செவ்வாய், பிப்ரவரி 05, 2013

கற்றுக்கொள்வோம்..



கற்றுக்கொள்வோம் என்று தலைப்பு கொடுத்திருக்கிறேன். எதை கற்றுக்கொள்ள வேண்டும்??


வாழ்கையில் நாம் வெற்றி பெற நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும், நிறைய புது விஷயங்களை முயற்சி செய்ய வேண்டும். அப்படி நாம் செய்யும் முயற்சிகள் 100% வெற்றியை கொடுப்பதில்லை.

வாழ்க்கைப் பயணத்தில் நாம் செய்யும் செயல்களுக்கு இரு முடிவுகள் உண்டு. ஒன்று வெற்றி மற்றொன்று தோல்வி.


 

வெற்றி கிட்டும் போது மகிழும் நமது மனம், தோல்வி அடையும் போது அதனை ஏற்றுக்கொள்ள தயங்குகிறது, அல்லது மறுக்கிறது. இதற்கு காரணம் நம் மனம் பக்குவம் அடையாமல் இருப்பதால்தான். வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்வில்லை. வெற்றி கிடைக்கும் பொழுது நன்றாக மகிழ்ச்சி கொள்ளலாம், கொண்டாடலாம். ஆனால் தோற்றுப்போகும் பொழுது அதை ஏற்க மறுத்து அந்த தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து திருத்திக் கொள்ளாமல் வருத்தப்பட்டு மனம் பேதலித்து போகாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். நாம் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் போதுதான் நமது தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் முயற்சி செய்ய நம் மனம் தயாராகும். அப்படி மீண்டும் மீண்டும் முயலும் பொழுது நாம் வெற்றி பெறுவது நிச்சயம்.

அதனால் நாம் வெற்றி பெற முதலில் தோல்வியை ஏற்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.



அது போல நாம் செய்யும் செயல்களுக்கான விளைவு நம்மையே சேரும். வெற்றி கிட்டும் பொழுது ஆஹா.. இது என்னுடைய செயல் என்று கொண்டாடிவிட்டு தோற்கும் பொழுது அதற்கான காரணத்தினை மற்றவர் மீது திணிக்கவும் வேண்டாம்.


நமக்கு தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி தெரியும் நூற்றுக்கணக்கான அறிவியல் ஆராய்ச்சிகளை செய்து phonograph, electricity distribution, electric bulb, Movie camera உட்பட பலவற்றை கண்டுபிடித்தவர். அவர் தனது ஆராய்ச்சிகளின் போது 100க் கணக்கான முறை தோல்வியை அடைந்திருக்கிறார் ஆனால் சற்றும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயன்று வெற்றி கண்டார். அவர் தோல்வியை கண்டு தயங்கி மீண்டும் முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் நமக்கு இவ்வளவு சிறப்பான  கண்டுபிடிப்புகள் கிடைத்திருக்குமா? இந்த தோல்விகளுக்கு பிறகு அவர் என்ன செல்லியிருக்கிறார் தெரியுமா?

”நான்  தோல்வி அடையவில்லை. 10000 முறை இது எப்படி செயல்படாது   என்று தெரிந்து கொண்டேன்”.





எவ்வளவு அற்புதமான விஷயம்?? நாமும் தோல்வியை ஏற்றுக்கொள்ள

கற்றுக்கொண்டு அதையே நமது வெற்றியின் முதல்படியாகக் 

கொள்ளுவோம்.




Accept failure. It will become your first step towards 

success.


நன்றி,

ரமாரவி.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------




செவ்வாய், ஜனவரி 29, 2013

பட்டம்....................


நாமெல்லாம் படித்த பொழுது கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு முடிந்ததும் பட்டமளிப்பு விழா வைத்து நமது பட்டத்தை (அதாவது சான்றிதழை) கையில் கொடுப்பார்கள். அப்பொழுதுதான் நாம் முதன் முதலில் பட்டம் பெறுவோம்.  அதற்கு பெயரே பட்டப்படிப்பு. இளங்கலை படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டோம் என்பதை குறிப்பிட்டே அதனை பட்டப்படிப்பு என்று கூறினார்கள்.






ஆனால் இப்பொழுது குழந்தைகள் பட்டப்படிப்பிற்காக கல்லூரியில் சேர்வதற்கு முன்னதாகவே மூன்று (அ) நான்கு முறை பட்டம் பெற்றுவிடுகிறார்கள். முதலில் play school  எனப்படும் 3 வயது குழந்தைகளுக்காக நடத்தப்படும் விளையாட்டு பள்ளிக்கூடம். அதில் ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால் ஒரு விழா எடுத்து அந்த குழந்தைகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் எல்லாம் ஏற்பாடு செய்து, ஒரு சான்றிதழை கொடுக்கிறார்கள். அந்த குழந்தைகள் சான்றிதழை பெறும் பொழுது அந்த காலத்தை போலவே ஒரு கோட், தொப்பி என உடை அணிவித்து வர செய்கிறார்கள். சிறு குழந்தைகளை அந்த உடைகளில் பார்க்கும் பொழுது பெற்றோருக்கு மிக சந்தோஷமாக இருக்கிறது. தமதுகுழந்தைக்கு 3 /4 வயது என்பதை மறந்து நிஜமாகவே ஏதோ சாதித்துவிட்டது போல தோன்றுகிறது.





அதன் பிறகு கே.ஜி வகுப்பு முடிக்கும் பொழுது ஒரு முறை, 10 வகுப்பில் ஒரு முறையும், 12ம் வகுப்பில் ஒரு முறையும் இது போல பட்டமளிப்பு விழா நடத்தப்படுகிறது.




என்னுடைய பெண்ணின் பள்ளிக்கூடத்தில் 27ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு  பட்டமளிப்பு விழா  (GRADUATION DAY)  நடத்தப்பட்டது. எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியான உடை எல்லாம் கொடுத்து, மிகவும் விமரிசையாக இந்த விழாவை அவர்கள் பள்ளியில் நடத்தினார்கள். ((இதற்கான உடை மற்றும் இதர செலவுகளுக்கு  கணிசமான ஒரு தொகையை நம்மிடமிருந்து வசூல் செய்து விட்டார்கள்)). பெற்றோராகிய நமக்கு இந்த பட்டமளிப்பு விழா பெரிய சந்தோஷம் ஒன்றும் இல்லை என்றாலும், குழந்தைகள் இதை மிகவும் எதிர்ப்பார்கிறார்கள். புதிய உடை, நகை என்றும், ஆடல் பாடல் என்றும் அவர்களுக்கு அது விரும்பத்தக்க முறையில் உள்ளது. குழந்தைகளின் கள்ளம்கபடமற்ற சந்தோஷத்தைப் பார்க்கும் பொழுது நமக்கும் அந்த சந்தோஷம் தொற்றிக் கொள்கிறது.




3/4 வயதில் என்னவென்று தெரியாது பட்டம் பெறும்  குழந்தைகள் 10/12 வகுப்பிற்கு வந்து பட்டம் பெறும் பொழுது ஒரு முதிர்ச்சி தெரிகிறது. பட்டமளிப்பு நிகழ்ச்சி அவர்களின் மன உறுதியை அதிகரிப்பதாக (morale booster) உள்ளது. நிகழ்ச்சி முடிந்ததும் குழந்தைகள் பேசிக்கொள்வதை கேட்டால் நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பெரும்பாலுமான குழந்தைகள் நாம் பட்டம் பெற்றுவிட்டோம் அது போல இறுதி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் எதிர்காலம் பற்றியும் பேசிக்கொள்கிறார்கள்.அப்படி பேசிக்கொள்வதுடன்,மேலும் அதிக உறுதியோடு படிப்பதற்கு தயாராகிவிடுவது நமக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.




10 வகுப்பில் பட்டம் பெறும் பொழுது 11ம் வகுப்பில் தாம் படிக்க வேண்டிய பாடப் பிரிவுகளைப் பற்றி அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வருகிறது. அதே போல 12 ம் வகுப்பிலும். என்ன பாடத்திட்டங்களைப் படிப்பதால் எந்தமாதிரியான மேல் படிப்பிற்கு அது உதவும் என்கிற மாதிரியான கலந்துரையாடல்களை பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கேட்க முடிந்தது.


அந்த காலத்தை போல் இல்லாமல் இந்நாளைய குழந்தைகள் தாம் படிக்க வேண்டியவற்றை பற்றியும்,வாழ்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டியது என்பது பற்றியும்  தெளிவான முடிவுடன் இருக்கிறார்கள். அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து அதற்கு தகுந்தாற் போல் பெற்றோர் நடந்து கொண்டால் (( இந்த படிப்புதான் படிக்க வேண்டும் என்று கட்டாய படுத்தாமல்)) மிகச்சிறந்த இளைய தலைமுறையை நாம் உருவாக்கலாம்.....



நன்றி
ரமாரவி.
-------------------------------------------------------------------------------------------------------------------


வெள்ளி, ஜனவரி 25, 2013

வானொலிப் பெட்டி.


செய்தி 1


Nirmalanandanatha Swamiji, of Sri Adichunchanagiri Maha Samsthana Math. Photo: K. Murali Kumar



ஆதிசுன்சனாகிரி மடம் கர்நாடகத்தின் நிலமங்கலா தாலுக்காவில் உள்ள ஒக்கலிகா என்கிற சமுகத்தை சேர்ந்தவர்களின் மடம்.1974 வருடத்திலிருந்து இந்த மடத்தின் தலைவராக இதன் முந்தய தலைவர் சுவாமி பால கங்காதரானந்தா கடந்த 13ம் தேதி இறைவனடி சேர்ந்ததனால், புதிய தலைவராக   72 வது பட்டதிற்கு சுவாமி நிர்மலாநந்தானந்தா நியமிக்கப்பட்டார்....


இது செய்தி ....இதில் என்ன விசேஷம்??


இந்த புதிய சுவாமி நிர்மலாநந்தானந்தா சென்னை ஐ.ஐ.டி யில் எம்.டெக். பட்டம் பெற்றவர்.  இவரது பூர்வ பெயர் நாகராஜு.1969ல் பிறந்த இவர் மைசூரில் பொறியியல் பட்டப்படிப்பு பெற்று பிறகு 1996 ம் வருடம் சென்னை ஐ.ஐ டியில் எம்.டெக் பட்டம், மடத்தில் சந்நியாசியாக சேர்ந்த பிறகு பெற்றார். ஒரு  எம் .டெக். பட்டம் பெற்றவர் அதுவும் ஐ.ஐ.டியில் பெற்றவர் மடாதிபதியாக நியமிக்கப்படுவது  என்பது  சிறப்பு அல்லாவா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------

செய்தி 2:


Raid team rescues 50 child laborers...

The children, from north and east India, worked in cottage industries making gunny bags and incense sticks. Photo: Sampath Kumar G.P.


Apple fires supplier after audit uncovers underage workers...

சீனாவின் செங்காய் நகரத்தில் உள்ள  ஆபீள் கம்பெனியின் சப்ளையரான Real Faith Pingzhou Electronics (PZ). என்கிற சீன தொழில்நுட்ப நிறுவனத்தில் சுமார் 70 க்கும் மேற்பட்ட  16 வயதுக்கு கீழான குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. அதனால் ஆப்பிள் PZ.எனப்படும் அந்த சீன நிறுவனவனத்துடனான ஓப்பந்தத்தை ரத்து செய்தது.......

குழந்தை தொழிலாளர் பிரச்சனை இந்தியா சீனா மட்டுமில்லை உலகத்தில் பல்வேறு நாடுகளில் இருக்கிறது. International Programme on the Elimination of Child Labour (IPEC) எனப்படும் குழந்தை தொழிலாளர்களை நீக்குவதற்காக 1992 ல் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு 88 நாடுகளில் குழந்தை தொழிலாளர்களை நீக்குவதற்காக செயல்பட்டு வருகிறது.

எவ்வளவு நிறுவனங்கள் பாடு பட்டால் என்ன?? போதிய படிப்பறிவும், விழிப்புணர்வும் இல்லாத வரையில் இந்த பிரச்சனையை ஓழிக்க முடியாது..

------------------------------------------------------------------------------------------------------------------------------------

கொசுரு.........


 பணம் பெரிய விஷயமில்லை வாழ்கை துணைதான் அதிக முக்கியம் என  திருமணம் செய்து சீக்கிரமாக வாழ்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று தற்கால இளைஞர்கள் அதிகம் விரும்புகிறார்களாம். .......ஆனால் இளைய பெண்களோ அதற்கு நேர் மாறாக வாழ்கை துணையைப்பற்றி அதிகம் அலட்டி கொள்ளாமல், பணம்தான் முக்கியம், நல்ல வேலை சம்பாத்தியம் என்று சுதந்திரமாக இருக்க ஆசை படுகிறார்களாம்.




இது என்ன செய்தி??

12ம் வகுப்பில் உளவியலை ஒரு பாடமாக படிக்கும்  எனது மகளின்  திட்ட அறிக்கை (project report..).

சில கேள்விகளை தயார் செய்து 18-20 வயதுக்குட்பட்ட சுமார் 50 பேர்களிடம் அவளால் நிகழ்த்தப்பட்ட கணக்கெடுப்பின் முடிவு இது...


நன்றி
ரமாரவி..



திங்கள், ஜனவரி 07, 2013

பயம்.......




எனக்கு சிறு வயது முதலே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம்.   4 /5 ம் வகுப்புகளில் இருந்த போது ஆனந்த விகடன்,கல்கி குமுதம் போன்றவற்றில் ஜோக்குகள் படிக்க தொடங்கி,பிறகு மெதுவாக சிறுகதைகள் படிக்கும் பழக்கமும் வந்தது. அதன் பிறகு 12ம் வகுப்பு படிக்கும் பொழுது நாவல்கள் படிக்க தொடங்கினேன்.முதலில் எனக்கு துப்பறியும் நாவல்கள்தான் அதிகம் பிடித்தது.  கல்கி அவர்களின் நாவல்கள் படிக்க ஆரம்பித்ததும்,சரித்திர நாவல்கள் மிகவும் பிடிக்க ஆரம்பித்தது.பிறகு மெதுவாக சமூக நாவல்கள்,அறிவியல் சம்பத்தப்பட்ட புத்தகங்கள் என எல்லாவற்றையும் படிக்க தொடங்கினேன்.


கல்லூரி படிப்பு முடித்ததும் அரசு பணியில் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன உத்தரவிற்காக காத்திருந்த போது நான் அதிகமாக படித்தேன்.காலையில் மாவட்ட நூலகத்திற்கு சென்று இரண்டு புத்தகங்களுடன் திரும்பி வந்து உடன் படிக்கத்தொடங்கி விடுவேன். இரண்டு நாட்களில் இரு  புத்தகங்களையும் முடித்துவிட்டு வேறு இரு புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பேன்.சில சமயம் இரு புத்தகங்களையும் ஒரே நாளில் முடித்துவிட்டு காலையில் திரும்ப நூலகம் செல்வதற்காக ஆவலுடன் காத்திருந்ததும் உண்டு.


சுமார் 25 வருடங்களுக்கு முன் பெரும்பாலும் எல்லோருக்கும் அரசு,அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களிலேயேதான் வேலை இருக்கு. அதனால் இரவு தாமதமாக வருவது எல்லாம் கிடையாது.8 அ 8.30 மணிக்குள்ளேயே வீட்டு வேலைகள் முடிக்கப்பட்டு,சிறுது நேரம் வானொலியில் பாடல்கள் பிறகு செய்திகள் கேட்டுவிட்டு 9.30 மணிக்குள் தூங்கிவிடுவோம். இப்பொழுது இருப்பது போல தொலைக்காட்சி,கணணி எல்லாம் கிடையாது. அதலால் வானொலிப்பெட்டிதான் பொழுது போக்கு சாதனம்.


சில சமயம் நூலகத்திலிருந்து எடுத்து வரும்புத்தகத்தை பகலில் படிக்க முடியவில்லை என்றால் இரவு படிக்க ஆரம்பிப்பேன்.ஆனால் வீட்டில் வேலைகள் முடித்து எல்லோரும் தூங்கச்சென்று விட்ட பிறகு என்னால் படிக்க முடியாது. இரவு கண் விழித்து படித்தால் உடல் நலத்திற்கு தீங்கு என்று அம்மா இரவு படிப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.சுவாரசியமாக படித்துக்கொண்டிருக்கும் எனக்கு புத்தகத்தை மூடவே மனம் வராது. இருந்தாலும் விளக்கு அணைத்து விட்டு எல்லோரும் படுத்துக்கொண்டு விட்டால் என்னால் படிக்க முடியாது.நானும் படுத்துகொண்டு விடுவேன் ஆனால் தூக்கம் வராது.அடுத்து கதையில் என்ன நிகழ்திருக்குமோ என்கிற ஆர்வம் என்னை தூங்கவிடாது. 


சற்று பொறுமையாக எல்லோரும் தூங்குவதற்கு காத்திருப்பேன். பிறகு மெள்ள எழுந்து அடி மேல் அடி வைத்து சத்தம் போடாமல் பக்கத்து அறைக்கு சென்று படிக்க ஆரம்பிப்பேன்.அறையின் மூலைக்கு சென்று சுவற்றில் சாய்ந்து கொண்டு தரையில் சரிந்து உட்கார்ந்து கொண்டு மடியில் புத்தகத்தை வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவேன். அவ்வளவுதான் புத்தகத்தை தவிர உலகில் வேறு எதுவே இல்லை என்பது போல ஒரு உணர்வுதான் நான் என்னையே மறந்திருப்பேன்.பிறகு முழுவதும் படித்து முடித்த பிறகு கூட சுய நினைவுக்கு வர மாட்டேன். முடிவுப்பகுதியை மறுபடியும் படிப்பேன்.


அதன் பிறகு புத்தகத்தை மூடும் பொழுது ஏதோ பெரியதாக சாதித்துவிட்ட மாதிரி இருக்கும்.ஒரு சில வினாடிகள் என்னைச்சுற்றி என்ன நிகழ்கிறது என்கிற உணர்வே இருக்காது. பிறகு மெல்ல நிசப்தமான அந்த சூழ்நிலையை உணர்வேன். நிசப்தம் என்றால் அப்படி ஒரு சத்தமற்ற தன்மையாக இருக்கு. அதை உணர்ந்த உடன் அடி வயற்றிலிருந்து ஒரு பயம் உடல் முழுவது ஆக்கிரமித்துக்கொள்ளும். இடத்திலிருந்து அசைய கூட முடியாது. அந்த பயத்தை உணர்ந்தவுடன் உடல் வியர்த்து நடுங்க அரம்பிக்கும். மின் விசிறி சுழலுகிறதா என்று பார்பதற்கு தலையை நிமிர்த்த கூட தைரியம் இருக்காது. மெதுவாக கண்களை மட்டும் உயர்த்தி மின் விசிறி சுற்றுவதை பார்க்கும் பொழுது அத்தனை நேரம்  காதுகளில் விழாமல் இருந்த அதன் சத்தம் மெதுவாக காதுகளில் விழுந்து எனது பயத்தை மேலும் அதிகரிக்கும். பிறகு மெதுவாக கடிகார சத்தம்,   சுவற்றுக்கோழி கத்தும் சத்தம், தெருவில் நாய் குரைக்கும் சத்தம், எங்கோ தூரத்தில் வேகமாக செல்லும் ஒரே ஒரு வாகனத்தின் சத்தம் என்று மெதுவாக ஒவ்வொரு சத்தமாக கேட்கும்,

ஆனால் எல்லா சத்தங்களையும் மீறி அந்த இரவின் நிசப்தம் இருக்கிறதே அதைதான் அதிகம் உணர முடியும்.அந்த உணர்வு, அந்த பயம்...என்னை இருக்கும் இடம் விட்டு நகர விடாது. அதுவும் ஏதாவது திகில் நாவல் அல்லது  துப்பறியும் நாவல் படித்திருந்தால் போச்சு.................அம்மா அப்பாவை கூப்பிடலாம் என்று மெதுவாக கூப்பிட முயன்றால் தொண்டை அடைத்துக்கொள்ளும் வாயிலிருந்து சப்தமே வராது. யாராவது எழுந்திருக்க மாட்டார்களா என்று மனது அடித்துக்கொள்ளும். அப்படியே உட்கார்ந்து இருப்பேன்.


என்னை மீறி தூக்கம் வரும் பொழுது அப்படியே சரிந்து கையை தலைகாணியாக வைத்துக்கொண்டு தூங்கிவிடுவேன்.காலையில்   “அப்படி என்ன புத்தகம் வேண்டியிருக்கு? உடம்புக்கு வந்தால் என்ன செய்வது?விளக்கை கூட அணைக்காமல்”, என்கிற அம்மாவின் பாசமான குரலைக் கேட்கும் போது என்னுடைய பயமெல்லாம் காணாமல் போயிருக்கும். அடுத்த புத்தகம் எப்பொழுது படிக்கலாம் என்கிற ஏக்கத்தோடு எழுந்திருப்பேன்.




இது மாதிரி ஒரு நாள் மட்டும் இல்லை பல நாட்கள் படித்திருக்கிறேன்.அம்மா திட்டுவார்கள் என்று தெரிந்தும்,என்னுடைய பயம் தெரிந்தும்  நாவல் படிப்பதில் இருந்த ஆர்வம் என்னை படிக்க தூண்டியது. 


பல வருடங்கள் கழித்து சென்ற வாரம் ஒரு நாள் இது மாதிரி நள்ளிரவு தாண்டும் வரை ஒரு புத்தகம் படித்தேன்.சுமார் 1 மணி வரை படித்துவிட்டு புத்தகத்தை மூடும் பொழுது எனக்கு என்னுடைய பயம் நினைவுக்கு வந்தது. ஆனால் சிறு வயதில் நான் உணர்ந்த  பயத்தை இப்பொழுது உணரவில்லை. காரணம் .......வயது தந்த முதிர்ச்சியா? .அல்லது அப்பொழுது இருந்த அந்த நிசப்தம் இப்பொழுது இல்லாதாலா? தெரியவில்லை.   


முன் மாதிரி இல்லாமல், தற்போது  தனியார் துறை, மென்பொருள்துறை என்று பணி புரிவர்கள் அதிகம். பணி முடித்து இரவு தாமதமாக வருபவர்களும் அதிகம்.அதனால் நள்ளிரவு தாண்டியும், ஒரிரு வீடுகளில் கேட்ட தொலைக்காட்சி சப்தம், அடிக்கடி இல்லை என்றாலும், அவ்வப்பொழுது செல்லும் வண்டிகளின் சப்தம் என்று,.....அன்று நான் அனுபவித்த அந்த நிசப்தம் இப்பொழுது என்னால் உணர முடியவில்லை.


சரி அப்படி என்ன புத்தகம் படித்தேன், இரவு கண்விழித்து என்று கேட்கிறீர்களா? சுஜாதா அவர்களின் 24 ருபாய் தீவு. முன்பு எப்பொழுதோ படித்தது. மீண்டும் படித்தேன். அவருடை புத்தகங்களை எத்தனை முறை திருப்பிப்படித்தாலும் ஓவ்வொரு முறையும் முதல் முறை படிக்கும் பொழுது எற்படும் அந்த விறு விறுப்பு குறையாமல் இருக்கிறது.




நன்றி
ரமாரவி.