மேலே இருப்பது என்ன என்று தெரிகிறதா?? ஆம் காப்பி கொட்டை அரைக்கும் எந்திரம் தான். வலையில் ஏதோ படத்தை தேடும் பொழுது இதை பார்தேன். பார்த்தவுடன் காபி குடிக்கும் பழக்கத்தை நினைவு படுத்துவிட்டது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும்,கர்நாடகாவிலும் இந்த பில்டர் காபிக்கு ஒரு தனி மகிமை உண்டு. அதை விரும்பாதவரே கிடையாது என்று சொல்லலாம்.
அப்பொழுது தயாரிக்கப்பட்ட பிஸ்டர் டிகாக்ஷன்,தண்ணீர் கலக்காத பால் அளவான சக்கரை சேர்த்து சூடாக,நுரைக்க காப்பி தயாரித்து குடிக்கும் பொழுது....தேவாம்ருதமாக இருக்கும்.
எனக்கு சிறு வயதிலிருந்தே காபி குடிக்கும் பழக்கம் உண்டு. சுமார் ஏழு வயது எனறு நினைக்கிறேன்,என தம்பி தங்கை இருவரும், “வீவா”அல்லது, “ஹார்லிக்ஸ்” குடிக்கும் பொழுது என் அம்மாவிடம் எனக்கு காபிதான் வேண்டும் என்று அடம் பிடித்து காப்பி குடிப்பேன். அதுவும் திக்காக இருக்க வேண்டும் அம்மா அப்பா எப்படி குடிக்கிரார்களோ அப்படியே இருக்க வேண்டும். அம்மா, குழந்தைதானே என்று டிகாக்ஷனில் சிறிது தண்ணீர் கலக்கலாம் என்றாலும் விட மாட்டேனாம். சமையல் அறை மேடை அருகிலேயே நின்று கொண்டிருப்பேனாம். இப்படியே என் காப்பி சாப்பிடும் பழக்கம் தொடர்ந்தது.
பழைய மாம்பலத்தில் ஈஸ்வரன் கோவில் தெருவில் ராவ்ஜி மாமா கடை வைத்திருப்பார். அவர். கடைதான் எங்க வீட்டிற்கு மட்டுமில்லை, மொத்த மாம்பலத்திற்குமே......அப்பொழுதெல்லாம் காப்பி பொடி வாங்கி வர வேண்டும் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். மாமா கடைக்கு சென்றுவிடுவேன். ஒரு சிறிய பென்ச் போட்டிருப்பார். அதில் ஓரமாக உட்கார்ந்து கொண்டு விடுவேன். அவ்வளவுதான், பச்சை கொட்டை வாசனை, அது வறுக்கப்படும் பொழுது வரும் வாசனை,அரைத்து பொடி ஆக்கிய பிறகு வரும் வாசனை...........ஆஹா.. என்றிருக்கும்.

காப்பி கொட்டை வறுப்பதற்கு ஒரு மிஷின்,அரைப்பதற்கு ஒரு மிஷின்தான் வைத்திருப்பார்.அவர் காபி கொட்டையை பதமாக அதிகம் கருகாமல் வறுத்து அரைத்து கொடுப்பதை வாங்கி செல்ல நிறைபேர்கள் வருவார்கள். வருபவர்கள் மாமாவை விசாரித்துவிட்டு,கதை பேசிவிட்டு காப்பி பொடி வாங்கி செல்வார்கள். சில சமயம் நான் இருப்பதையே மறந்துவிடுவார்.நானும் நினைவு படுத்த மாட்டேன்.அந்த வாசனையை முகர்ந்து கொண்டோ அல்லது வறுக்கும் மிஷினில் காஸ் தீர்ந்து விட்டால் அவர் சிலிண்டர் மாற்றும் விதத்தை வேடிக்கை பார்த்துக்கொணடோ உட்கார்ந்திருப்பேன். ஒரிரு சமயம் 2 மணி நேரம்கூட ஆகிவிடும். என் அம்மா,அப்பா யாராவது என்னை தேடிக்கொண்டு கடைக்கு வரும் போதுதான். அவர் என்னை கவனிப்பார். “அடாடா..உன்னை மறந்துவிட்டேனே”என்று சொல்லி நான் கொண்டுகொடுத்த டப்பாவில் அரைத்த பொடியை போட்டு கொடுத்தனுப்புவார்.
எங்க பெரியம்மா வீட்டில் கடையிலிருந்து பொடி வாங்க மாட்டார்கள். பெரியம்மா காலையில் சமையல்,சாப்பாடு வேலை எல்லாம் முடித்துவிட்டு, பெரிய இரும்பு வாணலியை நன்றாக சூடுபடுத்தி, பச்சை காப்பி கொட்டையை பதமாக வறுத்து ஆறவைப்பார். மத்தியானம் காப்பி தயாரிக்கும் சமயம் அதை வீட்டில் இருக்கும் சிறிய மிஷினில் அரைத்து டிகாக்ஷன் தயாரிப்பார் பிறகு கறந்த பாலை தண்ணீர் விடாமல் நன்றாக காய்ச்சி தயாரித்த டிகாக்ஷனை கலந்து அளவான சக்கரை சேர்த்து நுரைக்க நுரைக்க எல்லோருக்கும் காப்பி கொடுப்பார்.அந்த காப்பியை குடிப்பதற்காகவே பெரியம்மா வீட்டிற்கு சென்ற நாட்கள் உண்டு.எனக்கு அவர் தயாரிக்கும் காப்பி மிகவும் பிடிக்கும்.நான் அதற்காகவே அங்கு செல்வதால் எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு உண்டு.இரண்டு டம்ப்ளர் காபி கிடைக்கும்.

வேலைக்கு போகும் நாட்களில் பார்ஸ் கார்னரில் எங்கள் ஆபிஸின் எதிரிலேயே, “சரவணபவன் ” காப்பி குடிப்பதற்காகவே காலை 11/30 மணிக்கும் மாலை 4 மணிக்கும் செல்வோம். விலை என்னதான் ஏற்றி வைத்தாலும் நாங்கள் காப்பி குடிப்பதை நிறுத்தவில்லை.
நானும் வீட்டில் மிக நன்றாக காபி தயாரிப்பேன். பாலில் தண்ணீர் கலக்காமல், டிகாக்ஷனும் திக்காக....ஒரு நாளைக்கு 4 டம்பளர் காப்பி குடிப்பேன்.
இப்படி நல்ல காப்பி எங்கு கிடைக்கும் என தேடிப்போய் குடிக்கும் நான் காபி குடிப்பதை 3 வருடங்களுக்கு முன் விட்டுவிட்டேன்.
அன்புடன்
ரமாரவி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
39 கருத்துகள்:
என் தாத்தா ஆற்றிக் குடித்து வைத்து விட்டுப் போகும் நுரை ததும்பிய டம்ளருக்கு நானும் தங்கையும் அடித்துக் கொள்வோம். மணக்கிறது பதிவு.
//ரிஷபன் கூறியது..//
மிக்க நன்றி ரிஷபன் சார், உங்க உடன் வரவுக்கும் கருத்துக்கும்.
நுரை பொங்கும் காபி டம்ப்ளர் படம் பார்க்கும்போதே ஆசையாய் இருக்கிறது. எங்கள் வீட்டில் கூட சின்ன காபிக் கொட்டை அரைக்கும் மெஷின் இருந்தது. இப்போதெல்லாம் கறந்த பாலில் எங்கே காபி குடிக்க முடிகிறது? கவர் பால்தான்! ம்..ஹூம்....!
டிகாஷன் காப்பிக்கு நானும் அடிமை.புரசைவாக்கம் பகுதி சென்றாலே மூக்கில் காப்பி பவுடர் வாசனை துளைக்கும் .முன்பெல்லாம் ஒரு நாளைக்கு ஐந்து காப்பி குடிக்கிறேன் என்றாலே எல்லாரும் அலறிட்டு ஓடுவாங்க .எனக்கு சாப்பாடே வேணாம் காப்பி போதும் .இப்ப இரண்டு கோப்பையாக குறைத்துவிட்டேன் ..என்னதான் ஸ்டார்பக்ஸ் /COSTA Latte, Cappuccinoஎன்று குடித்தாலும் ஒன்லி நரசுஸ் இஸ் மை ஆல் டைம் ஃபேவரிட் .காப்பி மணக்க மணக்க அருந்தியது போல் இருக்கு உங்க பதிவு படிச்சதும்.
மணக்கும் ரச்னை நிரம்பிய பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ஹையா! காபிப் பொடி அரைக்கும் போது எழும் வாசனை உங்களுக்கும் ரொம்பப் பிடிக்கு்ம் என்று படித்ததில் குஷி! நானும் அவ்விதமே. மதுரையில் தேடித் தேடி நலல காபியை ருசித்த நாட்கள் நினைவுக்கு வந்தன. ஒரு கட்டத்துக்குப் பின்னால் நீங்கள் முடித்திருப்பது போலத்தான் ஆகிட்டேன். தேடறது இல்லை. ஆனா இப்பவும் கிடைக்கிற சந்தர்ப்பங்கள்ல அனுபவிச்சுக் குடிப்பேன்.
சுட சுட காப்பியுடன் , காப்பி பற்றிய பதிவை படிக்கிறேன். ..பழைய நினைவுகளை அசை போட வைத்துவிட்டீர்கள். சேலத்தில் காப்பி கொட்டை அரைக்கும் சின்ன மெசின் இருந்தது... இப்ப எங்கன்னு தெரியலை அது
பேஷ்..பேஷ்.காப்பின்னா...இதுதான் காப்பி..ஆமா நீங்க காப்பி குடிக்கிறது பத்தி இவ்ளோ எழுதிவிட்டு ஏன் இப்போ குடிக்கிறது இல்லை என்பதையும் எழுதி இருக்கலாமே...
எனக்கும் காஃபி பிடிக்கும். ஆனால் அந்த வறுக்கிற அரைக்கிற மணம் பிடிக்காது. இங்கும் சில கடைகளில் அரைப்பார்கள். மூக்கை மூடிக் கொண்டு நிற்பேன்.
ஆமா, ஏன் காஃபி குடிக்கிறதை நிறுத்திட்டீங்க?
//ஸ்ரீராம். கூறியது...//
ஆமாம் ஸ்ரீராம்,இப்பொதெல்லாம் கவர் பால்தான்.
மிக்க நன்றி தங்களின் கருத்துக்கு.
// angelin கூறியது...//
எங்க வீட்டில் யாருக்கும் நரசுஸ் பிடிக்காது.அது கொஞ்சம் பச்சை வாசனை வரும் என்பார்கள்.எப்படி இருந்தாலும் காப்பி குடிப்பது ஒரு தனி சுகம்தான்.
நன்றி angelin தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//இராஜராஜேஸ்வரி கூறியது//
மிக்க நன்றி மேடம்,தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//கணேஷ் கூறியது...//
மிக்க சந்தோஷம் கணேஷ். நல்ல காபி என்றால கட்டாயம் குடிக்க வேண்டும். அந்த சுவையே தனிதான்.
நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//எல் கே கூறியது...//
நீங்களும் காபி பிரியரா?
மிக்க நன்றி கார்த்திக்.தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//கோவை நேரம் கூறியது.//
மிக்க நன்றி ஜீவா தங்களின் வருகைக்கும், கருத்துக்கும்.
//ஹுஸைனம்மா கூறியது.//
மிக்க நன்றி ஹுஸைனம்மா.
காபி குடிப்பதை விட்டதற்கு பெரிய காரணம் ஏதுமில்லை.காலை வேளைகளில் சமையல், டிபன் எல்லாம் 7-30 மணிக்குள் முடித்து கணவர், குழந்தைகளை, அலுவலகத்திற்கும், கல்லுரிக்கும் அனுப்பவே நேரம் போதுவதில்லை. இதில் எழுந்தவுடன் ரசித்து காபி குடிக்க முடிவதில்லை..மேலும் நான் காலையில் தைராயிடு மாத்திரை எடுத்துக்கொள்வதால்,மாத்திரை சாப்பிடவுடன் காபி குடிக்க கூடாது என்பதாலும், காபி ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டேன்.
//பெரிய இரும்பு வாணலியை நன்றாக சூடுபடுத்தி, பச்சை காப்பி கொட்டையை பதமாக வறுத்து ஆறவைப்பார். மத்தியானம் காப்பி தயாரிக்கும் சமயம் அதை வீட்டில் இருக்கும் சிறிய மிஷினில் அரைத்து டிகாக்ஷன் தயாரிப்பார் பிறகு கறந்த பாலை தண்ணீர் விடாமல் நன்றாக காய்ச்சி தயாரித்த டிகாக்ஷனை கலந்து அளவான சக்கரை சேர்த்து நுரைக்க நுரைக்க எல்லோருக்கும் காப்பி கொடுப்பார்.//
எனக்கும் என் மாமியார் வீட்டில் இந்த அனுபவம் உண்டு. அது ஒரு காலம்.
நல்ல மணமான ஸ்ட்ராங்கான காஃபியை ருசித்துக்குடித்தது போன்று இருக்குது இதைப்படிக்கும் போது.
பாராட்டுக்கள்.
மெயில் தகவலுக்கு நன்றிகள். அன்புடன் vgk
அருமையான பதிவு.
வாழ்த்துகள்.
காபி மகாத்மியம் அருமை
நானும் இதுபோன்ற காபி ரசனையுடன் இப்போதும் தொடர்ந்து
வாழ்ந்து வருகிறேன்
அப்போதைய பாலின் தரம் காப்பிக் கொட்டையின் தரம் இப்போது இல்லை என்கிற
ஆதங்கம் எனக்கு உண்டு
மணம் கமழும் பதிவு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மண மணக்க சொல்லிவிட்டு கடைசிப் பத்தியில் காபிய விட்டுட்டேன்னு சொல்லிட்டிங்களே அக்கா.
சுவையும் மனமும் நிறைந்த ஃபில்டர் காபிக்கு இனையாக வேறேதேனும் பானம் இந்த உலகத்தில் உண்டா?மணக்கும் பதிவு!
நுரை பொங்கும் காப்பியை டபராவில் ஆற்றி குடிக்கும் சுவையே அலாதிதான். போய் காப்பி சாப்பிட்டு வரேன்.
காப்பி பிரியர்களுக்காக மணக்க மணக்க ஒரு பதிவு! அருமை ரமா! இப்போதெல்லாம் நல்ல பசும்பால் கிடைப்பதில்லை. நல்ல தூள் எங்கே கிடைக்கும் என்று டிபேட் பண்ண வேண்டியிருக்கிறது. காப்பிக்கொட்டையை வறுத்து பொடி செய்து காப்பி போட்டதில்லை. உங்கள் பதிவு அந்த மாதிரி காப்பி போட்டுப்பார்க்க வேண்டுமென்ற ஆசையைத் தூண்டி விட்டது! இங்கே கறந்த பாலுக்கு வழியில்லை தான். ஊருக்குப்போனால்தான் ஃபில்டர் காப்பி!!
"சுவையும் மனமும் நிறைந்த ஃபில்டர் காபிக்கு இனையாக வேறேதேனும் உண்டா ? !"
அன்னையர்தின வாழ்த்துக்கள்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
எனக்கும் காபி ரொம்ப பிடிக்கும்.
பொங்கல் வடை சாப்பிட்டால் கண்டிப்பாக காஃபி தான்
சரவன பவா போனால் கண்டிப்பாக காஃபி குடிக்காம வருவதில்லை
என் பையனும் முன்பு காஃபி பிரியாராக் இருந்தான்..
ஒரு நாளைக்கு 4 டம்ளர் குடித்து ட்டு சுத்தமாக கஃபியை தவிர்பது முடியாதே..
அன்று இருந்த ஜோசப் காபி, நரசுஸ் காபி என பல கம்பெனி காபிகளும் நல்லா இருக்கும்...
ஆனால், இன்று எங்கு காபி குடித்தாலும் திருப்தி கிடைப்பதில்லை!
எனக்கும் தலைவருக்கும் காபி என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால் இப்போதெல்லாம் சண்டே ஸ்பெஷல் தான் காபி. அவருக்கு ஒத்து கொள்ளாததால் நிறுத்திவிட்டேன்.
சண்டே காபி போடும் போது தலைவரின் டயலாக் என்ன தெரியுமா. "ஐ......புது பாலு....புது டிகாஷன்.... புது காபி...ஹும்.....ஆனா அத போடற பொண்டாட்டி தான் பழசு!"
எப்படி இருக்கு பார்த்தீங்களா..! :))))
T.Thalaivi
என்ன ஆச்சு காபி பதிவுக்குப் பின்
அடுத்த பதிவைக் காணோம்
தங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..
காஃபிக்கு நான் அடிமை! :-)
பாட்டியோடு வறுத்த அரைத்த காபிக் காலம் போய்விட்டது.
கரியடுப்பில் இரண்டு பக்கமும் கைப்பிடி வைத்த ரோலர் உருண்டையில் காப்பிக் கொட்டையைப் போட்டு வறுத்துத் தினமும் நாலரை மணிக்கு அரைத்துக்
காலையில் மாடு வந்து நிற்க பால் கறந்து காய்ச்சிக் குட்டித்தம்பளரில் பாட்டி என்னிடம் கொடுக்கணும். நான் குடிக்கணும்.:)
அருமையான பதிவு ரமா.
I have shared an award with you !, pls visit my site in your free time.
Congrats ! (me the first) :))
Regards.
I have shared an award with you, please visit my site in your free time.
Regards.
T.Thalaivi.
Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
அன்பின் ராம்வி,
உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்பா... சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
இந்த மதுரகவியின் வரிகள் எல்லாமே ரசிக்கும்படியாக சிலாகிக்கும்படியாக எளிமையாக என்னவோ நம்ம பக்கத்துவீட்டு குழந்தை நம்மிடம் பேசுவது போல படைப்புகள் அத்தனை இயல்பாக இருக்கும். படித்து தான் பாருங்களேன்.
கோகுலாஷ்டமி / கிருஷ்ணஜெயந்தி
பெர்முடா பெருமாள்
ரங்கமணியும் தங்கமணியும்
அன்புடன்
மஞ்சுபாஷிணி
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_4.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
// மஞ்சுபாஷிணி கூறியது..//
மஞ்சு, மிக்க நன்றி எனது பதிவின் அறிமுகத்திற்கு..
//திண்டுக்கல் தனபாலன் கூறியது.//
நன்றி தனபாலன்.
கருத்துரையிடுக