வெள்ளி, பிப்ரவரி 17, 2012

ஹாஸ்டல் நினைவுகள் ....(அலமேலு அம்மா) --1

 தமிழ்நாடு அரசு பணியில் வேலை கிடைத்து முதன்முதலில் சேலத்தில் ஒரு அலுவலகத்தில் பணியிடத்திற்கான உத்தரவு கிடைத்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.ஆனால் அப்பொழுது சென்னையில் இருந்ததால்,என் அம்மா சேலத்தில் என்னை தனியாக இருக்க அனுமதிக்கவில்லை. அவரிடம் அனுமதி பெறுவதற்குள் எனக்கு பெரும் பாடாகிவிட்டது. முதலில் ஒரு நாள் என் அப்பா சேலத்திற்கு சென்று அங்கு நான் பணி புரிய வேண்டிய அலுவலகம்,அதன் சுற்றுசூழல்,மனிதர்கள்,நான் தங்குவதற்கான மகளிர் விடுதி எல்லாவற்றையும் ஆராய்ந்து வந்து சொன்ன பிறகுதான் அம்மா, எனக்கு வேலையில் சேர அனுமதி அளித்தார்கள்.





அதன் பிறகு ஒரு ஆங்கில புத்தாண்டு தினத்தன்று இரவு பேருந்தில் சேலத்திற்கு அப்பா அழைத்து சென்றார்கள்.வேலையில் சேரப்போகும் சந்தோஷத்துடன் பயணம் செய்ததாலும்,முதன்முதலில் நீண்ட தூர பஸ் பிரயாணம் என்பதினாலும் எனக்கு பஸ்ஸில் தூக்கம் வரவேயில்லை.



காலையில் சேலம் சென்றவுடன்,நான் தங்க வேண்டிய மகளிர் விடுதிக்கு சென்றோம்.அங்கு தங்க வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டு அப்பா என்னை அலுவலகத்திற்கு அழைத்து போக 10 மணிக்கு வருவதாக கூறிவிட்டு தான் தயாராகி வர ஹோட்டலுக்கு போய்விட்டார்.





முதன்முறையாக என் பெற்றோரோ,மிக நெருங்கிய உறவினர்களோ இல்லாத ஒரு இடத்தில் தனித்து விடப்பட்டேன்.முதலில் சற்று பயமாக இருந்தது.  எனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றேன். அந்த அறையில் என்னைத்தவிர இன்னும் 5 பெண்கள் இருந்தார்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டில் ஒரு அலமாரி கொடுக்கப்பட்டிருந்தது. என்னுடைய இடத்தில் பொருட்களை வைத்துவிட்டு, மற்றபெண்களுடன் அறிமுகம் செய்து கொண்டேன். பிறகு காலைக்கடன்களை முடித்துக்கொண்டு ,8 மணிக்கே அலுவகம் செல்ல தயாராகிவிட்டேன்.

சரியாக 8 மணி ஆனவுடன் பள்ளிக்கூட மணி அடிப்பது போல மணி அடித்தது.  எதற்கு மணி அடிக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டிருந்த போதே,எனது அறையில் இருந்த ஒரு பெண் டிபன் மணி அடித்து விட்டார்கள் தட்டு எடுத்துக்கொண்டு வா,கீழே டைனிங் ஹாலுக்கு போகலாம் என்றார். எனக்கு உடனே சிரிப்பு வந்து விட்டது. என்ன இது மணி அடிச்சா டிபனா என்றேன். அதற்கு மற்றவர்கள் ஆமாம் இது சிறைதான்,போகபோக நீயே தெரிந்து கொள்வாய் மணி அடிச்சுதான் இங்க சோறு என்றார்கள்.




அதற்குள் இன்னும் ஒரு பெண் அதெல்லாம் ஒன்றும் இல்லை 200 பேர்கள் இந்த விடுதியில் தங்கி இருக்கிறார்கள்.காலை உணவு, மதிய உணவு எல்லாவற்றையும் தயாராகிவிட்டது வந்து சாப்பிடலாம் என்பதற்காக மணி அடித்து அறிவிப்பு செய்கிறார்கள், அவ்வளவுதான் என்றார்.



முதல் நாள் வேலை என்கிற உணர்ச்சிகரமான மனநிலையில் இருந்த நான்,எப்படி கீழே போனேன் என்ன சாப்பிட்டேன் என்கிற நினைவு எல்லாம் இல்லாமல்,சாப்பிட்டுவிட்டு,என் அறைத்தோழிகளிடம் சொல்லிவிட்டு கீழே வந்து,அப்பாவுடன் அலுவலகம் சென்றேன். அங்கு நான் பணியில் சேர்ந்ததும் அன்று மதியமே அப்பா ஊருக்கு கிளம்பிவிடார்.




அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு தோழி தானும் அந்த மகளிர் விடுதியில் தங்குவதாகவும் நாம் இருவரும் இனி சேர்ந்தே அலுவலகம் போய் வரலாம் என்று சொன்னவுடன்,எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.மாலை இருவரும் ஒன்றாகவே கிளம்பி விடுதிக்கு திரும்பினோம்.

விடுதியின் வாசலில் ஒரு பழைய கார் நின்றிருந்ததினைப் பார்த்ததும், என்னுடன் வந்த தோழி அலமேலு அம்மா வந்திருக்கிறார், மீட்டிங் போட்டு நம்மை படுத்த போகிறார். இன்னைக்கு நிம்மதியா பொழுது போனா மாதிரிதான் என்று சலித்துக்கொண்டார். நான் யார் அவர் என வினவ, அவர் இந்த விடுதி ஒரு மாதர் சங்கதினால் (ladies club) நடத்தப்படுகிறது. அலமேலு என்பவர்தான் அதற்கு தலைவி.அவர் சாதாரணமாக வர மாட்டார். வந்தால் ஏதோ பிரச்சனைதான், சரி, வா,காபி குடித்துவிட்டு கீழே போய் என்ன என்று பார்க்கலாம் என்றார்.

அந்த விடுதியில் வேலைக்கு போகும் பெண்கள் சுமார் 100 பேர்களும், தொழில்கல்வி படிக்கும் பெண்கள் மற்றும்,வேறு சில பள்ளிகூடப் பெண்களுமாக சுமார் 100 பெண்கள் தங்கியிருந்தார்கள்.என்னைப்போன்ற வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 4,5 அல்லது 6 பேர்கள் தங்கக்கூடியதான அறைகள்,கட்டில்,  அலமாரி என்று சற்று வசதிகள் உண்டு.பள்ளிக்கூடப் பெண்களுக்கு மொத்தமாக இரண்டு பெரிய கூடங்கள் (HALL), அவர்களுடைய பொருட்களுக்கு ஆளுக்கு ஒரு லாக்கர். மற்றபடி கட்டுபாடுகளில் பெரிய வித்யாசம் எல்லாம் கிடையாது,சாப்பாடு எல்லாம் ஒருசேரதான். வேலைக்கு செல்பவர்கள் வெளியே சென்று வர உத்தரவு எல்லாம் பெறத்தேவை இல்லை ஆனால் இரவு 8 மணிக்குள் வந்து விட வேண்டும்.


காபி குடித்துவிட்டு கீழே வந்தோம். கூடத்திற்கு போய் உட்காருங்கள் மீட்டிங் இருக்கு என்றார்கள். போய் உட்கார்ந்தோம். வச வச என்று எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.எனக்கோ முதல்நாள் பஸ்ஸில் சரியாக தூங்காததால் என்னையும் மீறி தூக்கம் வந்தது. மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு முழித்துக்கொண்டிருந்தேன்.  விடுதி காப்பாளர் (warden) அறையிலிருந்து அலமேலு அம்மா வெளியே வந்தார்.என்னுடைய தோழி தூங்கி வழிந்து கொண்டிருந்த என்னை உசுப்பி பாரு அவர்தான் அலமேலு அம்மா என்றார். நிமிர்ந்து பார்த்தேன். சுமார் 60 வயது இருக்கும்,சுமாரான உயரம்,  பளிச்சென்று நல்ல சிவப்பு கலர் பட்டு மடிசார் புடவை, காது, மூக்குகளில் டால் அடிக்கும் பெரிய புளூஜாக்கர் வைரத்தோடு . கோல்டன் பிரேம் கண்ணாடி, அந்தக் கண்ணடிக்கு பின் கண்டிப்பான பார்வை.


 எனக்கு (3 வயதோ என்னமோ) நினைவு தெரியும் முன் இறந்து போன, படத்தில் மட்டுமே நான் பார்த்த அழகான எனது பாட்டியை உயிருடன் நேரில் பார்த்தது போல இருந்தது. அதனாலோ என்னமோ பார்த்த உடன் எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது. என் தோழியிடம் சொன்னேன்.அவள் சிரித்து கொஞ்சம் இரு அவர் திட்டுவதை கேட்டுவிட்டு அப்புறமா பிடிக்கறதா என்று சொல்லு என்றாள்.அதுவரை வந்த தூக்கமெல்லாம் போய் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு அவரை கவனிக்க தொடங்கினேன்.


மைக்கெல்லாம் இல்லையே இத்தனை பேருக்கு அவர் பேசுவது கேட்குமா? என்று யோசித்தபோதே அவர் லேசாக தொண்டையை சரி செய்வது போல ஒரு சத்தம் கொடுத்தார். உடனே அங்கு நிலவிய அமைதியை கண்டு எனக்கு ஆச்சரியமாக போய் விட்டது. கம்பீரமான குரலில் பேச ஆரம்பித்தார்.அவர் பேசியது வரிக்கு வரி தற்போது எனக்கு நினைவில் இல்லை ஆனால் சாரம்சம் என்னவென்றால், ஒரு மகளிர் விடுதியை பெயர் கெடாமல் நடத்துவது எவ்வளவு கடினம் என்றும் அதில் இருக்கும் பெண்கள் எப்படி சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றும், பெண்களை நம்பி தனியாக இருக்க விடும் பெற்றொருக்கு நாம் செய்யும் கடமை, இதைப்பற்றியெல்லாம் ரொம்ப நேரம் பேசினார்.


பிறகு உள்ளே தனியாக நின்றிருந்த பள்ளிக்கூட பெண்ணை ஒருத்தியை கூப்பிட்டார். இத்தனை நேரம் நான் சொன்னதையெல்லாம் கேட்டாயே நீ செய்தது சரியா என்று சொல். உங்கம்மாவிற்கு தகவல் அனுப்பட்டுமா? இல்லவிட்டால் நீ ஒழுங்காக இருக்கிறாயா என்றெல்லால் அவளிடம் கேட்டு அவளை மிகவும் கடிந்து கொண்டார்.




அப்பொழுதுதான் என் தோழி சொன்னது எனக்கு புரிந்தது. ஆனால் அவளை எதற்கு திட்டுகிறார் என்று எங்களுக்கு புரியவில்லை, எதற்கு திட்டுகிறார் என்று நாங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ள, கூட்டத்தில் சல சலப்பு ஏற்பட்டது.



உடனே அலமேலு அம்மா எல்லோரும் சற்று பேசாமல் இருங்க, இந்தப்பெண் என்ன செய்தாள் என்று சொல்லுகிறேன். உள்ளே தனியாகத்தான் இந்தப்பெண்ணிடன் பேசிப்பார்த்தேன் ஆனால் அவள் தான் செய்த தவறைப் பற்றி கவலை இல்லாமல் எதிர்த்துப்பேசுகிறாள் அதனால் உங்கள் எல்லோர் முன்னிலையும் அவள் என்ன செய்தாள் என்று சொல்லுகிறேன்,16 வயது கூட ஆகாத இந்த பெண் பள்ளிக்கூடம் கூடபோகாமல்  நேற்று ஒரு பொறுக்கி பையனுடன்(இந்த வார்த்தையை குறிப்பிடலாமா என்று தெரியவில்லை ,ஆனால் அவர் சொன்ன வார்த்தையை அப்படியே சொல்லுகிறேன். அந்த அமைதியான சூழ்நிலையில் அழுத்தம்திருத்தமாக அவர் உபயோகித்த வார்த்தை என்னால் மறக்க முடியவில்லை.) சினிமா பார்க்க சென்றிருந்தாள் . அவள் செய்தது சரியா? அவளுக்கு அப்பா கூட கிடையாது அவளுடைய அம்மா வீட்டு வேலை செய்து கஷ்டப்பட்டு அவளை படிக்க வைக்கிறாள். என்று சொல்லிவிட்டு அந்தப்பெண்ணை பார்த்து உங்கம்மாவை வரச்சொல்லி உன்னை ஊருக்கு அனுப்பி விடுகிறேன் நீ இங்கு இருக்க வேண்டாம் விடுதிக்கு கெட்ட பெயர் வேண்டாம் என்று சொல்ல, அதுவரை பேசாமல் நின்றிருந்த அந்த சின்ன பெண் அலமேலு அம்மாவை பார்த்து,  நிறுத்துங்கம்மா, திட்டிக்கிட்டே போறீங்க,  நீங்க கூடத்தான் நேற்றைக்கு சினிமாவுக்கு சார் கூட வந்திருந்தீங்க எனவும், நாங்களெல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டோம்.


பதிவு பெரியதாகிவிட்டது. அடுத்த பதிவில் தொடருகிறேன்..

அன்புடன்
ரமாரவி.
------------------------------------------------------------------------------------------------------------------

சனி, பிப்ரவரி 11, 2012

விருது..

பதிவுலகம் சென்ற சில வாரங்களாக சற்று சுவாரசியம் குறைந்து பதிவுகளும் குறைந்தும் காணப்பட்டது. சில வாரங்களுக்கு முன், ஒரு நாள் பதிவு பக்கம் வர இயலாமல் அடுத்த நாள் பார்த்தால் என்னுடைய டாஷ் போர்டில் கிட்டத்தட்ட 25/30 பதிவுகளுக்கு மேலாக புதிய பதிவுகள் சேர்ந்திருக்கும்.  கடந்த சில வாரங்களில் இரண்டு மூன்று நாட்கள் நான் பதிவுகளை படிக்காவிட்டாலும் டாஷ் போர்டில் 8/10 பதிவுகளுக்கு மேல் இருப்பதில்லை.இது பற்றி பதிவர் இந்திராவும், தமது, டல்லடிக்கும் பதிவுலகம் என்கிற பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் கடந்த ஒரு வாரமாக பதிவுலகம் சற்று பரபரப்பாக இருக்கிறது. காரணம் இரு விருதுகள்.

சில தினங்களுக்கு முன், தமது வனப்பு. வலப்பதிவில் திருமதி.சந்திரகெளரி எனக்கு ஜெர்மனிய விருதான,  'லிப்ஸ்டர் பிளாக் ' விருது வழங்கி கெளரவித்தார். இவ்விருதை 5 பேர்களுக்கு பகிர்ந்தளிக்கவும் கோரியிருந்தார்.நன்றி சந்திர கெளரி.

                                                   

அதேபோல தமது, தீதும் நன்மையும் பிறர் தர வாரா,  வலைப்பதிவில் திரு ரமணி அவர்கள் எனக்கு, 'வெர்சடைல் பிளாகர் ' விருது வழங்கி கெளரவித்து உள்ளார்.மிக்க நன்றி ரமணி சார்.
                                                                நன்றி : சகோதரர் கணேஷ்

இம்மாதிரி பதிவுலகம் சுவாரசியம் பெறக் காரணமாக இருக்கும் இந்த விருதுகளை நான் மிகவும் சந்தோஷத்துடன் வரவேற்கிறேன். சந்தோஷத்தினை நாம் பகிர்ந்து கொள்ளும் பொழுது அது பன் மடங்காக பெருகுகிறது.இந்த விருதினை பதிவு எழுதும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

இந்த விருதுகளை நான் 5 பேர்களுக்கு வழங்க வேண்டுமென்பதால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்....

லிப்ஸ்டர் பிளாக் விருது:

1. தன்னுடைய நகைச்சுவை எழுத்தினால் நமது மனதை கொள்ளைக்கொண்ட

2.தம்முடைய அனுபவங்களை மிக அழகாக நம்முடன் பகிர்ந்து கொள்ளும் கோவை2தில்லி பதிவர் ஆதி வெங்கட்.

3.மனதில் தோன்று எண்ணங்களை சிறப்பாக நம்முடன் பகிர்ந்து கொள்ளும் மன்னை மைந்தர்களின் ஒருவன் - மாதவன்.

4.சிறந்த சுற்றுலாத்தலங்கள்,சிறந்த உணவு வகைகள்,சரித்திர புகழ் பெற்ற இடங்கள் என பல விஷ்யங்களை நம்முடம் பகிர்ந்து கொள்ளும் கோவை நேரம் - ஜீவானந்தம். 

5.தெரிஞ்சுக்கோங்க என்று பல சுவாரசியமான தகவல்களை நமக்கு தெரியப்படுத்தும், இக்கரையும்...அக்கரையும்- குணசேகரன்.




வெர்ஸடைல் பிளாகர் விருது.


1. புத்தக விமர்சனங்களின் மூலம் பல சிறப்பான புத்தகங்களை நமக்கு அறிமுகப்படுத்துவதுடன்,தம்முடைய அனுபவங்களையும் அருமையாக பதிவிடும், திரு.ஆர்.கோபி.

2.தமது அற்புதமான எழுத்தினால் நமது கருத்தை கவரும், திருமதி. ஹூஸைனம்மா.


3. சுவாரசியமான பதிவுகளை பதிவிட்டு நமது எண்ணத்தினை கவரும், திரு.வெங்கட் நாகராஜ்.

4. நகைச்சுவையான பதிவுகளை தந்து நம்மை மனம்விட்டு சிரிக்க வைக்கும் தக்குடு.


5.சுவாரசியமான் அனுபவங்களையும்,மணம்வீசும் கிராமியக்கதைகளையும் பதிவிடும்,  மனசு --சே.குமார்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்

ரமாரவி.
-----------------------------------------------------------------------------------------------------------------------

வியாழன், பிப்ரவரி 09, 2012

மங்களூர் சுற்றுலா--6 (நிறைவு)





மங்களூருக்கு போகும் பொழுது நாங்கள் இரவில் பயணம் செய்தோம்.அதனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலான மலைவழிப்பாதை பயணம் எவ்வாறு இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் திரும்பி வரும் பொழுது பகலில் பயணம் செய்ததால் பாதையை பார்க்க முடிந்தது.


மலைவழி பாதை என்பதால் இயற்கை காட்சிகளை ரசிக்க ஆவலோடு இருந்தோம். மங்களூரை விட்டு கிளம்பி சுமார் 1/2 மணி நேரத்திலேயே மலைப்பாதை ஆரம்பித்து விட்டது.


தேசிய நெடுஞ்சாலையாக இருந்த போதிலும்,பாதை பராமரிப்பு நன்றாக இல்லை. சாலை மத்தியில் பெரிய உடைப்புகள் குழிகளோடு இருந்தது.
நாங்கள் பிரயாணித்த வண்டி பல குலுக்களோடு மெதுவாக மலை ஏறியது.
சில இடங்களில் பாதையே இல்லை. அந்த இடங்களை கடக்கும் பொழுது சற்று திகிலாகத்தான் இருந்தது. மலைப்பாதைகள் (இந்தப் பகுதியில் சுமார் 2000 அடிக்கு மேல் இருக்கும் ) இப்படி பராமரிக்கப்படாமல் இருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.






ஆனால் இவற்றையெல்லாம் மீறி மேற்கு தொடர்ச்சி மலை அழகு எங்களை ஈர்த்து விட்டது. இந்த குலுக்கல்கள், ஆட்டங்களை மறந்து மலைத்தொடரின் அழகை ரசிக்க ஆரம்பித்தோம்.














இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு, மலை வழி பாதை முடிந்து சிறிய சரிவுகளைக்கொண்ட குன்றுப்பகுதி பயணம். இந்தப்பகுதி பயணம் மிகவும் நன்றாக இருந்தது.

சரிவுகளின் நிறைய காப்பிச் செடிகள் பயிரிட்டு இருக்கிறார்கள். காப்பித் தோட்டங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக குளு குளு என்று இருக்கிறது. காப்பிச்செடிக்கு அதிக வெயில் கூடாது என்பதால்.5 /10 அடி இடைவெளியில் சில்வர் ஓக் என்கிற மரத்தை பயிரிட்டிருக்கிறார்கள். இம்மரம்,தென்னை மரத்தைப்போல் தண்டுப் பகுதிகளில் கிளைகள் இல்லாமல் 30/40 அடி உயரம் வளர்கிறது.(இதன் தண்டுப்பகுதியும் இலைகளும் வெயில் படும் பொழுது மிகவும் அழகாக வெள்ளி மாதிரி ஜொலிப்பதால் இந்த மரத்திற்கு சில்வர் ஓக் என்று பெயர்.)

இம்மரங்களின் அடியில் பச்சை மிளகு கொடி பயிரிட்டிருக்கிறர்கள்.(climbers)
இந்த மிளகு கொடிகள் வெற்றிலை கொடி மாதிரியே சில்வர் ஓக் மரங்களின் தண்டை பற்றிக்கொண்டு 20 அடிக்கு மேல் வளர்ந்து இருக்கிறது. இந்த மிளகு கொடியின் இலை வெற்றிலையின் இலை போல இருக்கிறது.


சில இடங்களில் சில்வர் ஓக் மரதிற்கு பதில், தென்னை அல்லது ஈச்ச மரங்கள் காணப்பட்டது. ஆனால் பெரும்பாலும் சில்வர் ஓக் மரங்கள் தான்..





இந்த அழகான காப்பி தோட்டங்களை ரசித்த படியே ஹாசன் வந்து சேர்ந்தோம்.அங்கிருந்து பெங்களூருக்கு பாதை நன்றாக இருக்கிறது.4 வழி சுமார் 100 கி.மீ வரை போடப்பட்டுள்ளது. மீதி இடங்களில் 4 வழி பாதைக்கான வேலைகள் நடை பெற்று வருகிறது.இந்த 4 வழி பாதை மிளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டு விமானம்,ஏறு இறங்கும்(Runway) பாதை மாதிரி மிக அழகாக போடப்பட்டுள்ளது.


திகிலான மலைப்பாதை, அழகான இயற்கை வளங்களுடலான குன்று பாதை, சமவெளியில் 4 வழி பாதை ஆகியவற்றை ரசித்து கொண்டு சாயங்கால நேரத்தில் பெங்களூர் வந்து சேர்ந்தோம்.





இப்படியாக எங்களது மங்களூர் சுற்றுலா இனிதே நிறைவடைந்தது...இத்தனை நாட்களாக என்னுடன் மங்களூருக்கு பயணம் செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி.


அன்புடன்
ராம்வி.

-----------------------------------------------------------------------------------------------------------------

வியாழன், பிப்ரவரி 02, 2012

மங்களூர் சுற்றுலா--5.

மங்களூர் சுற்றுலா--1,   மங்களூர் சுற்றுலா--2,   மங்களூர் சுற்றுலா--3,
மங்களூர் சுற்றுலா--4

ST. MARY's ISLAND.




அந்த மோசமான படகில் பயந்து கொண்டே 1/2 மணி நேரப்பயணத்திற்கு பிறகு தூரத்தில் செயிண்ட்.மேரி தீவின் கரை தெரிய,ஆஹா!!இடம் வந்துவிட்டது 10 நிமிடங்களில் இறங்கி விடலாம் என்று நினைத்து அதுவரை மூச்சைப்பிடித்து பயந்து கொண்டு பயணம் செய்து கொண்டிருந்த நாங்கள் சற்று பயம் தெளிந்து மூச்சுவிட எத்தனித்த போது... ...படகு திடீரென்று சுமார் 80அடிக்கு மேல் ஆழம் இருக்கும் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டது.


படகு திடீரென்று நிற்க எல்லோருக்கும் அதிர்ச்சி..என்ன ஆயிற்று என நாங்கள் வினவ,படகோட்டிகள் இந்த படகு பெரிய படகு இதை கரைக்கருகில் கொண்டு செல்ல முடியாது,எனவே வேறு இரண்டு சிறிய படகுகள் வரும், நீங்கள் எல்லோரும் இந்த படகிலிருந்து அந்தப்படகில் ஏறிக்கொள்ள வேண்டும், அது உங்களை கரைக்கு அழைத்து செல்லும்,என்று சொல்ல, எனக்கோ பலத்த அதிர்ச்சி.

நடுக்கடலில் படகு மாற வேண்டுமா? தடுக்கி விழுந்தால் என்ன ஆவது?





இளம் கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ற மாதிரி என் பெண்களும் படகில் இருந்த இளவட்டங்களும் "wow !!what an adventure"  என்று படகுக்கு மாற தயாரானார்கள். நிறுத்தப்பட்டிருந்த இந்த பெரிய படகு நின்ற இடத்திலேயே முழு வட்டமாக சுற்றிக்கொண்டிருந்தது. அதை முதலில் உணரவில்லை, பிறகு உணர்ந்த பொழுது எனக்கு பயம் அதிகமானது. சிறு படகு ஒன்று அருகில் வர அதை பெரிய படகுடன் கயிறு கொண்டு கட்டி, இரண்டு பட கோட்டிகள் அக்கயிற்றை பிடித்துக்கொண்டார்கள்.கடலில் படகுகள்  தண்ணீரில் மிதப்பதால் சரியாக நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றது. என்ன தான் ஒன்று சேர்ந்தால் போல படகுகள் சுற்றினாலும்,  படகு மாறுவது கஷ்டமாக இருந்தது.


பிறகு மெள்ள நடந்து பெரிய படகிலிருந்து சிறிய படகில் தாவி ஏறிக்கொண்டோம். இனி இந்த மாதிரி பாதுகாப்பில்லாத பிரயாணங்களை தவிர்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே, தட்டுத்தடுமாறி சிறிய படகில் ஏறிக்கொண்டேன்.திரும்பி வரும் பொழுது இதே மாதிரி படகு மாற வேண்டும் என்று நினைத்தவுடன், எனக்கு அந்த தீவை ரசிக்கும் ஆசையே போய்விட்டது. பிறகு அந்த சிறு படகில் 10 நிமிட பயணத்தில் கரைக்கு சென்றது.கரையில் இறங்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.








இறங்கி நடக்க ஆரம்பித்ததும்,சற்று பயம் தெளிந்து என் பெண்களின் உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ள தீவினை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். சுமார் 1/2 கி.மீட்டருக்கும் குறைவான சுற்றளவே கொண்ட சிறு 
தீவு. நாங்கள் சென்றது மாலை சுமார் 5 மணி. சூரியன் கடலில் மாலைக் குளியலுக்கு தயாராக இருந்தார். இந்தப் பக்கம்கரையிலிருந்து நடக்க ஆரம்பிக்க 10 நிமிடங்களேயே அந்தபக்க கரை வந்து விட்டது. ஆங்காங்கே பெரிய மற்றும் சிறிய பாறைகள், ஒரு சில தென்னை மரங்கள்.....


ஒரு காலத்தில் அழகாய் இருந்திருக்க வேண்டும். இப்பொழுது அதிகமான மக்கள் வருகையால் பாழாக ஆரம்பித்துள்ளது.



தீவையும், கடலையும் ரசித்துவிட்டு, சுமார் 1 மணி நேரம் கழித்து திரும்பினோம். மறுபடி முதலில் சிறிய படகு, பிறகு பெரிய படகு என்று பயணித்து மால்பே கடற்கரைக்கு வந்தோம்.

இப்படியாக அதிர்ச்சி, பயம் சந்தோஷம் ஆகிய உணர்வுகளுடன் ஒரு படகுப்பயணம் மேற்கொண்டு விட்டு மங்களூருக்கு திரும்பினோம்....

உடுப்பிக்கு அருகில் புகழ் பெற்ற,  “மணிபால் பல்கலைக்கழகம்”உள்ளது. நேரமின்மை காரணமாக அங்கு செல்ல முடியவில்லை.




அடுத்த பதிவு மங்களூர் சுற்றுலா கடைசி பகுதி. திகிலான மலைப்பாதை பயணம் மற்றும் வழியில் நான் கண்டு ரசித்த இயற்கை காட்சிகள்........

----------------------------------------------------------------------------------------------------------------