வெள்ளி, ஜூலை 08, 2011

துணுக்கு.....



.

  அந்த 8 வயது சிறுவன் மிகுந்த சோகத்துடன் தோட்டத்தில் குழி வெட்டிக்கொண்டி இருந்தான்.

மதில் சுவருக்கு அந்தப்பக்கத்திலிருந்து எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டு பெண்மணி:

 “கண்ணா என்ன செய்துகொண்டு இருக்கிறாய்”

 “குழி தோண்ட்டிக் கொண்டுயிருக்கேன் ஆண்ட்டி”

“ எதுக்குப்பா குழி”

“என்னோட கோல்டு பிஷ் செத்துப்போயிடுத்து அதை புதைப்பதுக்குதான்”


 “அட பாவமே”
 “அது சரி உன் மீன் சின்னது தானே அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய குழி”

 “ஆமாம் ஆண்ட்டி மீன் சின்னதுதான் ஆனா அது இப்ப உங்க வீட்டு பூனையோட வயத்துல இல்ல இருக்கு!!”







-------------------------------------------------------------------------------------------------------------







வியாழன், ஜூலை 07, 2011

மைசூர் சுற்றுலா.....3 ( பிரம்ம ராக்ஷசனை விரட்டிய நரசிம்மஸ்வாமி)



தொண்டனூர் அல்லது தொன்னூர்

                   இது மேலக்கோட்டையிலிருந்து பாண்டவபுரா என்கிற ஊருக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு அழகான ஏரி..

                    ஸ்ரீ ராமானுஜர் இந்த பகுதியில் தங்கியிருந்த காலத்தில் இந்த ஏரியில்தான் ஸ்நானம் செய்து அங்கு கிடைத்த மண்ணை (திருமண்) இட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது...மேலகோட்டை திருமண்ணுக்கு சிறப்பு பெற்றது.




                   இந்த ஏரி ஆழமானது,அதனால் உள்ளே இறங்கி போகாமல் படிதுறையிலிருந்த படியே ஏரியை தரிசித்துவிட்டு ஜலத்தை எடுத்து தலையில் தெளித்துக்கொள்ளலாம். அருகில் ஏரியின் கறை மீது யோக நரசிம்மர் கோவில் உள்ளது.



யோக நரசிம்மர் கோவில் ,தொண்டனூர்.








yoga_nrusimha_and_udayavar_temple
தொண்டனூர் யோக நரசிம்மர்.






ஸ்ரீ ராமானுஜர் இங்கு தங்கியிருந்த காலத்தில்,

                  இந்த பகுதியின் அரசன் “பிட்டிராஜன்” என்பவர் ஜயின மதத்தை சேர்ந்தவன்.அவனுடைய மகளை ஒரு பிராம்ம ராக்‌ஷசன் பிடித்திருந்தது. ராஜா பல கோவில்களுக்கு சென்றும் அந்த பெண்ணுக்காக பிரார்தனை செய்தும் அவளுக்கு குணமாகவில்லை,ராமானுஜர் வந்திருப்பதை கேள்விபட்ட பிட்டிராஜன் அவரை காண தன் மகளுடன் வந்து அவரிடம் நிலைமையை கூற ராமானுஜரும் அந்தப்பெண்னை தொண்டனூர் ஏரியில் ஸநானம் செய்துவிட்டு யோக நரசிம்மரை தரிசனம் செய்யச்சொன்னார். அவரும் அப்படியே செய்து பிரம்மராக்‌ஷசனிடமிருந்து விடுபட்டார்.

                  அதனால் சந்தோஷம் அடைந்த ராஜா ஜயின மதத்திலிருந்து வைஷ்ணவனாக மாறி தன் பெயரை , “விஷ்ணுவரதன்” என்று மாற்றிக்கொண்டான். அதனால் கோபம் அடைந்த 1000 ஜயின துறவிகள் ராமானுஜரை வாதப்போருக்கு அழைத்தனர்.ராமானுஜரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.


                 ஆனால் அந்த துறவிகள் அவரை எப்படியாவது தோற்க செய்ய வேண்டும் என தாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கேட்க்கும் கேள்விகளுக்கு ராமனுஜர் பதில் அளிக்க வேண்டும் என்றனர். ராமானுஜர் அதற்க்கும் ஒப்புக்கொண்டு தனக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு திரையை வைத்து வாதப்போருக்கு தயார் ஆனார். ஜயின துறவிகள் ஒரே சமயத்தில் கேள்வி கேட்க அனைவருக்கும் ஒரே சமயத்தில் ராமனுஜர் பதில் அளித்தார். அவர்கள் ஆச்சிரியமடைந்து திரையை நீக்கி பார்த்தனர். திரைக்கு பின்னால் ராமனுஜர் ஆதிசேஷனாக அமர்ந்திருப்பதை பார்த்த  உடன் அவர்கள் ராமானுஜர் ஆதிசேஷனின் அவதாரம் என்பதை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கோரினார்கள். 

                      இந்த கோவிலில் தீர்த்தம் கொடுத்த பிறகு (சாதாரணமாக மற்ற கோவில்களில் இருப்பது போல) சடாரி வைப்பதற்க்கு பதிலாக மரத்திலான ஒரு கழியை(சிறு தடி போன்றது) வைக்கிறார்கள். பிட்டிராஜன் மகளுக்கு அந்த கழியை வைத்ததால் பிரம்மராக்‌ஷசன் அவளைவிட்டு அகன்றதால் இந்த கழியை நம் தலையில் வைப்பதால் சகல பாவங்களும் நீங்குவதாக நம்பப்படுகிறது.

                நரசிம்மரை தரிசனம் செய்துவிட்டு வந்தால் அருகிலேயே நம்பி நாரயணர் கோவிலும் அதற்கு எதிரிலேயே பார்த்தசாரதி எனப்படும் வேணுகோபாலன்,கோவிலும் இருக்கிறது.


தொண்டனூர் நம்பிநாரயணர் கோவில்

               நம்பி நாரயணர் கோவில் மிகவும் அழகாக, பேளுர் கோவிலை நினைவு படுத்தும் விதமாக உள்ளது.நம்பி நாராயணர் கைகளில் சங்கும் சக்கரமும் இடமாறி இருப்பதை காணலாம். தாயார் அரவிந்தவல்லி...


தொண்டனூர் வேணுகோபாலஸ்வாமி கோவில்

100_2438.jpg

வேணுகோபாலஸ்வாமி ருக்மிணி சத்யபாமா 
தாயாருடன்

                  எதிரிலேயே வேணுகோபாலஸ்வாமி கோவில் இங்கு பெருமாள் பர்ர்த்தசாரதி ருக்மிணி சத்யபாமா ஆகிய இரு தாயார்களுடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காணப்படுகிறார். ......
                   இரண்டுமே மிக புராதனமான கோவில்கள் ஆனால் அரசு நிதி உதவி இல்லாததால் சரியான பராமரிப்பு செய்யப்படவில்லை.


அடுத்த பதிவில் ஸ்ரீரங்கபட்டிணம்......

செவ்வாய், ஜூலை 05, 2011

மைசூர் சுற்றுலா.....2 (திருநாராயணபுரம் எனப்படும் மேலக்கோட்டை)

அடுத்து நாம செல்ல இருப்பது திருநாராயணபுரம் எனப்படும் மேலக்கோட்டை.


இக்கோவிலுக்கு பெங்களுர்-மைசூர் ஹைவேயில் மாண்டியா என்கிற ஊரிலிருந்து சுமார் 30 கிமி உள்ளே (நாகமங்கலா போகும் வழியில்) செல்ல வேண்டும்.

.இந்தியாவின் சக்கரை மற்றும் வெல்ல உற்பத்தியில் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம் முக்கியமான பங்கு வகிக்கிறது..அதனால் மாண்டியாவிலிருந்து மேலக்கோட்டைக்கு செல்லும் வ்ழியெல்லாம் கரும்பு தோட்டமும் சிறு சிறு வெல்லப்பாகு காய்ச்சப்படும் ஆலைகளையும் காணலாம் ..உருண்டையான பாகு வெல்லத்தை காட்டிலும்,சதுரமாக காணப்படும் அச்சு வெல்லமே இங்கு பெரும்பாலும் கிடைக்கிறது..

கரும்பு தோட்டம் ,வயல்வெளி மறறும் அங்கு காணப்படும் நீர்நிலைகள் பார்த்துக்கொண்டே சென்றோமானால் மாண்டியவிலிருந்து 1/2 மணி நேரத்தில் மேலக்கோட்டையை அடைந்து விடுகிறோம்..

ஊரின் உள்ளே நுழையும்போதே அழகிய சிறு குன்றும் அதன் மேல் ஒரு கோட்டை கோவிலும்,குன்றின் அடிவாரத்தில் சகல பாவங்களை தீர்க்கும் கல்யாணி புஷ்கரணியும் காணப்படுகிறது..அந்த குன்றின் மேல் கோட்டை கோவிலில் நரசிம்ஹ பெருமாள்.
.

முதலில் திருநாராயண பெருமாளை தரிசித்துவிட்டு வருவோம்......
இக்கோவிலின் மூலவர் திருநாரயணன்.இவருக்கு செலுவநாரயணன் என்கிற திருநாமமும் உண்டு. தாயார் யதுகிரி நாச்சியார்.பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
இங்கு உற்சவ மூர்த்தியான பெருமாளுக்கு செலுவபிள்ளை மற்றும் சம்பத்குமார் என்ற திருநாமங்கள் வழங்கப்படுகிறது..இந்த உற்சவ மூர்த்தியை அவதார காலத்தில் ராமரும், கிருஷ்ணரும் வழிபட்டதாகவும்
அதனால் அவருக்கு ராமபிரியா என்ற பெயரும் வழங்கப்படுவதாகவும் தெரிகிறது.


சுமார் 1100 வருடங்களுக்கு முன்னால் வைஷ்ணவர்களின் ஆச்சாரியரான ஸ்ரீ ராமானுஜர் இப்பகுதியில் பல ஆண்டு காலம் தங்கியிருந்தார்.
அச்சமயம் தொலைந்ததாக சொல்லப்பட்ட இக்கோவிலின் உற்சவமூர்த்தி,டெல்லியை ஆண்டு வந்த முகலாய அரசரின் அரண்மனையில் இருப்பது தெரிந்து அங்கு சென்று பார்க்க,பெருமாளை அந்த அரசரின் மகள் வைத்து விளையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது.ராமனுஜர் அந்தப்பெண்னிடம் பெருமாளை தரும்படி கேட்க அவள் கொடுக்க மறுத்துவிட்டாள்.உடனே ராமனுஜர் பெருமாளை பார்த்து “ செல்லப்பிள்ளை வா” என்று அழைக்க பெருமாளும், “சல்! சல்!” என கொலுசு ஒசை படுத்த நடந்து ராமானுஜரிடம் வந்ததாக சொல்லப்படுகிறது. பெருமாளை பிரிந்து இருக்கமுடியாத அந்தப்பெண்னும் அவருடனே மேலக்கோட்டைக்கு வந்து விட்டதகவும் அவர் அதன் பின்னர் துலுக்க நாச்சியார் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது....

கோவில் தமிழக கட்டிட கலை மாதிரியாக தெரிந்தாலும்,உள்ளே மணடபங்களில் காணப்படும் சிற்பவேலைபாடுகள்,ஹொய்சாலா மற்றும் கிருஷ்ணதேவராயரின் ஆட்சி காலத்தியதாகும்.தாயார் சன்னதியின் முன்னுள்ள மண்டபத்தில் காணப்படும் சிற்பவேலைபாடுகள் மனதை கவர்கின்றது.(புகைபடம் எடுக்க அனுமதி இல்லை,அதனால் படம் இணைக்க முடியவில்லை)

இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய உற்சவம் வைரமுடி சேவையாகும்....(இது பற்றி வேறு பதிவில் விவரிக்கிறேன்.)

.பெருமாளை தரிசனம் செய்த பிறகு நேராக கல்யாணி புஷ்கரணிக்கு செல்லுவோம்..



இந்த புஷ்கரணி சகல பாபங்களையும் நீக்க வலிமையுள்ளது. அதனால் அதன் நீரை தலையில் சிறிது தெளித்துக்கொண்டு அதை சுற்றியுள்ள மணடபங்களையும் அதில் காணப்படும் சிற்பங்களையும் பார்த்து ரசித்துவிட்டு அங்கு அந்த குன்றின் மேல் உள்ள யோக நரசிம்மர் கோவிலுக்கு செல்லலாம்..


கல்யாணியின் கரையிலேயே அதற்கான படிகள் துவங்குகின்றது,இல்லாவிட்டால் பாதி தூரம் வரை வண்டியில் செல்ல பாதை உள்ளது,அதுவரை வண்டியில் சென்று அங்கிருந்து படி ஏறிச்செல்லவும் முடியும்.
நரசிம்மஸ்வாமி யோகத்தில் இருந்து யோக நரசிம்மராக அருள் பாலிக்கும் கோவில் ஒரு கோட்டையாகும்.
இங்குள்ள நரசிம்மரை ப்ரஹல்லாத மஹாரஜா பிரதிஷ்டை செய்ததாக நம்பப்படுகிறது.
கிருஷ்ணதேவரயர் இக்கோவிலுக்கு திருப்பணி செய்ததகவும் கூறப்படுகிறது

மேலக்கோட்டையில் உள்ள சில இடங்கள்....

ராயர் கோபுரம்




 அக்காதங்கி குளம்



Melkote Akka Thangi Kola




தனுஷ்கோடி தீர்த்தம்




அடுத்த பதிவில் தொன்னுர்(அ) தொண்டனூர் ஏரி மற்றும் அதன் அருகில் இருக்கும் கோவில்கள்..

ஞாயிறு, ஜூலை 03, 2011

மைசூர் சுற்றுலா.....1 (குழந்தை வரம் அருளும் நவநீத கிருஷ்ணர்)

நாங்கள் பெங்களுரில் இருப்பதால், ஊரிலிருந்து வரும் எங்கள் உறவினர்களை நாங்கள் முதலில் அழைத்து செல்லும் இடம் மைசூர் தான்.

மைசூர் என்றாலும் நேரடியாக மைசூர் சென்று அரண்மனை மற்றும் பிற இடங்களை சுற்றி பார்ப்பது மட்டுமல்லாது, பெங்களூரிலிருந்து கிளம்பி வழியில் உள்ள சில புராதனமான கோவில்களுக்கும் செல்லுவோம்..

அப்படி நாங்கள் வழக்கமாக செல்லும் முதல் கோவில்..

அப்ரமேய ராமசாமி கோவில்..

இது புரந்தரதாசரால் பாடல் பெற்ற கோவில்
 ( “ஜகதோதாரண”வில் அப்ரமேயர் பற்றி வரும்.)

இது பெங்களுர்-மைசூர் ஸ்டேட் ஹைவேயில் சென்னபட்டனா என்ற ஊருக்குஅருகில் உள்ள தொட்ட மல்லூர் என்ற ஊரில் உள்ளது. இந்த கோவிலின் முக்கிய சன்னதி அப்ரமேயர் எனப்படும் ராமசாமி சன்னதி. தாயார் அரவிந்தவல்லி தாயார்.

முதலில் தாயார் சன்னதி..

Sri Navaneetha Krishnar Temple - Dodda mallur
அரவிந்தவல்லி தாயார் தனி சன்னதியில் சதுர் புஜங்களுடன்,இரண்டு கைகளில் தாமரை புஷ்பங்களுடனும் தாமரை மலர் மீது அமர்ந்து மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடன் காட்சியளிக்கிறார்.அவரை சேவித்துவிட்டு 
அப்ரமேயர் எனப்படும் ராமசாமி சன்னதிக்கு செல்வோம்..Sri Navaneetha Krishnar Temple - Dodda mallur

ராமர் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.அவருடையது சாளக்கிராம மூர்த்தி.பெருமாளும் சதுர்புஜங்களுடன் காட்சி அளிக்கிறார்.மேல் கைகளில் சங்கு,சக்கரத்துடனும், மூன்றாவது கரத்தில் கதையுடனும்,நான்காவது கரத்தில்அபய முத்திரையுடனும் அருள் பாவிக்கிறார்...

இந்த கோவிலில் முக்கிய சன்னதி அப்ரமேயரக இருந்த போதிலும், பக்தர்கள் அதிகமாக வருவது இங்குள்ள நவனீத கிருஷ்ணன் சன்னதிக்குதான்..அதற்கு ஒரு சிறப்பு காரணம் உள்ளது.Sri Navaneetha Krishnar - Dodda mallur

சாளக்கிராம மூர்த்தியாக தவழ்ந்த ரூபத்தில் கையில் வெண்ணை உருண்டையுடன் காட்சியளிக்கும் அழகான குழந்தையான நவனீத க்ருஷ்ணனிடம் குழ்ந்தை இல்லாதவர்கள் சங்கல்பம் செய்து கொண்டால் குழந்தை வரம் அருளுகிறார் குட்டி கண்ணன்...குழந்தை பிறந்ததும் வந்து இங்கு கடைகளில் விற்கப்படும் சிறிய தொட்டிலை வாங்கி க்ருஷ்ணன் சன்னிதியில் கட்டிவிட்டு செல்கிறார்கள்...

இந்த சன்னதி வேத வியாசரால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லுகிறார்கள்..

இங்கு கோவில் பட்டர்கள் சன்னதியில் அழகாக தரிசனம் சைவிப்பார்கள்.. குழந்தை கிருஷ்ணரின் கொலுசு,கையில் வெண்ணை, இடுப்பில் அரைஞாண் மிகவும் அழகாக சாளகிராமதிலேயே காணப்படுவது மிகவும் சிறப்பு.

சுமார் 150 வருடங்களுக்கு முன், அச்சமயம் மைசூரின் அரசர் தம் குடும்பத்தினருடன் அப்ரமேயரை தரிசிக்க வந்தபொழுது இந்த சாளக்கிராம கிருஷ்ணரின் அழகில் மயங்கி அவரை தன்னுடைய அரண்மனைக்கு எடுத்துச்சென்றுவிட்டாராம்.அவருடைய அதிகாரிகள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்காமல் எடுத்துச்சென்றிருக்கிறார்.

அன்றிரவே பெருமாள் ராஜாவின் கனவில் வந்து தன்னை திருப்பி கோவிலிலேயே வைத்திவிட வேண்டும் என்றும் இல்லவிட்டால் அரண்மணைக்கு ஆபத்து நேரும் என்று சொல்லியும் ராஜா கேட்கவில்லை..
மறு நாளே அரண்மனையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு பொருள் நஷ்டம் எற்பட்டது.

அப்பொழுதுதான் ராஜா கிருஷ்ணனுடைய மகிமையை உணர்ந்து கிருஷ்ணவிக்ரகத்தை கோவிலுக்கு திருப்பி அனுப்பியதுடன் கோவில் திருபணிகளுக்கும் பொருளுதவி செய்தார் என ஒரு கதையும் சொல்லப்படுகிறது.........

அடுத்த பதிவில் திருநாராயணபுரம் என்று அழைக்கப்படும் மேலக்கோட்டை...