வெள்ளி, ஜனவரி 27, 2012

மங்களூர் சுற்றுலா---4

மங்களூர் சுற்றுலா--1.,    மங்களூர் சுற்றுலா---2..,  மங்களூர் சுற்றுலா--3.


சென்ற பதிவில் ஒரு கதை சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? அது--


File:Kanakadasa art.jpg

திம்மப்ப நாயகர் சுமார் 500 வருடங்களுக்கு முன் கர்நாடகத்தின் ஹாவேரி மாவட்டதில் உள்ள படா என்கிற கிராமத்தில் பிறந்தார்.அவர் குருபா எனப்படும் போர்வீரர்களின் பரம்பரையில் வந்ததால் சில காலம் கோட்டை காவல் பணியில் இருந்தார்.ஆனால் இயல்பாகவே கடவுள் பக்கி அதிக இருந்த காரணத்தால் அவர் குடும்ப தொழிலை விட்டுவிட்டு,வியாசராஜர் என்கிற குருவுடம் வந்து சேர்ந்துக்கொண்டார். வியாசராஜர் திம்மப்பாவிற்கு கனக தாசர் என்கிற பெயரை சூட்டினார்.

கனகதாஸர் புரந்தராஸரைப்போலவே பல நூறு பக்திப் பாடல்களை கன்னட மொழியில் பாடி இருக்கிறார். பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு அந்தந்த  கோவிலில் உள்ள தெய்வங்களை பாடி மக்களிடம் பெரு மதிப்பை பெற்றார்.
அவர் அப்படி ஒரு சமயம் உடுப்பி கிருஷ்ணரை தரிசிக்க விரும்பி உடுப்பி வந்தார். ஆனால் அவருடைய ஜாதியை காரணம் காட்டி கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.அதனால் மிகவும் மன வேதனை அடைந்த கனகதாசர்,கோவிலின் பின்பக்கம் சென்று சுவற்றின் அருகே நின்று கொண்டு கிருஷ்ணனை மனமுருகி வேண்டி பாடல்களை பாட ஆரம்பித்தார்.

அப்பொழுது கனக தாசர் நின்ற இடத்தில் சுவற்றில் ஜன்னல் மாதிரி ஒரு பிளவு ஏற்பட்டு,கிழக்கு முகமாக நின்று கொண்டிருந்த கிருஷ்ணர் மேற்கு முகமாக திரும்பி நின்று கனக தாசருக்கு தரிசனம் வழங்கினார். கனகதாசரும் மனங்குளிர உடுப்பி கிருஷ்ணரை தரிசித்தார்.

இதன் காரணத்தால் உடுப்பி கோவில் சன்னதியின் முக்கிய வழி அடைக்கப்பட்டு, கனகதாசருக்கு பகவான் காட்சியளித்த அந்த இடத்தில் ஜன்னல் அமைக்கப்பட்டு அதுவழியே மட்டுமே கிருஷ்ணனை தரிசிக்க வழி செய்யப்பட்டது.  அதிலிருந்து சாதாரண மக்களிலிருந்து பெரிய வி.ஐ.பி. வரையிலும், யாராக இருந்தாலும் உடுப்பி கிருஷ்ணனை கனகதாசர் தரிசித்த அந்த ஜன்னலின் வழியே மட்டுமே தரிசிக்க முடியும்..










உடுப்பி கிருஷ்ணனை தரிசித்துவிட்டு வெளியே வந்தோம்.கோவிலை சுற்றியுள்ள கடைகளில் மரத்தில் செய்யப்பட்ட பொருட்கள் நிறைய கிடைக்கிறது. உடுப்பிக்கு செல்லுபவர்கள்,மத்து வாங்க வர வேண்டும் என்கிற ஐதிகம் உண்டாம். அதனால் சிறு மத்து,வேறு சில பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு, அடுத்து நாங்கள் சென்ற இடம்,  “மால்பே கடற்கரை”.


மால்பே..





இது உடுப்பிக்கருகில் அமைந்துள்ள ஒரு சிறு இயற்கைத் துறைமுகமாகும். இந்தப் பகுதியில் முக்கிய தொழில் மீன்பிடித்தல்.மீன் பிடிக்கப் பயன் படும் சிறிய மற்றும் பெரிய மோட்டார் படகுகளும் இந்த துறைமுகத்தில் கட்டப்படுகிறது.





இந்தத் துறைமுகத்திலிருந்து கடலில் சற்று தொலைவில் உள்ள st.Mary's Island  என்கிற சிறு தீவுக்கு,ferry service  நடத்துகிறார்கள். துறைமுகத்திற்கு நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு 30/- ரூபாய். தீவுக்கு செல்ல ஒருவருக்கு 85 ரூபாய் படகு கட்டணம்.

படகில் பயணம் செய்ய வேண்டும் என்றவுடன்,ஆஹா.. என்று எல்லோருக்கும் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு cruise ship  எல்லாம் நினைவுக்கு வந்து சந்தோஷமாக படகு வருகைக்காக காத்திருந்தோம். ஆனால் வந்ததோ,10 பேர் ஏறினாலே கடலில்முழுகி விடும் போலிருந்த ஒரு அழுக்கு மீன் படகு. சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டோம், டிக்கட் எல்லாம் வாங்கியாச்சு போய் தான் பார்ப்போம் என்று படகில் ஏறுவதற்கு வரிசையில் நின்றோம்.அன்று விடுமுறை நாளாகையில் கும்பல் நிறைய, படகோ சிறியதாக இருந்தது. 



சரி நமக்கு அடுத்த படகுதான் என்று நின்றிருந்தோம்.ஆனால் வேகமாக வரிசை நகர்ந்தது எங்களையும் அந்த படகிலேயே ஏற்றிக்கொண்டார்கள். படகில் ஏறிக் கொண்டவுடன் பார்த்தால் சுமார் 40 அல்லது 50 பேர்களே செல்லக்கூடிய படகில் 150 பேர்களுக்கு மேல் இருந்தார்கள்.மிகவும் ஆபத்தாக இருக்கிறதே இறங்கிவிடலாமா என்று யோசித்து கொண்டிருக்கும்போதே படகு கிளம்பி விட்டது. சுமார் 20 நாற்காலிகளே போட்டிருந்தார்கள் மற்றவர்கள் நின்று கொண்டே வர வேண்டும். எப்படியோ ஆடிக்கொண்டே  படகு சென்றது. ஒரு 1/2 மணி நேரம் மூச்சைப் பிடித்துக் கொண்டு பயணப்பட்டு பிறகு பார்த்ததில் சற்று தூரத்தில் தீவு கண்ணில் பட்டது,சரி ஒரு 5 நிமிடங்களில் அங்கு சென்று விடலாம், கரைக்கு அருகில்தான் இருக்கிறோம் என்று நிம்மதி பெருமூச்சு விட எத்தனித்த பொழுது, ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.  அது...............

வியாழன், ஜனவரி 19, 2012

மங்களூர் சுற்றுலா---3

மங்களூர் சுற்றுலா---1     மங்களூர் சுற்றுலா---2

உடுப்பி....




உடுப்பி மங்களூரிலிருந்து சுமார் 60 கி.மி.தொலைவில் உள்ளது.   ‘உடு’ என்றால் ‘நட்சத்திரம்’ என்றும்,   ‘பா’  என்றால் , ‘தலைவன்’ என்றும் பொருள்படும், ‘உடுப்பா’ என்று அழைக்கப்பட்டு வந்த பெயர் மறுவி தற்போது உடுப்பி என்று அழைக்கப்படும் இந்த ஊரில் தான் புகழ் பெற்ற கிருஷ்ணர் கோவில் அமைந்திருக்கிறது.

காலை சுமார் 9 மணிக்கு மேல் உடுப்பி செல்வதற்கு மங்களூரிலிருந்து கிளம்பினோம்.

கேரளாவிலிருந்து கோவா செல்லும் தேசிய நெடுஞ்சாலை 66 ல் பயணம் செய்து உடுப்பியை அடைய வேண்டும்.வழியில் சூரத்கல் வருகிறது.
முன்னால் REC என்றும் தற்போது NIT என்றும் அழக்கப்படும் National Institute of technology,surathkal, இங்குதான் இருக்கிறது.





சூரத்கல்லுக்கு பிறகு பதுபித்ரி போன்ற சற்று பெரிய ஊர்களையும் சில சிறு கிராமங்களையும் தாண்டி சுமார் 1-1/2 மணி நேரத்தில் உடுப்பியை அடைந்து விடலாம்.

உடுப்பியை சென்றடைந்ததும் நாங்கள் முதலில் சென்றது அம்பல்பாடி என்கிற இடத்தில் அமைந்துள்ள ஜனார்தனா மஹா காளி கோவில்.இங்கு ஜனார்தனப்பெருமளுக்கும்,மஹாகாளிக்கும் தனித்தனி சன்னதிகள்.



அதன் பிறகு கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றோம்.உடுப்பி கிருஷ்ணர் கோவில் சுமார் 1000 வருடங்களுக்கு மேலாக பழமையானதாகும்.700 வருடங்களுக்கு முன் மத்வாச்சாரியார் இக்கோவிலை புனரமைத்து இப்பகுதியில் அவரால் ஸ்தபிக்கப்பட்டஅஷ்டமடங்கள் எனப்படும் 8 மடங்களால் நிர்வகிக்கப்பட ஏற்பாடு செய்தார்.
அந்த 8 மடங்களானவை:

கிருஷ்ணபூர மடம்
சீருர் மடம்
காணியூர் மடம்
சோடே மடம்
பலிமாரு மடம்
அடமாரு மடம்
பேஜாவர் மடம்
புத்திகே மடம்

இந்த மடங்கள் அனைத்தும் கோவிலின் அருகேயே அமைந்துள்ளன.

ஒவ்வொரு மடமும் இரண்டு வருடங்கள் கோவில் நிர்வாகத்தையும் பூஜைகளையும் கவனித்து கொள்கிறது.இரண்டு வருடங்கள் முடிந்த உடன்   “பரயாயா உற்சவம் ” எனப்படும் உற்சவத்தின்போது நிர்வாகம் அடுத்த மடத்திற்கு மாற்றப்படுகிறது. இந்த பரயாயா உற்சவம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு கோவில் நிர்வாகம் மாற்றப்படுகிறது.

நேற்று நடந்த (18-1-2012) பரயாயா உற்சவத்தின் போது சீருர் மடத்து நிர்வாகப்பொறுப்பு முடிந்து சோடே மடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த 8 மடங்களுக்கும் தனித்தனியாக மடாதிபதிகள் உண்டு. அந்த மடாதி பதிகள்தான் அவர்களுக்குறிய இரண்டு வருடங்களுக்கும் நிர்வாகப்பொறுப்பு மற்றும் தினசரி புஜை,வருடாந்திர உற்சவங்கள் ஆகியவற்றை கவனித்துக்கொள்கிறார்கள்.














நாங்கள் சென்ற சமயம் விடுமுறை நாள்,அதனால் மக்கள் அதிக அளவில் கிருஷ்ணனை தரிசிக்க வந்திருந்தார்கள், மடத்தினால் நடத்தப்படும் அன்னதானதிற்கு எங்களால் முடிந்த நன்கொடையை செலுத்தினோம்.அப்பொழுது கோவிலின் உள்ளேயே உள்ள மடத்து அலுவலகத்திற்கு சென்று இந்த ரசீதை காட்டி மடாதிபதியிடமிருந்து பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னார்கள்.நாங்கள் சென்ற போது சுமார் 100 பேர்கள் காத்திருந்தார்கள்.சிறிது நேரத்தில் மடாதிபதி வந்து எல்லோரையும் வாழ்த்தி தனித்தனியாக பிரசாதம் கொடுத்து,ரசீது வைத்திருந்தவர்களுக்கு மரத்திலான சிறு உடுப்பி கிருஷ்ணர் விக்கிரகம் கொடுத்தார். பிறகு மடத்திலேயே எல்லோருக்கும் மதிய உணவு அளித்தார்கள்.



கர்நாடகா உணவு வகைகளில் வெல்லமும்,கொப்பரையும் அதிக அளவு சேர்க்கப்படுகிறது.அதனால் இங்கு தயாரிக்கப்படும் சாம்பார், ரசம் ஆகியவை தித்திப்பாக இருக்கிறது.

மடத்தில் வாழையிலையில் உணவு அளித்தார்கள். நாங்கள் சாப்பிட்ட அன்று--முதலில் இலையின் ஓரத்தில் உப்பு . பிறகு வெள்ளரிக்காய் கோஸ்மலி,கருணைகிழங்கு காய்,கடலைப்பருப்பு சுண்டல்.அதன் பிறகு சாதம்.முதலில் ரசம் கொண்டு வந்தார்கள்,ரசத்திற்கு அடுத்தது பூசணிக்காய் சாம்பார்,சக்கரைப்பாகில் போடப்பட்ட மூன்று பருப்பு வடை,(வடையும் தித்திப்பாக இருந்தது.)  பிறகு பால் பாயசம்,(அரிசி மாவில் செய்யப்பட்டிருந்தது.) கடைசியில் மோர். கோவிலின் உள்ளேயே உணவு உண்ணும் பாக்கியம் அன்று எங்களுக்கு கிடைத்து.


உடுப்பி கோவிலில் தினசரி 100 கணக்கானோருக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது.கோவிலுக்கு பின்னாலேயே பெரிய மண்டபம் கட்டப்பட்டு அதில், காலை சுமார் 10 மணியிலிருந்து மதியம் 3 மணி வரையிலும்,பிறகு இரவு 7 மணியிலிருந்து 9 அல்லது 10 மணி வரையிலும் உணவு அளிக்கப்படுகிறது.



 மத்வாசாரியாரால் ஏற்படுத்தபட்ட புஷ்கரணியை (குளம்) தரிசித்துவிட்டு,பிறகு கிருஷ்ணனை தரிசிக்க சென்றோம். அப்போது நிர்வாகத்தில் இருந்த சீரூர் மடத்தின் அதிகாரி ஒருவர் தரிசனதிற்கு எங்களை அழைத்து சென்றதால் கூட்டம் அதிகம் இருந்தாலும் சற்று நிதானமாக தரிசிக்க முடிந்தது.


உடுப்பி கோவிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால்,கர்பகிரஹத்தின் முக்கிய கதவு வழி இல்லாமல் அதற்கு நேர் பின்புறமாக இருக்கும் ஒரு சிறு பலகணி யில் (ஜன்னல்) அமைந்துள்ள ஒன்பது துவாரங்கள் வழியாகத்தான் கிருஷ்ணனை தரிசிக்க வேண்டும்.பெருமளுக்கு பூஜை செய்பவர்களும் கூட முக்கிய கதவு வழியாக கர்பகிருஹத்துக்கு செல்வதில்லை.அருகே அமைந்துள்ள சிறிய கதவு வழியாகத்தான் சென்று தினசரி பூஜை ,அபிஷேகம் அலங்காரம் எல்லாம் செய்கிறார்கள்.





இதற்கு காரணம் ஒரு கதை உண்டு. அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்......




----------------------------------------------------------------------------------------------------------------





செவ்வாய், ஜனவரி 10, 2012

மங்களூர் சுற்றுலா---2.

மங்களூர் சுற்றுலா...1 ல் புலியைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லாவா,இங்கு மங்களூர் பகுதியில் கொங்கணி மற்றும் துளு பேசுபவர்கள் இடையில் புலி  ஏன் பசுவை அடித்து தின்னுகிறது என்பது பற்றி ஒரு சிறு கதை வழக்கத்தில் இருக்கிறது. அது---


ஒரு காலத்தில் புலியும் மாமிசம் தின்னாமல் இலை தழைகளைமட்டும் தின்று வந்ததாம்.அப்பொழுது ஒரு நாள் புலி ஒன்று காட்டில் இருந்த நெல்லிக்காய் மரத்தின் இலைகளையும் நெல்லிக்காய்களையும் சாப்பிட்டுவிட்டு, ஆற்றிற்கு சென்று நீர் குடித்ததாம். நெல்லிக்காயை சாப்பிட்டுவிட்டு நீர் குடித்ததால்,நீர் மிகவும் இனிப்பாக இருந்ததாம்.அது தெரியாத புலி,இன்று நீர் இனிப்பாக இருக்கிறதே அதற்கு காரணம் என்ன என்று சுற்றும் முற்றும் பார்த்த போது சற்று தூரத்தில் பசு ஒன்று நீர் குடித்துக் கொண்டிருந்ததாம்.புலி உடனே பசு குடித்த நீரே இவ்வளவு இனிப்பாக இருக்கிறதே,அப்போழுது பசு எவ்வளவு இனிப்பாக இருக்கும் என்று நினைத்து பசுவை கொன்று தின்றதாம். அன்றிலிருந்து புலி மாமிசம் சாப்பிட ஆரம்பித்துவிட்டதாம், என்று ஒரு கதையை சொல்லுகிறார்கள்.


மங்களூர் என்ற பெயர் இங்கு புகழ்பெற்ற மங்களாதேவி என்ற தெய்வத்தின் பெயரால் வழங்கப்படுகிறதாம்.

முதலில் மங்களா தேவி கோவிலுக்கு சென்றோம். இந்தப்பகுதியில் கோவில்கள் கேரள பாணியில் ஓடு வேயப்பட்டு இருக்கிறது. மிகப்பெரிய கோபுரங்கள் என்று ஏதும் இல்லை.மங்களாதேவி கோவிலும் அப்படியே இருந்தது.



 



அடுத்து கதிரி மஞ்சுநாதசுவாமி கோவில்.இக் கோவிலும் கேரள கோவில் மாதிரியே இருக்கிறது.

























அடுத்து நாங்கள் பார்த்தது St. Aloysisus chapel. இது 1880 ம் வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி.இதன் அருகில் உள்ள chapel லின் உள்ளே வரையப்பட்டுள்ள சிற்பங்கள் மிகச்சிறப்பு வாய்ந்தவையாக உள்ளது.( உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை.)

St. Aloysius College.jpg






மங்களூர்,நான் பார்த்தவரையில் அதிக பரபரபில்லாத சற்று அமைதியான ஊராக தெரிந்தது.தெருக்கள் அதிக கும்பல் இல்லாமல் இருந்தது.
கடைத் தெருக்களில் பெரிய கட்டிடங்கள்,மால் போன்றவை நிறைய காணப்பட்டது.இந்த தோன்றங்களை பார்க்கும் பொழுது சற்று மேல்தட்டு மக்கள் அதிகம் வாழும் ஊர்போல தோன்றியது.

அப்படியே சென்னையை பிரதிபலிக்கும் சீதோஷணநிலை. டிசம்பர் மாதத்திலும் நல்ல வெய்யில் காணப்பட்டது. நிறைய மரங்களை பார்க்க முடிந்தது. பெரும்பாலும் தென்னை மரங்களே அதிகமாக காணப்படுகிறது..அதிகமாக செவ்விளநீர் காய்கள் கிடைக்கிறது. இளநீரின் ருசி அமிர்தமாக இருக்கிறது.பிரதான மொழி கன்னடம் என்ற போதிலும், கொங்கிணி, துளு, பேரி(BEARY) போன்ற மொழிகள் அதிகமாக பேசப்படுகிறது.


அடுத்து நாங்கள் சென்றது மங்களூர் கடற்கரை.அரபிக்கடல்..சென்னை மெரீனா பீச் போல் இல்லாமல் மணல் பரப்பு மிகக்குறைவாக இருக்கிறது. சிறிது தூரம் மணலில் நடந்த உடனேயே கடல் நீரில் கால் நனைக்க முடிகிறது.

மாலையில் சென்றதால் சூரிய அஸ்தமனத்தின் அழகை பார்க்க முடிந்தது.அற்புதமான தோற்றத்துடன் சூரியன் கடலில் மறையும் அழகை கண்டு களிக்க முடிந்தது.







கடற்கரை அதிக கும்பல் இல்லாமல் இருந்தது.சுண்டல்,முறுக்கு பஜ்ஜி,மற்ற விற்பனையாளர்களின் தொந்தரவு இல்லாமல் மிக அமைதியாக இருந்தது.சுமார் ஒரு மணி நேரம் மணலில் உட்கார்ந்து எந்தத்தொந்தரவும் இல்லாமல் கடலில் அழகையும்,சூரிய அஸ்தமனத்தையும் அமைதியாக ரசிக்க முடிந்தது.

அடுத்த பதிவு--உடுப்பி பயணம்.

------------------------------------------------------------------------------------------------------------------






செவ்வாய், ஜனவரி 03, 2012

மங்களூர் சுற்றுலா...1.

அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

சில சொந்த வேலைகளின் காரணமாகவும்,மங்களூர்,உடுப்பி சுற்றுலா சென்று வந்ததாலும் பதிவு பக்கம் வர முடியவில்லை.ரொம்ப நாட்களாக உடுப்பி கிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்று ஆவலாக காத்திருந்தது, நிறைவேறியது.

--------------------------------------------------------------------------------------------------------------------

மங்களூர்....



சென்ற மாத கடைசியில்,ஒரு வியாழக்கிழமை இரவு மங்களூருக்கு கிளம்பினோம்.மங்களூர் கர்நாடக மாநிலத்தின் மேற்கு கடற்கரையில் அமைந்திருக்கும் சிறிய நகரம்.பெங்களூரிலிருந்து சுமார் 330 கி.மீ.தொலைவில் உள்ளது. பெங்களூரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை -48 ல் பயணம் மேற்கொள் வேண்டும்.பெங்களூரிலிருந்து வெளிவந்து தேசிய நேடுஞ்சாலையில் திரும்பியவுடன்,சுமார் 100 கி.மீ வரை சாலை மிகப்பிரமாதமாக அமைத்திருக்கிறார்கள்.4 வழி பாதை ,நடுவில் மிளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டு விமானப்பாதை மாதிரியான அமைப்பில் இருக்கிறது.அதன் பிறகு ஹாசன்,மற்றும் பேலூர் வரையிலும் பாதை நன்றாக இருக்கிறது.ஆங்காங்கே சாலையை விரிவு படுத்தும் பணி நடை பெற்று வருகிறது.பேலுரிலிருந்து சிறிது தூரத்திலேயே மலைவழி பாதை தொடங்கி விடுகிறது. மலைப்பாதை மிகச் சுமாராக இருக்கிறது,அங்காங்கே பள்ளம்.... சுமார் 3 மணி நேரம் மலை பாதையில் பயணப்பட்டு விடியற்காலையில் மங்களூரை அடந்தோம்.

(இரவு நேரத்தில் பயணம் மேற்கொண்டதால்,வழியில் வரும் இடங்களை சரியாக காண முடியவில்லை. திரும்பும் பொழுது பகலில் வந்தோம்,அப்பொழுது இடங்களையும் சாலைகளையும் நன்றாக பார்க்க முடிந்தது.)

முதலில் காலை உணவை முடித்துக்கொண்டு மங்களூருக்கு அருகில் பிலிகுலா நிசார்க தாமா (pilikula Nisarga Dhama) என்கிற மிருககாட்சி பூங்காவிற்கு சென்றோம்.



துளூ மொழியில் பிலி என்றால் புலி என்றும்,குலா என்றால் குட்டை என்று அர்த்தமாம். அந்த பகுதியில் உள்ள குட்டைக்கு தண்ணீர் குடிக்க காட்டு பகுதியிலிருந்து புலிகள் வந்து சென்றதால் அந்த இடத்திற்கு பிலிகுலா என்றுபெயர் வந்தது. தற்போது அந்த இடத்தில் தேசிய பூங்கா அமைத்துள்ளார்கள். சிறிய குன்று பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது இந்தப் பூங்கா.






































பூங்காவில் எடுத்த சில படங்கள்...








பிறகு நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த,  TAJ GATE WAY HOTEL லில் check in  செய்து விட்டு,ஹோட்டல் நிர்வாகத்தினால் மங்களூர் நகரை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 1/2 நாள் சுற்றுலாவிற்கு தயாரானோம்.




                              மங்களூரில் நாங்கள் தங்கியிருந்த Taj Gate Way Hotel.

           
மங்களூர் சுற்றுப்பயணம் தொடரும்.....


------------------------------------------------------------------------------------------------------------------