ஒரு சில மாதங்களுக்கு முன் வீட்டில் இருக்கும் பெண்களின் (அதாவது house wife) சேவைக்கு பணம் கொடுக்க வேண்டும் என்கிற ஒரு கருத்து உருவாகி அதனை ஆதரித்தும் எதிர்த்தும் பெரிய அளவில் விவாதங்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்த வண்ணம் இருந்தது.
இது மற்ற செய்திகளை மாதிரியே கொஞ்சம் நாட்களில் ஓய்ந்துவிடும், பத்திரிக்கைகளுக்கு வேறு சுவாரசியமான செய்தி கிடைத்தால் அதற்கு தாவிவிடுவார்கள் என்று, அந்த சமயத்தில் எனக்கு இது பற்றி பெரிய கருத்து ஏதும் இல்லை. ஆனால் சில தினங்களுக்கு முன் இதைப்பற்றி அதிகம் நினைத்து இக்கருத்தைப் பற்றி எனக்குள்ளாகவே அதிகம் விவாதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காரணம்?------------
எனக்கு மிகவும் தெரிந்த பெண், எங்கள் குடும்பத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர். என்னிடன் அவருடைய சொந்தப் பிரச்சனைகளை விவாதிக்கும் அளவிற்கு நெருக்கமானவர். அவர் சில தினங்களுக்கு முன் என்னிடம், “அக்கா, வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏதோ அவர்களுடைய சேவையை போற்றி பணம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்களே அது மாதிரி ஏதாவது சட்டம் வந்தால் நன்றாக இருக்கு.” என்றார். நான் ஏன் எனக் கேட்டதற்கு அவர் விடை அளித்தத்தை அப்படியே பகிர்ந்து கொள்கிறேன்.
அவருக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. திருமணத்திற்க்கு முன்னும் பின்னும் வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாததால் வேலைக்கு செல்லவில்லை. திருமணம் ஆன பொழுது வீட்டில் பெரியவர்கள் இருந்ததால் வீட்டு நிர்வாகம் எல்லாம் அவருடைய கணவரும் மாமனார் மாமியாரும் பார்த்து கொண்டு விட்டதால் அவர் மரியாதையின் நிமித்தம் நிர்வாகத்தில் தலை இடவில்லை. பெரியவர்களின் மறைவுக்கு பிறகு தற்பொழுது கடந்த சில வருடங்களாக தனியாக குடித்தனம். தனியாக என்று ஆகியவுடன் வீட்டு நிர்வாகத்தை கவனிக்க வேண்டி வந்தது. இரு குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு வீட்டு நிவாகத்தையும் திறம்படத்தான் செய்தார், ஆனால் அவர் செய்த ஒரே தவறு வீட்டிற்கு தேவையானவற்றை வாங்கும் பொழுது ஒரு மரியாதை நிமித்தம் கணவரிடம் கேட்டுக்கொண்டு செய்வார். அதை அவர் கணவர், மனைவிக்கு ஓன்றும் தெரியவில்லை அதனால் தன்னை கேட்கிறார் என நினைத்து பணத்தை எண்ணி எண்ணி கொடுக்க ஆரம்பித்தார். மனைவி இந்த செலவுக்காக பணம் என்று சொல்லி கணவருக்கு அதில் கணவருக்கு விருப்பமிருந்தால் மட்டுமே அதற்குரிய பணம் கொடுக்கப்படும். மனைவியின் ஆசைகளோ தேவைகளோ கண்டு கொள்ளப்படாமல் போயிற்று..
(அவருடைய வார்தைகளிலேலே சொல்கிறேன்)- “ஒரு door mat ,screen cloth அல்லது செருப்போ வாங்குவதற்கு கூட அவரிடம்தான் கேட்க வேண்டும். அவருடைய அனுமதி கிடைத்த பிறகுதான் வாங்க முடியும். மேற்கொண்டு கேள்வி கேட்டால் நான் நம்முடைய எதிர்காலத்திற்குதான் சேர்த்து வைக்கிறேன் என்று கோபித்துக்கொள்வார்.” என்றார். அவர் மேலும் தொடர்ந்து, “பெண் குழந்தையை வைத்துக்கொண்டு அதனுடைய தேவைகளை வாங்குவதற்கு கூட அவரிடம் கேட்க வேண்டியிருக்கு, அக்கா! என் கையில் பணம் இருந்தால் நான் ஒன்றும் அதிகமாக செலவு செய்துவிடப் போவதில்லை முக்கியமான தேவைகளை நானே நிறைவேத்திக் கொள்ளலாம்”.
“என் கணவர் மிக நல்லவர், கெட்ட பழக்கங்கள் கிடையாது. சாப்பாடிற்கோ துணிமணிக்கோ கஷ்டம் கிடையாது. குழந்தைகளையும், நிறைய பணம் செலவு செய்து பிரபலமான பள்ளிகளில் படிக்க வைக்கிறார். எல்லாம் சரிதான் ஆனால் எனக்கு என்று கையில் பணம் இருப்பதில்லை.
எனக்கு என்று கொடுக்கப்படும் பணத்திற்கு நான் யாருக்கும் கணக்கு சொல்ல வேண்டியது இல்லை அது மாதிரி ஒரு நிலைமைக்காக நான் ஏங்குகிறேன். எனக்கு எல்லாம் இருந்தும் நான் சந்தோஷமாக இல்லை.” என்றார்.
அந்த பெண்ணிடம், பேசுவதற்கு முன் எனக்கு இது பற்றி எந்த விதமான கருத்தும் இல்லை. அவருடைய பேச்சை கேட்ட பிறகு நான் நிறைய யோசிக்க ஆரம்பித்தேன். அவருடைய ஆதங்கம் எனக்கு நன்றாக புரிந்தது.
முதலில் அந்த பெண் இது விஷயமாக என்னிடம் பேசியதும் நான் நினைத்தது --- சாப்பாட்டிற்கும் துணி மணிக்கும்தான் கஷ்டம் இல்லையே பின் பேசாமல் போக வேண்டிதானே! இது எல்லாம் ஒரு கஷ்டமா? என்று.!! ஆனால் பேச்சின் இடையே அந்தப்பெண் சொன்ன ஒரு விஷயம் என்னை மேலும் சிந்திக்க வைத்தது. அவர் சொன்னது, “அக்கா அன்று குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து போனேன். திரும்பி வர bus கிடைப்பது தாமதமாகிவிட்டது. இருட்ட ஆரம்பித்துவிட்டது. அதனால் ஒரு ஆட்டோ பிடித்து வந்தேன். நாங்கள் வருவதற்குள் என் கணவர் அலுவலகத்திலிருந்து வந்துவிடார். நாங்கள் ஆட்டோவிலிருந்து இறங்குவதை பார்த்துவிட்டு வாசலிலேயே நிற்க வைத்து சத்தம் போட ஆரம்பித்தார். அனாவசியமாக செலவு செய்து ஆட்டோவில் வர வேண்டுமா? வீட்டிலேயே இருக்க வேண்டிதானே அப்படி இப்படி என்று! நான் கோவிலுக்கு கூடவா போகக்கூடாது? அந்த சுதந்திரம் கூடவா எனக்கு இல்லை?? நான் வெளியே சென்றால் எதாவது செலவு செய்து விடப்போகிறேனே என்று வெளியே செல்ல கூட அவரிடம் அனுமதி பெற வேண்டும் என்கிற மாதிரியான ஒரு கட்டாயத்திற்கு நான் உட்படுத்தப்பட்டு விட்டேன். அப்பொழுதுதான் நினைத்தேன் எனக்கு என்று பணம் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே இப்படி பயந்து கொண்டு இருக்க வேண்டாமே என்று”.
உண்மைதான். ஒரு புறம் பெண்கள் உடல் ரீதியான கொடுமைகளால் பாதிக்கப்படுகிறார்கள், இன்னொறு புறம் வெளியே தெரியாத இது மாதிரியான மனரீதியான கொடுமைக்கும் ஆளாகிறார்கள். அந்தப்பெண்ணிடம் பணம் இருந்தால் அதுவும் அவருடைய பணம் என்றிருந்தால் கணவர் கேள்வி கேட்க மாட்டார் அல்லவா? கணவர் கேள்வியே கேட்க கூடாது என்று இல்லை. அனாவசியமாக செலவு செய்யும் பொழுது கணவரோ, மனைவியோ யாராக இருந்தாலும் தட்டிக்கேட்க வேண்டும்.. நியாயமான செலவுகள் செய்யும் பொழுது ஒரு சுதந்திரம் இருக்க வேண்டும். அந்தப் பெண்ணைப்போல பயந்து கொண்டே வாழ்கையை கடத்த முடியாது. அவர் தான் சந்தோஷமாக இல்லை என்று சொன்ன போது முதலில் அவர் சுயநலவாதியோ என்று நினைத்தேன். ஆனால் யோசித்து பார்த்த பொழுது அந்த பெண்ணுடைய நிலைமையில் இருந்தால் அது எவ்வளவு கஷ்டம் என்று புரிந்தது. இது மாதிரி எத்தனையோ ஆயிரக்கணக்கான பெண்கள் கஷ்டப்படுகிறார்கள்.
அதனால் பொருளாதர சுதந்திரம் பெண்களுக்கு கட்டாயம் தேவை. அதற்கு வீட்டில் இருக்கும் பெண்களுக்கு (house wives) அவர்களுடைய சேவைக்கு சம்பளம் கொடுக்க வேணும் என்று சொல்வதால் மட்டும் ஒன்றும் ஆகிவிடப்போவது இல்லை. அதற்கு சட்டம் ஏற்றி அதனை நடை முறை படுத்துவது எல்லாம் சாத்தியமில்லை. விவாகரத்தான எத்தனை பெண்களுக்கு ஈட்டுத்தொகை (compensation) சரியாக கொடுக்கப்படுகிறது? நீதி மன்றத்தில் உத்தரவுதான் போட முடியும். ஒவ்வொருத்தரின் பின்னால் போய் பணத்தை பிடுங்கியா கொடுக்க முடியும்? அது மாதிரிதான் இந்த சேவைக்கு ஊதியமும். சட்டம் எல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லை.
பெண்கள் தங்களுடைய வாழ்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள நடத்தும் போராட்டங்களில் ஒன்றாக இதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நான் யோசித்து பார்த்ததில் எனக்கு தோன்றியது.------
1. பெண்கள் நன்றாக படித்து, நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதித்து தங்கள் பொருளாதார சுதந்திரத்தினை நிலை நிறுத்திக்கொள்ளலாம் .
2. வேலைக்கு செல்லாத பெண்கள் தங்கள் கணவருக்கும், குடும்பத்தினருக்கும் எடுத்துச்சொல்லி புரிய வைத்து ( போராட வேண்டும் என்ற நிலைமையில் இருப்பவர்கள் போராடி) தங்களுடைய சுதந்திரத்தை நிலை நிறுத்திக்கொள்ளலாம்.
வேலைக்கு போகாது வீட்டில் இருக்கும் பெண்கள் இப்படி என்றால், வேலைக்கு போய் சம்பாதித்தும் பொருளாதர சுதந்திரம் இல்லாத பெண்கள் எத்தனை ஆயிரம் பேர்களோ தெரியவில்லை.??
நன்றி
ரமாரவி.
-----------------------------------------------------------------------------------------------------------------------