோம். ஆனால் அதே சமயத்தில் சரியாக குறிப்பும் எடுத்துக்கொண்டு விடுவோம். எங்களுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் என் வகுப்புத் தோழி கீதா என்பவள் நாங்க பேசுவதை கேட்டுக்கொண்டு குறிப்பு எடுக்க முடியாமால் விட்டுவிட்டு பிறகு எங்களிடமிருந்து பார்த்து எழுத்திக்கொள்வாள். அவள் எப்பொழுதும் எங்களிடம் கேட்கும் கேள்வி “ அதெப்படி நீங்க மட்டும் பேசிண்டே நோட்ஸ் ம் எழுதரீங்க” என்பதுதான். அதற்க்கு பதில் எங்களிடமிருந்து சிரிப்புதான் வரும்..



பிறகு எனக்கு வேலை கிடைத்த பிறகு அலுவலகத்தில் எனக்கு கிடைத்த தோழி பத்மஜா. இவளை பற்றி சொல்லவேண்டுமானால் திருவள்ளுவரை தான் மேற்கோள் காட்டவேண்டும.

முகம்நக நட்பது நட்பன்று: நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு.


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதம் நட்பு.

நட்பு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தது அவளுடைய நட்பு. எனது சுகம் ,துக்கம், சந்தோஷம், கஷ்டம் எல்லாவற்றிலும் இருந்தாள்.இன்னும் இருக்கிறாள், இனியும் இருப்பாள்..

ஆம் அடுத்த வருடம் எங்கள் நட்பு வெள்ளி விழா காண்கிறது.


அன்பு தோழி பத்மஜா இது உனக்காக.....


இப்பொழுது பதிவுலகம் எனப்படுவது எனக்கு நட்பு உலகமாக தெரிகிறது.

முன் பின் அறிமுகம் இல்லதாவர்கள் கூட எழுத்தின் மூலம் அறிமுகமாகி சிறந்த நண்பர்களாகி, மூத்தவர்,இளையவர் என்று பாரபட்சம் பார்க்காமல்,கர்வம் ஏதுமில்லாமல் பழகும் தமிழ் நட்பு.... 

இந்த நட்பு இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்....

-------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, ஜூலை 15, 2011

மைசூர் சுற்றுலா.....5 ( CITY OF PALACES-MYSORE) நிறைவு பகுதி

தெய்வ தரிசனம் எல்லாம் முடித்துக்கொண்டவுடன்,CITY OF PALACES என்று அழைக்கப்படும் மைசூர்..

மைசூர் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது அந்த பிரம்மாண்டமான அரண்மனை,கே.ஆர்.எஸ்.அணை, இரண்டும் தான்.






கே.ஆர்.எஸ்.என்று அழைக்கப்படும் கிருஷ்ணராஜசாகர் அணை சுமார் 90 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது.இந்த அணை கட்டப்பட்டதிலிருந்து திறக்கப்படும் வரை கட்டுமான பணிகளில் முக்கிய பங்கு வகித்தவர் மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வரைய்யா,இந்தியவின் தலை சிறந்த பொறியாளர்..இவர் 1912 முதல் 8 வருடங்கள் மைசூர் அரசின் திவானாக பணியாற்றினார்.இவர் திவானாக பணி புரிந்த காலத்தில் மைசூரின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்தார்.இதனால் இவர் “மாடர்ன் ஸ்டேட் ஆஃப் மைசூர்” இன் தந்தை எனவும் சொல்லப்படுகிறார்.

கே.ஆர்.எஸ்.அணையின் அருகில் உள்ள “ பிருந்தாவன் கார்டன்” எனப்படும் தோட்டம் உள்ளது. இது 10 வருடங்களுக்கு முன் இருந்த மாதிரி இப்பொழுது இல்லை.தோட்டத்தின் எழில் மிக குறைந்து விட்டது. அதன் அளவையும் பாதியாக குறைத்து இருந்தார்கள் சுமார் 2 வருடங்களுக்கு முன் நாஙகள் சென்றிருந்த போது. ஆனால் அங்கு நடத்தப்படுகிற (“dancing fountain show" ) நடனமாடுகிற நீர்விழுச்சி காட்சி மிகவும் அருமையாக உள்ளது. இசைக்கு ஏற்ப அசையும் நீர்விழுச்சி மிகவும் அழகாக உள்ளது.

மைசூர்... city of palaces  என்று சொல்லுவதர்க்கு ஏற்ற மாதிரி பல கட்டிடஙகள் அமைந்துள்ளன.
Mysore city corporation
Mysore DC Office
Mysore DC office
Mysore Railway Station
Mysore station

Mysore Law Courts
mysore law courts

Crawford Hall Mysore
crawford hall
மைசூர் அரண்மனை மிகவும் அழகும் கம்பீரமும் வாய்ந்தது..தற்போதுள்ள அரண்மனை 1897ல்கட்ட தொடங்கி 1912ல் முடிக்கப்பட்டது. விலை உயர்ந்த தேக்கு மற்றும் பெல்ஜியம் கண்ணாடிகள் உபயோகி்த்து கட்டப்பட்டுள்ளது.முகப்பு பகுதியில் உள்ள தர்பார் மண்டபம் மிகவும் அற்புதமாக இருக்கும்.
அரண்மனையின் உள்ளே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ஒவியங்கள் கண்ணை கவரும் வண்ணம் உள்ளது. அரசர்களின் சிம்மாசனங்கள், தசரா சமயத்தில் அவர்கள் உலாவரும் பல்லக்கு எல்லாம் பார்வைக்கு உள்ளது(அரண்மனை உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை நாம் கொண்டு செல்லும் புகைபட கருவிகளுக்கு தனி லாக்கர் உள்ளது .அதில் வைத்துவிட்டு செல்லவேண்டும்.) 

அரண்மனையின் உள்ளேயே பல கோவில்கள் கட்டப்பட்டு இருக்கிறது.ஆஞ்ஜனேயஸ்வாமி கோவில், கணேசர் கோவில்,லக்‌ஷ்மிநாராயணஸ்வாமி கோவில்....................

Lakshmiramana Temple
Lakshminarayanaswamy temple.

Prasanna Krishna Swamy
Prasanna krishnaswamy temple
Varahaswamy Temple
Varahaswamy temple

தசரா சமயத்தில் ஊர் முழுவதும் திருவிழா கோலம்தான். தினசரி கலைவிழாக்கள் ஊர்வலங்கள் என்று அமர்க்களமாக இருக்கும்.
main entrance of palace at the time of dasara



Mysore palace at the time of Dasara.
அரண்மனையி உள்ளே உள்ள கோவில்
அடுத்ததாக புகழ்பெற்ற மைசூர் zoo .white tiger  என்கிற வெள்ளை நிற புலி இந்தியவில் சில உயிரியல் பூங்காக்களில்தான் பாதுகாக்கப்படுகிறது.அந்த சிறப்பு மைசூருக்கும் உண்டு.

White Tiger in Mysore Zoo

இதை தவிர மேலும் பல காட்டு விலங்குகள், பறவைகள்,யானை காண்டா மிருகம் போன்றவற்றை கண்டு ரசிக்கலாம்..

மைசூர் நகரை சுற்றிபார்த்துவிட்டு அடுத்து செல்லவேண்டியது அருகில் இருக்கும் சாமுண்டி ஹில்ஸ். இங்கு சிறு மலைமேல் உள்ள சாமுண்டி தேவி கோவிலை பார்த்துவிட்டு கீழே இறங்கி வரும் போது புகழ் பெற்ற மிகப்பெரிய நந்தியை காணலாம்.
சாமுண்டி தேவி கோவில்








இந்த நந்தி இந்தியாவிலேயே 3 வது பெரிய நந்தியாகும்.

முந்திய பதிவுகளில் நான் எழுதிய கோவில்கள் மற்றும் மைசூர் அகியவற்றை 2 அல்லது 3 நாட்களில் சென்று ரசிக்கலாம்.வாரக்கடைசியில் உல்லாசத்திற்க்கும் தெய்வ தரிசனத்துக்கும் ஏற்ற இடம் மைசூர்.

இத்தனை பதிவுகளில் என்னுடன் சேர்ந்து மைசூரை சுற்றிய உங்கள் அனைவருக்கும் நன்றி..


----------------------------------------------நிறைவு---------------------------------------------------

திங்கள், ஜூலை 11, 2011

மைசூர் சுற்றுலா.....4( ஆதி ரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கப்பட்டிணம்.)

ஆதிரங்கம் எனப்படும் ஸ்ரீரங்க பட்டிணம்..

பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் வழியில் மைசூருக்கு மிக அருகில்  (மைசூருக்கு சுமார் 20 கிமி முன்னதாக) இருக்கிறது இந்த வரலாற்று சிறப்பு பெற்ற ஊர்.

ஸ்ரீரங்க பட்டிணம் என்றாலே ஹைதரலி மற்றும் அவர் மகன் திப்பு சுல்தான் நினைவுக்கு வருவார்கள்.
அந்த மொஹலய அரசர்கள் ஸ்ரீரங்க பட்டிணத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்துவந்ததை எல்லோரும் அறிவோம்.அவர்கள் மொகலயர்களாக இருந்த போதிலும் இக்கோவிலுக்கு செய்த திருப்பணிகள் மகத்தானது.

ஊருக்குள் செல்லும் வழியில் காணப்படும் கோட்டை மதில்சுவர் மிகவும் சிதிலமடைந்து உள்ளது.




 அதை கடந்து சென்றால் எதிரில் கோவிலின் கம்பீரமான கோபுரம் நம்மை அழைக்கிறது.







திருச்சிக்கருகிலுள்ள ஸ்ரீரங்கத்தை போலவே ஸ்ரீரங்கபட்டிணமும் ஒரு தீவுதான்.
ஊரை சுற்றி காவிரி ஆறு .....

கிழக்கு பகுதியில் காவிரி ஆறும், மேற்கு பகுதியில் அதன் கிளையான பஷ்சிம வாகினியும் ஒடுகிறது.

சயன திருக்கோலத்தில் ரங்கநாதர், தாயார் ரங்கநாயகி..பெருமளை பார்த்தவுடன் ஸ்ரீரங்கத்தில் பெரியபெருமாளை சேவிப்பது போலவே இருக்கும்.

ரங்கநாதரை தரிசித்துவிட்டு அருகிலேயே ஓடும் காவிரி ஆற்றுக்கு சென்று பார்க்கலாம். படித்துறை இருக்கிறது. காவிரி மனதை கொள்ளை கொள்கிறது.

Northern part of Kaveri river

pashchima vahini


pashchima vahini





மைசூர் சமஸ்தானம் 12ம் நூற்றண்டின் முடிவில் யதுராயா என்பவரால் உருவாக்கப்பட்டது.மைசூரும் விஜய நகர சாம்ராஜ்யத்திற்க்கு உட்பட்டு இருந்தது.ஆனால் யதுராயருக்கு பிறகு உடையார்கள் சமஸ்தனத்தை மெதுவாக விரிவு படுத்தினார்கள்.

1610 ம் ஆண்டில் 9 வது அரசர் ராஜா உடையார் என்பவர் ஸ்ரீரங்க பட்டிணத்தை கைப்பற்றினார்.அப்பொழுது அந்த பகுதியில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியாக இருந்தவர் திருமலை எனப்பட்ட ஸ்ரீரங்கராயர்.மைசூர் அரசர் அப்பகுதியை கைப்பற்றியதால் ஸ்ரீரங்கராயர் தம் இரு மனைவிகளையும் அழைத்துக்கொண்டு தலைக்காடு என்கிற இடத்துக்கு போய்விட்டார்.

அவருடைய இரு மனைவிகளில் அலமேலம்மாள் என்பவர் ஸ்ரீரங்க பட்டிணம் கோவிலின் ஸ்ரீரங்கநாயகி தாயாரின் மேல் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.
அவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தன்னிடம் இருந்த விலைமதிக்க முடியாத நகைகளை ரங்கநாயகி தாயருக்கு அணிவித்து மகிழ்வார். தலகாடு  சென்ற ரங்கராயர் உடல்நிலை பாதிப்படைந்து இறந்துவிட்டார்.

அலமேலம்மாளுக்கு நகைகள் தேவைப்படாது என கோவில் அதிகாரிகள் ஸ்ரீரங்கபட்டினத்தை கைபற்றியிருந்த ராஜா உடையரிடம் அந்த நகைகளை மீட்டு தருமாறு கேட்டனர். ராஜாவும் சில தூதுவர்களை அலமேலம்மாவிடம் அனுப்ப, அலமேலம்மாள் மிகவும் விலை உயர்ந்த முத்து மற்றும் ரத்தினம் பொருத்தப்பட்ட மூக்குத்தியை மட்டும் கொடுத்தனுப்பி பிற நகைகளை கொடுக்க மறுத்துவிட்டார்.

ஆனால் அந்த நகைகளால் விதவையாகிவிட்ட அவருக்கு உபயோகமில்லை என் கருதி ராஜா அதை கைப்பற்று்வதர்க்கு தனது சிறு படையை அனுப்பினார்.
நகைகளுக்காக பெண் என்றும் பாராமல் தன்மீது படை எடுக்கும் மைசூர் அரசரின் மீது கோபம் கொண்ட அலமேலம்மாள், 3 சாபஙகளை கொடுத்துவிட்டு நகைகளுடன் காவிரி ஆற்றில் குதித்து உயிரைவிட்டார்.

அந்த சாபங்கள்:

தலக்காடு புல் பூண்டு முளைக்காத மணல் பகுதியாகட்டும்,
மாலங்கி என்கிற இந்த அழகான மடு உபயோகப்படாத நீர்சுழி ஆகட்டும்,
இனி மைசூர் அரசுக்கு வாரிசு இல்லாமல் போகட்டும்..

இந்த சாபங்களை கேட்ட மைசூர் ராஜா மிகவும் வருந்தி தங்கத்தினால் அலமேலம்மாவிற்க்கு ஒரு சிலை செய்து தமது அரண்மனையில் வைத்து வழிபட்டார் .இன்றும் மைசூர் அரச குடும்பத்தினர் அச்சிலையை வழிபடுகிறார்கள்..


இவை மூன்று சாபங்களும் இன்றுவரை நிவர்த்தியாகாமலே உள்ளது என்று சொல்லப்படுகிறது.

தலக்காடு இன்றும் மணல் பிரதேசமாக இருக்கிறது. குறிபபிட்ட சில இடங்களில் மரம் செடிகள் எதுவும் வளருவதிலை என சொல்லப்படுகிறது.

மலங்கி என்கிற இடத்தில் காவிரி ஆறு மிகவும் அதிக அழமாக இருக்கிறது.

 அலமேலம்மாவின் சாபத்தின் காரணமாக மைசூர் அரசுக்கு நேரடி ஆண் வாரிசுகள் இருப்பதில்லை. தத்து எடுத்துக்கொண்டவர்களையோ அல்லது அரச குடும்பத்தை சார்ந்தவர்களையோ ராஜாவாக நியமிக்க வேண்ட்டியுள்ளது,


தலக்காடு



 இவைகள் இன்று வரை உண்மையாக உள்ளது.

அலமேலம்மாவின் சாபத்திற்க்குள்ளான இந்த ராஜா உடையார்தான் இப்பொழுதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் தசரா விழாவை ஆரம்பித்து வைத்தார்.மேலும் திருநாரயணபுர பெருமாளுக்கு புகழ்பெற்ற வைரமுடி (அல்லது ராஜாமுடி) யையும் அளித்தார்.

அலமேலம்மாள் கொடுத்தனுப்பிய மூக்குத்தி இன்றும் ரங்கநாயகி தாயாரின் திருமுகத்தில் காணலாம்.

இங்குள்ள சரித்திர புகழ் பெற்ற சில இடங்கள்..



மஸ்ஜித்-இ-ஆலா அல்லது ஜமியா மஸ்ஜித்.
தாரியா தொளலத் பாக் எனப்படும் திப்புசுல்தானின் கோடை அரண்மனை



கும்பாஸ் எனப்படும் திப்புசுல்தான் மற்றும் அவரின் பெற்றோர் அகியவரின் சமாதி


திப்புசுல்த்தான் உடல் கிடைத்ததாக சொல்லப்படும் இடம்.
இவ்வாறு சரித்திரம் மற்றும் ஆன்மீக புகழ் பெற்ற இடமான ஸ்ரீரங்க பட்டிணத்தை பார்த்துவிட்டு நேராக CITY OF PALACES என்று அழைக்கப்படும்
மைசூர்... அடுத்த பதிவில்..........