சனி, நவம்பர் 26, 2011

ஐஸ்வரியா ராயும் ஆயிரம் ரூபாய் தங்கமும்.....

நவம்பர் 14 ம் தேதி, என் வீட்டு வேலை செய்யும் ரத்னா,வேலைக்கு வரும்போதே மிக பரபரப்புடன் வந்தார்.அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:-


 “அம்மா டி.வி. போடுங்க ஐஸ்வரியாராய்க்கு குழந்தை பிறந்திடுச்சா பார்த்து சொல்லுங்க”.

 “எதுக்கு ரத்னா”? என்ன குழந்தை அப்படீன்னு தெரிஞ்சுக்கணுமா”?

  “ஆமாம் மா,அவங்களுக்கு பெண் குழந்தை பிறந்துதுனாக்க தங்க ஒரு கிராம் 1000 ருபாய்க்கு கொடுக்கறாங்களாம், வட்டிக்காரர் கிட்ட கேட்டு பணம் வாங்கிக்கணும் இல்லைன்னா, வீட்டுல இருக்க எல்லாத்தையும் கொண்டு வச்சாவது கடன் வாங்கி நந்தினிக்கு (அவரின் 13 வயது பெண்) ஒரு 15/20 கிராம் வாங்கிவிட வேண்டும்”

“என்ன ரத்னா? நீ என்ன சொல்லற? தங்கம் விக்கற விலையில அது யாரு அது 1000 க்கு கொடுப்பது”?

 “எங்க வீட்டு கிட்ட பேசிக்கிட்டாங்கம்மா.எல்லோரும் வாங்கப் போறாங்களாம்”

 “அதெல்லாம் இருக்காது ரத்னா யாராவது கதை கட்டி விட்டிருப்பாங்க.தங்கம் விக்கற விலையில அவ்வளவு குறைச்சலாக யாரும் கொடுக்க மாட்டாங்க”


 “இல்லம்மா!!  நீங்க வீட்டுக்குள்ளேயே இருக்கீங்களா அதனால உங்களுக்கு ஒண்ணும் தெரியலை. !!!!!!!!!!!!!!!!.  நிஜம்மா கொடுக்கறாங்களாம், நீங்களும் அண்ணங்கிட்ட சொல்லி ஏதாவது வாங்கிக்கோங்க ”.


  “ரத்னா நீ பாட்டுக்கு வட்டிக்கு கடன் எல்லாம் வாங்காத,எனக்கென்னமோ இது புரளின்னுதான் தெரியறது. எவனாவது வட்டிக்கடைக்காரன் உங்களை எல்லாம் ஏமாத்த கிளப்பி விட்டிருப்பான்.நீங்களும் வட்டிக்கு பணத்த வாங்கி, தங்கமும் வாங்காம பணத்தையும் செலவழிச்சு நஷ்டப்பட வேண்டிதான். அதனால நான் சொல்லறதை கேளு.2 நாள் பொறு, அவங்களுக்கு குழந்தை பிறக்கட்டும், அப்ப என்ன ஆகிறதுன்னு பார்க்கலாம்”

  “சரிம்மா” என்று சொன்னாலும்,

 இவங்களுக்கு ஒண்ணுமே தெரியலையே, இவங்க படிச்சவங்க இல்லை போல இருக்கு என்கிற மாதிரி என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார்.





அவர் மறுநாள் வேலைக்கு வரவில்லை.அதற்கு அடுத்த நாள் வருவதற்குள் எனக்கு மண்டை வெடித்து விட்டது. என்னாச்சோ என்னமோ? ஐஸுக்கு இன்னும் குழந்தை பிறந்த தகவல் வேறு வரவில்லையே, ரத்னா கடன் வாங்கி விட்டாரா? ஏமாந்து போய்விட போகிறார் என்று ஏதேதோ எண்ணங்கள்..

16ம் தேதி காலையில் வந்தார்,வந்தவுடன் நான் உடனே கேட்டேன்

 “கடன் ஏதாவது வாங்கிவிட்டையா ரத்னா? என்னாச்சு தங்கம் கொடுக்கிறார்களா? குழந்தை பிறந்து விட்டதா?"

  "இன்னும் இல்லம்மா. கடன் இப்ப வாங்க வேண்டம் அப்படீன்னு எங்க அத்தை(மாமியார்) சொல்லிருச்சு”

  “ரத்னா மாமியார் சொன்னத கேளு.யாரும் இப்ப தங்கம் விக்கற விலையில ஒரு கிராம் 1000 த்துக்கு கொடுக்க மாட்டாங்க”

  “சரிம்மா, பார்க்கலாம்” என்று நான் சொன்னதை கேட்டு பட்டும் படாமலும் பதில் சொல்லிவிட்டு சென்றார்..


 நான் அறிவுறுத்திவிட்டேன், புரியவில்லையா இல்லை நான் சொல்லுவது  பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை.சரி போகட்டும் எல்லாம் அவள் தலை எழுத்து என்று நான் பேசாமல் இருந்து விட்டேன்.


அன்று சாயந்திரம் ஐஸுக்கு பெண் குழந்தை பிறந்த விவரம் தெரியவந்த உடன், எனக்கு ரத்னா நினைவுக்கு வந்தார். பெண் குழந்தை பிறந்தால்தான் தங்கம் விலை கம்மி என்றும் ஆண் குழந்தை பிறந்தால் ஒன்றும் கிடையாது என்று ரத்னா சொன்னாளே! ஆண் குழந்தையாவது பிறந்திருக்கக் கூடாதோ? எத்தனை பேர்கள் ஏமந்தார்களோ? பாவம்! என்று மறுபடியும் எனக்கு ஏதேதோ  எண்ணங்கள்!!!





மறுநாள் காலை ரத்னா வந்தவுடன் அவரே, “அம்மா நீங்க அன்னைக்கே சொன்னீங்களா? நானும் யோசிச்சேன்.எங்க அத்தை வேற சொல்லிச்சா? அதனால் பெரியவங்களா சொல்லறாங்களே அப்படீன்னு நல்ல வேளை நான் கடன் வாங்கலை.யாரும் அப்படி தங்கம் எல்லாம் கொடுக்கலை.எங்க வீடுங்க இருக்கற பக்கம் யாரோ ஏமாத்தி இருக்காங்க.அப்படி எங்க வீட்டாண்ட இரண்டு பேர் வட்டிக்கு வாங்கிட்டாங்க. சரி தங்கம் கிடைக்கலன்னு பணத்த அப்படியே அன்னைக்கே திருப்பி கொடுக்கலாம்ன்னு போனா,வட்டிக்கடைகாரர் பிடித்த வட்டியை திருப்பி கொடுக்க மாட்டேன்,அடுத்த மாத வட்டியும் கொடு அப்படி இப்படின்னு ஒரே தகராறு பண்ணியிருக்காங்க! அப்பறமா எப்படியோ ஒரு மாத வட்டியோட விட்டாரு.பாவம் அவங்க ஒரு நாள் கூட பணத்தை வச்சுக்கல அதுக்குள்ள 350/400 நஷ்டம் ஆயிருச்சு.”


  “நல்ல வேளை ரத்னா ஏதோ நீயாவது என்பேச்சையும், உன் மாமியார் பேச்சையும் கேட்டியே? பாவம் நஷ்டப்பட்டவங்க, இனிமேலாவது இதையெல்லாம் நம்பாதே! பாரு உங்க மாமியாருக்கு எல்லாம் தெரிந்திருக்கு.”என்றேன்.


  “அதெல்லாம் இல்லைம்மா! அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது, மூணு வருஷத்துக்கு முன்ன ஏதோ கொஞ்சம் பணம் கட்டினாக்க 6 மாசத்தில பாத்திரம் கிரண்டர்,மிக்ஸி எல்லாம் தரேன்னு சொன்னங்களா,அதை நம்பி நான் 4000மும் அவங்க 3000 மும் கட்டி ஏமாந்து போயிடோம் அதுலேர்ந்து அவுங்க பணவிஷயத்துல ஜாக்கிரதையா இருக்காங்க.”.(அந்த அமர்க்களத்தையெல்லாம் அப்பறமா ஒரு நாள் உங்களுக்கு சொல்லறேம்மா இப்ப நேரம் இல்ல என்று சொல்லியிருக்கிறார்.)


  “பாரு ரத்னா,உங்க மாமியார் ஒரு தடவை பட்டவுடன் எவ்வளவு நன்றாக புரிந்து கொண்டு விட்டாங்க! நீயாவது ஏதோ கொஞ்சம் படிச்சவ (7வது வரைக்கும் படித்திருக்கிறாராம்.) உங்க மாமியாரப்பாரு படிக்கலைனாலும் விவரமா இருக்காங்க அவங்கள பார்த்து தெரிஞ்சுக்கோ” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.



இப்படி ஏமாறும் எத்தனையோ பேர்களில் இந்த ஒரு தடவை ஒரு ரத்னா காப்பாற்றப்பட்டார். அவர் சொன்னதிலிருந்து அவர் இருக்கும் இடத்தில் இரண்டு பேர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிரார்கள் என்று தெரிகிறது.நமக்கு தெரியாமல் எத்தனைபேரோ?  இந்த முறை அவரை சற்று யோசிக்கவைத்து உடனடியாக கடன் வாங்காமல் தடுக்க முடிந்தது. மேலும் படிப்பறிவே இல்லாத அவரின் மாமியார் அனுபவத்தால் திருந்தி ஜாக்கிரதையாக இருக்கிறார்.ஆனால் ரத்னா இன்னும் திருந்தினாரா தெரியவில்லையே?  இனிமேலாவது ஏமாறாவது இருப்பாரா? இந்தமுறை ஏதோ எங்கள் பேச்சை கேட்டு பேசாமல் இருந்தார்!!யாரும் ஏதுவும் சொல்லவில்லை என்றால் கட்டாயம் கடன் வாங்கி இருப்பார்.மற்றவர் அனுபவத்திலிருந்து தாம் பாடம் கற்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வருமா? இவர்களுக்கெல்லாம் யார்? எப்படி? விழிப்புணர்வை ஏற்படுத்துவது?


ஒன்று மட்டும் தெரிகிறது -- விழிப்புணர்வு என்பது படிப்பதினால் வருவதில்லை, புரிந்து கொள்வதினால் வருகிறது.






வியாழன், நவம்பர் 24, 2011

சுந்தர காண்டம்--4.


இராவணனின் மிரட்டலுக்கு பயந்த சீதையை திரிஜடையின் கனவு விஷயம் சற்று தேற்றியது. இருந்தும் சீதை தன்னுடைய நிலைமையை நினைத்து மீண்டும் துக்கித்தாள்,என்பது வரை சென்ற பகுதியில் பார்த்தோம்.இனி..........




ஸர்க்கம்--28.  சீதை உயிரைவிட யத்தனித்தது.

சீதை ராவணனுடைய குரூரமான வார்த்தைகளை கேட்டு மிகவும் மன வேதனை அடைகிறார். “ஐயோ! நான் கொஞ்சம் கூட புண்ணியம் செய்யவில்லையே,இவர்களால் இப்படி மிரட்டப்பட்டும் என் உயிர் இன்னும் போகவில்லையே, ஹா.ராமா..சகல பிராணிகளுக்கும் சந்தோஷத்தை அளிக்க வல்லவரே! என்னுடைய துக்கம் உமக்கு தெரியவில்லையா?” என்று அழுது புலம்புகிறாள்.


மேலும் இனி இந்த உயிரை வைத்துக்கொண்டு ஒரு புண்ணியமும் இல்லை என நினைத்து எப்படியாவது உயிரை விட்டுவிடவேண்டும் என முடிவு செய்கிறாள், எப்படி உயிரை விடுவது என யோசிக்கிறார், “விஷத்தை குடித்தாவது,ஆயுதங்களாலாவது உயிரை போக்கிக்கொள்ளலாம்,ஆனால் அவற்றை கொண்டு வந்து கொடுப்பவர் இங்கில்லையே ! எனக்கு இந்த உபகாரம் செய்ய இங்கு யாருமில்லை.எனவே என்னுடைய பின்னலை இந்த மரத்தில் கட்டி அதில் தூக்கு போட்டுக்கொள்ளப்போகிறேன்” என முடிவு செய்கிறாள்.





ஸ்ர்க்கம்--29.  சுபசகுனங்கள்.

இப்படியாக சீதை தனது உயிரைவிட யத்தனித்த போது, பல சுப சகுனங்கள் தோன்றியது. அவை சீதையை இனி துக்கப்பட வேண்டாம் என்று சொல்லுவது போல இருந்ததாம்.இதனால் சற்று மனம் தெளிந்த சீதை சந்தோஷித்தாள்.அப்பொழுது அவள் முகம் சுக்லபக்‌ஷத்தில் சந்திரனால் வரவரக் காந்தி பெற்ற இரவு போல விளங்கியதாம்.






ஸர்க்கம்--30.   அனுமன் சீதையிடம் பேச நிச்சயித்தது.

பராக்கிரம சாலியான அனுமன் ராகஷஷிகளின் பேச்சுக்களையும் திரிஜடையின் ஸ்வப்பனத்தை கேட்டுக்கொண்டிருந்து விட்டு,சீதையிடன் எப்படிப்பேசுவது என்று ஆலோசிக்கிறார். “வானரனான நான் மனுஷ்ய வார்த்தையில் பேசலாமா?அல்லது,வியாகரணலக்‌ஷணங்கள் பொருந்திய சமஸ்கிருத பாஷையில் பேசலாமா?"என்று யோசித்து, மனுஷ பாஷையிலேயே பேசலாம் அதுவும் கோஸஸ நாட்டிலுள்ளவர்கள் பேசும் பாஷயிலேயே பேசுவது நலம், என முடிவு செய்கிறார். பிறகு என்ன பேசுவது என ஆராய்ந்து,ஸ்ரீ ராமச்ந்திரனுடைய சரித்திரத்தை வர்ணிக்கலாம் அதனால் சீதைக்கு தன்னிடம் நம்பிக்கை பிறக்கும் என நிச்சயித்துக்கொள்கிறார்.


ஸர்க்கம்--31.  மாருதி ராம சரித்திரத்தை வர்ணித்தது.






இப்படி தான் எப்படி என்ன பேசுவது,எப்படி பேசுவது என முடிவு செய்து கொண்ட அனுமன்,மரத்தின் தாழ்வான கிளைக்கு வந்த அமர்ந்து கொண்டு ஸ்ரீராம் மூர்த்தியை பற்றி சொல்ல ஆரம்பித்து, தசரதருக்கு ராமர் பிறந்தது, வளர்ந்தது, வில்வித்தை கற்றது, சீதையை திருமணம் செய்து கொண்டது,பிறகு தசரதரின் வரத்தை காப்பாற்ற சீதையுடனும்,தம்பி லக்‌ஷ்மணனுடனும் காட்டிற்கு வந்தது,சீதை காணாமல் போனது எல்லாவற்றையும் கூறுகிறார்.

ராம கதையை கூறிய பிறகு தான் யார் என்பதையும் இலங்கைக்கு சீதையை தேடிவந்ததையும் , சுக்கீரவனுடைய மந்திரி என்பதையும் சீதைக்கு தெரிவிக்கும் விதமாக ராக்‌ஷஷிகளுக்கு தெரியாமல் சீதைக்கு மட்டும் கேட்குமாறு மெல்லிய குரலில் இணக்கமாக எடுத்துரைக்கிறார்.



ஸ்ர்க்கம் --32.  சீதையின் சந்தேகம்.






அனுமானின் வார்த்தைகளை கேட்ட சீதை ராமனால் அனுப்பப்பட்ட தூதன் வந்திருக்கிறான் என்று சந்தோஷம் கொள்கிறாள். மரத்தின் மேல் பார்க்கும் பொழுது வெண்மையான வஸ்திரம் உடுத்தியிருக்கும் அனுமானைப் பார்க்கிறாள். ஆனால் இதெல்லாம் மாயையாக இருக்குமோ என்று நினைத்து மறுபடியும் துக்கம் கொள்கிறாள். இப்படி மாறி மாறி நிஜமா?ஸ்வப்ப்னமா ?என்று தெரியாததாக இருக்கிறதே எனக் கவலைகொண்டாள்.


ஸ்ர்க்கம் --33. சீதை பதில் சொன்னது.




அனுமன் சீதையின் சமீபத்தில் வந்து அவரிடம், தாயே தங்களின் நிலையையும் துக்கத்தினையும் பார்க்கும் பொழுது தாங்களே சீதை என நினைக்கிறேன் என்கிறார். அதற்கு சீதை பூமியில் ராஜசிரேஷ்டர்களுக்குத் தலைவரும்,தசரத சக்ரவர்த்திக்கு நாட்டுப்பெண்ணும், ராகவனுடைய பார்யையும் தாந்தான் என்று கூறுகிறாள். கைகேயிக்கு கொடுத்த வரத்தின் பொருட்டு தசரதரால் ராமன் காட்டுக்கு அனுப்பப்பட்டதும், தானும் லக்‌ஷ்மணனும் அவரை பின்தொடர்ந்ததையும் கூறுகிறாள்.

பிறகு அனுமனிடம் ராமர் எங்கிருக்கிறார்? எப்படியிருக்கிறார் என வினவினாள்.


ஸ்ர்க்கம்--34.  மாருதி ராமனுடைய வரலாற்றை சொன்னது.

சீதை ராமனைப்பற்றி கேட்டதும் அனுமான் ஸ்ரீராகவன் ஷேமமாக இருக்கிறார். தம்பி லக்‌ஷ்மணனும் நன்றாக இருக்கிறார் என் அவர்களுடைய ஷேமங்களைப்பற்றி கூறுகிறார்.




அனுமன் பதில் சொன்னதை கேட்டும் சீதைக்கு இது சொப்பனமா ?அல்லது ராவணனுடைய மாயையா? என்று தெரியவில்லை. அதனால் அவள், அனுமனிடத்தில் பேச மிகவும் பயந்தாள். அவளுடைய மனநிலையை புரிந்து கொண்ட அனுமன், ராமருடைய கல்யாண குணங்களை விவரித்து, “நான் ராவணன் அல்ல ராமதூதந்தான் என்மீது நம்பிக்கை வையுங்கள்” என மதுரமான வார்த்தைகளால் சீதைக்கு எடுத்துரைகிரார்.



ஸ்ர்க்கம்--35. மாருதி ராம்னுடைய வரலாற்றை சொன்னது (தொடர்ச்சி)

அனுமன் இப்படி சொன்னதும் சீதை ராமலக்‌ஷ்மணர்களுக்கும் உனக்கும் எப்படி சம்பந்தம் ஏற்பட்டது? ராமலக்‌ஷ்மணர்களின் அடையாளங்களை விவரமாக கூறு அப்பொழுத்துதான் எனக்கு உன்னிடம் நம்பிக்கை வருமென்கிறாள்.



சீதை இப்படி சொன்னதும் அனுமன் சந்தோஷமாக ராமரின் அங்க அடையளங்களையும், குணநலன்களையும் வானரர்களுக்கும் ராமருக்கும் ஏற்பட்ட சம்பந்தத்தை விவரமாக சீதைக்கு எடுத்துரைக்கிறார். அதுமட்டுமில்லாது, அனுமன் தன்னுடைய தாய் தந்தை பற்றியும் தான் வாயு பகவானுடைய புத்திரன் என்கிற விவரங்களையும் சீதைக்கு சொல்லுகிறார்.





ஸர்க்கம் --36. அனுமன் கணையாழியைக் கொடுத்தது.

அனுமன் இப்படி ராமலக்‌ஷ்மணர்களைப்பற்றி சொல்லிவிட்டு ராமர், சீதைக்கு நம்பிக்கை உண்டாகும் பொருட்டு தன்னிடம் கொடுத்து வைத்த அவருடைய கணையாழியை(மோதிரம்) சீதையிடம் கொடுக்கிறார்.




சீதை அந்த கணையழியை பார்ர்த்தது ராமரையே பார்த்தது போல சந்தோஷிக்கிறாள். மறுபடியும் அனுமனிடம் ராமரை பற்றி கூறும்படி கேட்கிறாள். ராமர் சீதையை பிரிந்து வாடி எப்பொழுதுமே அவள் நினைவுடனே இருக்கும் விவரங்களை அனுமான் தெரிவிக்கிறார்.அந்த விவரங்களை கேட்டதும் சீதைக்கு கவலையும் துக்கமும் மாறி மாறி உண்டயிற்று..


திங்கள், அக்டோபர் 31, 2011

அறிந்து கொள்வோம்---கன்னட ராஜ்ய உத்சவம்.

கர்நாடகாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் முதல் தேதி மிகவும் சிறப்பாக ராஜ்ய உத்சவம் கொண்டாடப்படுகிறது.

1956 ம் வருடம் நவம்பர் முதல் தேதியில் கன்னடம் பேசப்படும் பகுதிகளை இணைத்து கர்நாடகா மாநிலம் தோற்றுவிக்கப்பட்டது.அதிலிருந்து இந்த தேதியை ராஜ்ய உத்சவமாக கொண்டாடுகின்றனர்.

இந்த நாளில் கர்நாடகா முழுவதற்கும் விடுமுறைதான். அரசு அலுவலகங்கள்,கல்வி நிலையங்கள் தனியார் நிறுவனங்கள் அனைத்துக்கும் இந்நாளில் விடுமுறை கொடுக்கப்படுகிறது.

நவம்பர் 1 ம் தேதி -- இந்த நாளினை சிறப்பிக்கும் பொருட்டு அரசு சார்பில் பல விழாக்கள், ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றது.

File:Flag of Karnataka.svg

இந்த மஞ்சள் மற்றும் சிவப்புக்கொடி கன்னட மாநிலத்திற்கான கொடியாகும்.அன்றைய நாளில் இந்தக்கொடி ஊர்வலங்களில் கலந்து கொள்ளும் வாகனங்களை அலங்கரிக்கும்.

கர்நாடக மாநில அரசு,பல துறைகளில் நிபுணர்களாக விளங்குபவர்களுக்கு கர்நாடக ரத்னா என்கிற பட்டம் கொடுத்து கெளரவிக்கிறது.

                   விதான் செளதா.




    விதான்செளதாவின் முன்னால் கலைநிகழ்ச்சிகள்.





விருது பெற்ற சில பிரமுகர்கள்.




 லால்பாக்கில் உள்ள (glass house)


ஊர்வலம்







 
 ‘டொல்லு குனிதா ’எனப்படும் நாட்டுபுற கலை
   நிகழ்ச்சி.


  யக்‌ஷ கானம் எனப்படும் புராதனமான 
  நாட்டுப்புற கலை.


அண்டை மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் பொருட்டே இந்த பதிவு.


நன்றி.
ரமா ரவி.
-----------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், அக்டோபர் 25, 2011

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி (சவால் சிறுகதை-2011’)

 “அம்மா, ஆனந்த் எங்கம்மா?”

 “தெரியலையே ஆதி.காலையில சீக்கரமா எழுந்து காப்பி கேட்டான்.கொண்டு போய் கொடுத்தப்ப அவனோட அறையில படிச்சுண்டு இருந்தான்.கொஞ்ச நேரம் கழிச்சு கதவை தாழ்போட்டுக்கோ அம்மான்னு சொல்லிட்டு எங்கேயோ கிளம்பிப்போயிட்டான்,நான் எங்கேடா கிளம்பிட்டே காலங்கார்த்தாலன்னு கேட்டத அவன் கவனிக்கவே இல்லை அவசரமா போயிட்டான்”.

 “என்னம்மா நீ,எங்கப்போறான்னு கேட்டு வைச்சுக்க கூடாது? இப்ப மணி 8.30 ஆயிடுச்சு,இப்ப கிளம்பினாக்கத்தான் தீபாவளிக்கு துணி வாங்கிண்டு, 12 மணி காட்சிக்கு அந்த படத்துக்கு போக முடியும்?’

 “போன் பண்ணிப்பாரேண்டா எங்க இருக்கான்னு தெரியபோறது”

 “சரி”

ஆதி போன் செய்ய ஆனந்தின் போன் அவன் அறையிலிருந்தே ஒலித்தது.

போன விட்டுட்டு போகிற அளவுக்கு அப்படி என்ன அவசரம் அவனுக்கு என்று எண்ணிய படியே ஆனந்த்தின் அறைக்கு சென்றான்.

 சற்று நேரத்தில், “அம்மா இங்க வா” என்ற ஆதியின் குரல் கேட்டு அம்மா
  “என்னப்பா ஆதி” என்றபடி அறையின் உள்ளே சென்றார்.ஆதி கையில் ஆனந்தின் செல்போனுடன் அமர்ந்திருந்தான்.மேஜையின் மீது இரண்டு காகிததுண்டுகள்.



அதில் என்னமோ கோகுல்,விஷ்ணு என்று எழுதியிருக்க, அம்மா, “என்ன ஆதி அது காகிதம் என்ன பார்த்துண்டு இருக்க?” என்று கேட்ட நேரத்தில் அவன் கையிலிருந்த செல் போன் ஒலித்தது.திடுக்கிட்ட ஆதி யார் என்று பார்க்க அதில் ‘விஷ்ணு இன்பார்மர்’என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்தது.

 “யார்மா இது? விஷ்ணு இன்பார்மர்,கொஞ்ச நேரத்துக்கு முன்ன இந்த ஆள்கிட்டேருந்துதான் போன் வந்தது இரண்டு மூன்று தடவை அடித்துவிட்டு நின்றுவிட்டது,அதுக்குதான் உன்னை கூப்பிட்டேன்.பார் இப்ப மறுபடியும் இரண்டு மூன்று முறையுடன் நின்று விட்டது.ஆனந்த் எங்க போயிருக்கான்?”

 “எனக்கு தெரியலேப்பா, யார் இது புதுசா இருக்கே பேரு,எனக்கு பயம்மா இருக்கே இவன் ஏதாவது வம்புதும்புல மாட்டிண்டான்னா? இன்பார்மர் அப்படி இப்படின்னு போன் வருதே போலிஸ் கேஸ் ஏதாவதா? இவன் கிளம்பிப்போய் 4 மணி நேரம் ஆயிடுத்தே அப்பாக்கு போன் போடுடா, அவர்கிட்ட சொல்லு”

என்று அம்மா புலம்ப ஆரம்பித்தார்.

  “அம்மா நீ சும்மா இரு இன்பார்மர்னாக்க போலிஸ் நினைவுதான் வரணுமா? அப்பாக்கிட்ட இப்ப சொல்ல வேண்டாம் அவர் ஏற்கனவே அவன் நிறைய மார்க் வாங்கி கூட ஐ.ஐ.டில சேரல,இன்ஜினியரிங் சேரல ஆர்ட்ஸ்ல சேர்ந்துட்டானு இவன் எதிர்காலம் அவ்வளவுதான்னு கரிச்சு கொட்டிண்டு இருக்கார். நான் அவன் நண்பர்களுக்கு போன் பண்ணிக்கேட்கிறேன்”

அவன் சொல்லிக்கொண்டிருந்த அந்த நேரத்துல அழைப்பு மணி சத்தம் கேட்க வாசலுக்கு விரைந்தார்கள்.

“என்னாச்சு? கதவை திறக்க இவ்வளவு நேரமா?” என்றபடி உள்ளே வந்த அப்பா அவர்கள் இருவரும் திகைத்து நிற்பதை பார்த்து, “என்ன பேய் அறைந்த மாதிரி இருக்கீங்க யாருக்கு என்ன?” என்று கேட்டார்.

அம்மா சமாளித்துக்கொண்டு, “வாங்கோ! நீங்க நாளைக்குதானே டில்லியிலிருந்து வரதா இருந்தது?” என்றார்.

 “ஆமாம் வேலை சீக்கரமே முடிஞ்சுடுத்து,பிளைட்டும் கிடைச்சுது அதனால் வந்துவிட்டேன்.நான் சீக்கிரமா வந்தது தப்பா?” என்ற படி அவர்களுடைய பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே சென்றார்.

“அம்மா,அப்பா ஆனந்த்தை பற்றி கேட்டால் ஏதாவது சொல்லி சாமாளி அதற்குள் நான் போய் அவன் நண்பர்களை பார்த்துவிட்டு வந்துடறேன்”
என்றபடி ஆதி வெளியே சென்றான்.

சற்று நேரத்தில் ஆதி திரும்பி வந்த போது,அப்பா, “அவன் கேட்கற எல்லாம் செய்து கொடுத்து அவனை கெடுத்து வைத்துவிட்டீங்க ஆதியும் நீயுமா சேர்ந்து இப்ப பார் போலிஸ் அது இதுன்னு ஆயிடுத்துண்ணாக்க அவன் எதிர்காலம் என்ன ஆறது? அதுக்குதான் அப்பவே அடிச்சு சொன்னேன் அவனை ஆர்ட்ஸ்ல சேரவேண்டாம் ஐ.ஐ.டில சேருன்னு கேட்டீங்களா?” என்று கத்திக்கொண்டு இருந்தார்.

 “அதுக்கும் இதுக்கும் இப்ப என்ன சம்பந்தம்,நீங்க அவன எப்ப பாரு கரிச்சுக்கொட்டிண்டே இருந்தீங்க அதனால்தான் அவனுக்கு இப்படி என்னமோ ஆயிடுத்து” என்று அம்மா அழ ஆரம்பித்தார்.

உள்ளே வந்த ஆதிஅம்மா விஷயத்தினை அப்பாவிடம் சொல்லிவிட்டதை புரிந்து கொண்டு,  “இரண்டு பேரும் பேசாம இருங்கோ!அப்பா உங்க நண்பர் யாரோ ராஜேந்திரனாம் ஆனந்த் செல்லுக்கு போன் பண்ணினார்.அவர் கொஞ்ச நேரத்துல ஆனந்த்தை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்கார்” என்றான்.

 “ராஜேந்திரனா? அவன் அஸிஸ்டன் கமிஷனர் ஆஃப் போலீஸ் ஆச்சே அவன் எதுக்கு நம்ம ஆனந்த்தை கூட்டிண்டு வரணும்?”

வாசலில் ஒரு போலிஸ் ஜீப் வந்து நிற்க அதிலிருந்து மிடுக்குடன் ஒரு போலீஸ் அதிகாரி இறங்கினார்.பின்னாலேயே சற்று தளர்சியுடன் ஆனந்த். அப்பா வாசலுக்கு  “வாப்பா ராஜேந்திரா! உன்னை பார்த்தே பல வருஷம் ஆச்சேப்பா? ”என்றபடி
விரைந்து அவரை வரவேற்க சென்றார்.

அந்த போலிஸ் அதிகாரி,”என்ன குருமூர்த்தி,எப்படி இருக்கே, பையனை விசாரித்த போது உன் பையன் தான் என்று தெரிந்துவிட்டது.அதனால் நானே கொண்டு வந்து விடலான்னு வந்தேன்.என்ன நீ இப்படி ஒரு பையன பெத்து வெச்சிருக்க?” என்றார்.

அப்பா உடனே, “டேய் ராஜேந்திரா அவன் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சு என் பையன விட்டுவிடுடா இனிமேல் அவனுக்கு புத்தி சொல்லி நான் பார்த்துக்கறேன்” என்று கெஞ்ச.

 “என்ன குரு ?உன் பையன் போய் தப்பு செய்வானா? அவன் இன்னைக்கு பண்ணியிருக்கற வேலைக்கு எங்க டிபார்ட்மெண்டுல சொல்லி மெடலுக்கும் சான்றிதழ் பத்திரத்துக்கும் ஏற்பாடு செய்யப்போகிறேன்.இன்னைக்கு காலையில பஸ் அக்ஸிடெண்ட் ஆயிடுத்து அங்க வந்து எல்லோருக்கும் உதவி செய்து நிதானமாக ஒவ்வொருவரையாக ஆம்புலன்ஸும் போலிஸும் வருவதற்குள்ள கிடைத்த வண்டிகளில் ஆஸ்பத்ரிக்கு அனுப்பிவைத்தான். அவனுடைய சமயோசிதமான புத்தியினால் நிறைய பேர்கள் பிழைத்தார்கள்.ஆம்புலன்ஸ் வருவதற்கு காத்திருந்தால் பல பேர்களின் உயிருக்கு ஆபத்து ஆயிருக்கும்.”

என்றவர் தொடர்ந்து, “அவனுக்கு ஐ.பி.எஸ் ஆக வேண்டும்னு ஆசையாமே .நீ அவன் அண்ணா ஆதித்யா மாதிரி சாஃப்ட்வேர்க்கு போகணும்னு சொன்னியாம் அவன் மாட்டேன்னு சொல்லிட்டானாமே? அவனுடைய நிதானம் மற்றும் சமயோசிதம் ஆகியவை தான் இன்று பெரிய உயிர்சேதத்தை தவிர்த்து இருக்கு.
இந்த மாதிரி அவசர காலங்களில் சமயோசிதமாக நடக்க வேண்டியது அவசியம். இந்த மாதிரி குணம் உள்ளவர்கள் தான் போலிஸ் டிபார்ட் மெண்ட்டுக்கு தேவை.ஆனந்த் என்னோட நண்பரின் பையன்னு சொல்லிக்க நான் ரொம்ப பெருமைபடறேன் குருமூர்த்தி.” என்றார்.

 “எனக்கு நிறைய வேலை இருக்கு ஆனந்தை உள்ளே அழைத்துக்கொண்டு போ.நான் இன்னொரு நாள் நிதானமாக வந்து பார்க்கிறேன்”என்றபடி பதிலுக்கு காத்திருக்காமல் ஜீப்பில் ஏறிச்சென்றார்.

உள்ளே வந்த ஆனந்த், “அம்மா மன்னிச்சுடுமா உன்கிட்ட சொல்லாம போனதுக்கு கார்த்தால படிச்சுண்டு இருக்கறப்போ பாடத்துல சந்தேகம் வந்தது அதுக்காக சுரேஷுக்கு போன் பண்ணினேன்.அவன் ஏதோ கல்யாணத்துக்கு தஞ்சாவூர் போய்விட்டு பஸ்சுல பெருங்களத்தூர் தாண்டி வந்துண்டு இருக்கறதா சொன்னான்.அவன் கூட பேசிக்கொண்டு இருந்தப்போ அவன் டேய் ஆனந்த் பஸ் தீடீர்ன்னு தாறுமாறா ஓடரதுன்னு பிரேக் பிடிக்கல போல இருக்குன்னு சொன்னான்.அப்போ ஒரு பெரிய சத்தத்தோட போன் கட்டயிடுத்து.”

என்றவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்து “நம்ம வீடு தாம்பரத்துல இருக்கறதால பெருங்களத்தூர் பக்கம் தானே வண்டியயெடுத்துண்டு போனேன்.போய் பார்த்தாக்க பஸ்சு பெருங்களத்தூர் பாலத்தை தாண்டி தாம்பரம் கிட்ட மீடியன்மேலே ஏறி ஒருபக்கமா கிடந்துது.ஒரே சத்தமா இருந்துது.கண்டக்டர்தான் பாவம் தனி ஆளா எல்லோருக்கும் உதவிண்டு இருந்தார். நான் உடனே அவருக்கு உதவிண்டே வெளியே வந்தவர்களில் ரொம்ப அடிப்பட்டு இருந்தவங்களை அந்தப்பக்கம் வந்த சில வண்டிகளில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினேன்”.

“நம்ப சுரேஷுக்கும் கையில பலமான அடி. அவனோட ஆஸ்பத்திரிக்கு போனேன்.அப்பதான் கண்டக்டர் சொல்லியிருப்பார் போல் இருக்கு இந்த ராஜேந்திரன் சார் என்கிட்ட பேசினார்.அவர்தான் என்னை கொண்டு வீட்டுக்கு விடுகிறேன் சொல்லி அழைத்து வந்தார்.”

அப்பா உடனே,”என்ன மன்னிச்சுடுடா ஆனந்த் உன்கிட்ட இருக்கிற திறமையை சரியா புரிஞ்சுக்கலை நான்”. என்றார்.

 “என்னப்ப நீங்க என்கிட்ட மன்னிப்பு கேட்டுண்டு நீங்க என் நன்மைக்குதான் செய்வீங்க, சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும் எனக்கு ஐ.பி.எஸ்.ஆகணும் அதுக்கு மட்டும் உங்க சம்மதம் கிடைச்சா போதும்” என்றான் ஆனந்த்.

 “நீ என்னப்படிக்க வேணுமோ படிப்பா. உன் விருப்பம் எதுவோ அதை பண்ணு”என்ற அப்பாவை சந்தோஷமா பார்த்தனர் சகோதரர்கள் இருவரும்.

ஆதி உடனே, “ டேய் ஆனந்த் அது யாருடா விஷ்ணு இன்பார்மர்,உனக்கு இரண்டு மூன்று முறை மிஸ்டு கால் கொடுத்தது. அதை பார்த்ததும் நானும் அம்மாவும் பயந்து போயிட்டோம்” என வினவ

ஆனந்த், “ அவனா? எங்க காலேஜ்ல 2 விஷ்ணு இருக்காங்க அதுக்காக அடையாளம் தெரியரத்துக்கு அப்படி பேர் வைச்சிருக்கோம். ஒருத்தன் பெரிய புட்டிபோட்டுண்டு எப்ப பாரு தடிதடியா புத்தகத்த வெச்சுண்டு அலைவான் அவனுக்கு ‘விஷ்ணு நெர்டி’(nerdy) .இவன் இன்பார்மர்,நாங்க கிளசுக்கு கட் அடிசுட்டு சினிமாக்கு போறதும், மற்ற விஷயங்கள் பேசரதையெல்லாம் கேட்டு புரஃபசர் கிட்ட போட்டு கொடுப்பதே இவன் வேலை. அதனால இவனுக்கு இன்பார்மர். சரியான கஞ்சன் எப்போதும் மிஸ்ட் கால்தான், போன் பண்ணவே மாட்டான்”.என்றான்.

அம்மா, “அதென்னப்பா ஆனந்த் உன் மேஜை மேல இரண்டு துண்டு காகிதம் இருந்ததே ” எனகேட்க

 “அதுவாம்மா,நேத்திக்கு வாசு மாமா வந்தாரே அவர் கொண்டு வந்தார்.ஏதோ பதிவுலகத்துல ‘சவால் சிறுகதை-2011’ போட்டியாம்.இந்த துண்டு காகிதத்துல இருக்கற வார்த்தைகள் அதுல வரணுமாம்.என்னை ஏதாவது கதைக்கான கரு சொல்லுன்னு கேட்டார்.வச்சுட்டு போங்க யோசித்து வைக்கிறேன் சொன்னேன்”.

  “அடப்பாவி இவன கதை எழுதச்சொன்னா எல்லோரையும் கேட்டுண்டு திரியரானா” என்று தன் தம்பியை அம்மா செல்லமாக கடிந்து கொள்ள அனைவரும் சிரித்தனர்.

 “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” என்று சொல்லுவதற்கு ஏற்ற மாதிரி தனக்கு பிறந்த மகன்களை பெருமிதத்துடன் பார்த்தார் அந்த தந்தை குருமூர்த்தி.


---------------------------------------------------------------------------------------------------------------------