புதன், பிப்ரவரி 11, 2015

கவிதை., கவிதை.....






சாய்வு நாற்காலி
வெளிச்சம்
மூக்குக்கண்ணடி
நல்ல புத்தகம்.
.
.
.
.
இது வாழ்க்கை......




 “இங்க பாருடி நான் எழுதிய கவிதை ”

  “உனக்கு வயதாகிவிட்டது  நன்றாக தெரிகிறதும்மா”.

  “எப்படி ?”

  “நீ தான் எழுதியிருக்கியே   சாய்வு நாற்காலி, மூக்குக்கண்ணடி,                    வெளிச்சம் இதெல்லாம் வயதானதற்கான அடையாளம் “

 “அது சரி கவிதை எப்படி இருக்கு?”

 “கவிதையா அது? அம்மா நீ கவிதை எல்லாம் முயற்சி பண்ணாத!”

 “ஏண்டீ?”

  “இங்கபாருமா ஏதோ நீயும் எழுத்தாளின்னு???  நினைச்சு 4 வரி கிறுக்கிண்டு   இருக்கே அதோட நிறுத்திக்கோ”

 “அடிப்பாவி நான் எழுதறது நல்லாயில்லையா? ”நான் எழுதறதை படிச்சுட்டு  கருத்தெல்லாம் சொல்லறாளேடீ?”

  “அம்மா!  அது,... பாவம்  உன் முகத்துக்கு நேர சொல்லக்கூடாதுன்னு சொல்லுவா”  “நன்றாக எழுதி பேர் வாங்கறவா இருக்கா. உன்னமாதிரி எதையோ கிறிக்கிட்டு எழுத்தா அதுன்னு சொல்லற மாதிரி பேர் வாங்கறவாளும் இருக்கா”


?????????????????

-----------------------------------------------------------------------------------------------------------------



எனக்கு கவிதை எழுதத் தெரியாது. ஆனால் கவிதையை நன்றாக  ரசிக்கத்தெரியும்.  கல்லூரியில் படிக்கும் காலங்களில் நிறைய புத்தகங்கள் படிப்பேன்.  இரண்டு வரி ஹைக்கூ கவிதைகள் அதிகமாக வர ஆரம்பித்த காலம் அது.  அப்பொழுது   படிக்கும் பொழுது நினைத்துக்கொள்வேன்,  கவிதை என்ன பெரிய கஷ்டமா? ஒரு வரியை முழுமையாக எழுதாமல் ஒவ்வொரு வார்த்தையாக கிழே கீழே எழுத வேண்டும் அவ்வளவுதான் என்று.

ஒரு வாரப்பத்திரிக்கையில் ஹைக்கூ போட்டி ஒன்று நடந்தது. அதில் எனக்கு பிடித்த நிறைய கவிதைகளை நடுவர் நிராகரித்திருந்தார். அவர் கொடுத்திருந்த அதற்குரிய காரணங்களை படித்தபொழுதுதான் கவிதை எழுதுவது கஷ்டம் என புரிந்து கொண்டேன். எந்தப்புத்தகம், யார் நடுவர் , என்ன காரணங்கள் என்றெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் கவிதை எழுதுவது தனித்திறமை என்று நான் புரிந்து கொண்டது மட்டும் நினைவு இருக்கிறது.



கவிதை---எல்லாம் மனதிலிருந்து உதிக்கவேண்டும்.  அந்தத் திறமை நம்முடனே பிறந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் வயதின் முதிர்ச்சி எனக்கு அளித்த பாடம்.


அதனால் அதையெல்லாம் முயற்சி செய்யாமல், ஏதோ எனக்கு தெரிந்ததை கிறுக்கிக்கொண்டு இருக்கிறேன்.


ஆனால் அழகான கவிதை எழுதுகிறவர்களை கண்டால் சற்று பொறாமைதான்.

சில உதாரணங்கள்:-













எவ்வளவு அழகாக, சுவையாக இருக்கிறது? பொறாமை படாமல் என்ன செய்வது?




நன்றி

ரமாரவி
------------------------------------------------------------------------------------------------------------------

படங்கள் --நன்றி கூகிள்.





வெள்ளி, பிப்ரவரி 06, 2015

சும்மா இருப்பது.



அரசன் ஒருவன் நகர்வலம் போனான். வழியில் அவன் புகழ் பாடியவர்களுக்கு பரிசுகள், ஏழைகளுக்கு பொருட்கள் என வாரி வழங்கினான். நகரின் நடுவில் இருந்த மண்டபத்தை அவன் அடைந்த பொழுது அங்கு மண்டபத்தில் அமர்ந்திருந்த ஒருவன் அவனிடம் யாசித்து வந்தான். அவனைப்பார்த்த அரசன்  “நீ என்ன செய்கிறாய்” என்று கேட்டான். அவன்  “நான் சும்மாதான் இருக்கிறேன்” என்று கூறவே அரசன் சும்மா இருப்பவர்களுக்கெல்லாம் பொருள் கிடையாது என்றான்.
ஆனால் அவன் மந்திரியோ  “அரசே அவனுக்கும் ஏதாவது பொருள் கொடுங்கள் சும்மா இருப்பது மிகவும் கஷ்டம்” என்றான். அரசனுக்கு ஆச்சரியமாக போய்விட்டது.  “மந்திரி என்ன சொல்லுகிறீர்கள் சும்மா இருப்பது கஷ்டமா? கடினமாக உழைப்பதுதான் கஷ்டம்” என்றான்.


ஆனால் மந்திரி இதை ஓத்துக் கொள்ளவில்லை. அரசனுக்கு ஆச்சரியம் அதிகமாகிவிட்டது மிகவும் புத்திசாலியான தன் மந்திரி இவ்வாறு தவறாக சொல்லுகிறரே என்று. அவர்  “ மந்திரி சும்மா இருப்பது ஒரு கஷ்டமே இல்லை நானே அதை நிருபித்து காட்டுகிறேன். நாளை ஒரு நாள் முழுவதும் நான் சும்மா இருக்கப்போகிறேன்” என்றான்.


அது மாதிரியே மறு நாள் காலை அரசன் தன் பரிவாரங்களுடன் அரண்மனை தோட்டத்திற்கு சென்றான். மந்திரி, பரிவாரங்களை வெளியே நிறுத்துவிட்டு தானும் தோட்டத்திற்கு வெளியே நின்று கொண்டார். உள்ளே சென்ற அரசன் அங்கிருந்த மரம் செடி கொடிகளை பார்வையிட்டான்.

பிறகு  மண்டபத்தில் அமர்ந்து கொண்டான். அவனுடை நினைவுகள் தம் சிறு பிராயத்தில் அங்கு நண்பர்களுடன் விளையாடி கழித்த நாட்களை நினைத்து மகிழ்ந்தது. உடனே தற்காலத்தை நினைத்துக்கொண்டான். தன் அரசாங்கம் மனைவியர், குழந்தைகள் என்ற நினைவுகளிடையே இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோமே எதிரி நாட்டரசன் படை எடுத்து வந்தால் என்ன ஆகும்? தன்னுடை படை மிகவும் பலம் வாய்ந்தது எளிதில் அவர்களை வெற்றி கொள்ளலாம் அல்லது ஒரு வேளை தான் தோற்றால் இவ்வளவு அழகான நாடு  எப்படி பாழாகும்?  மனைவி மக்களை இழந்து எதிரியிடம் சிக்கி அந்த நாட்டு சிறையில் எப்படி வாடுவோம்?? என்ற எண்ணங்கள் அவனுக்கு ஏற்பட்டது. ஒரு நாழிகைப்பொழுதே சும்மா இருந்த அவன்  தன் மனைவியர் மக்கள், நாடு என்று எல்லாவற்றையும் இழந்து அயல் நாட்டுச் சிறையில் வாடுவது வரை எண்ணத்துவங்கிவிட்டான். அந்த எண்ணங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

உடனே  வெளியே ஓடி வந்து மந்திரியிடம், “மந்திரி சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது புரிகிறது. அந்த ஆளை வரவழித்து அவனுக்கு நிறைய பொருள் கொடுங்கள்” என்றானாம்.

இந்த கதையை கூறிவிட்டு வேடிக்கையாக என் மாமியார்  “அதற்குதான் என்னைப் போன்றவர்களுக்கு பென்ஷன் கொடுக்கிறர்கள்”  என்றார்.







ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் “an idle mind is the devil’s workshop” என்று. அது மாதிரி சும்மா இருந்தால் நம் எண்ணங்களே நமக்கு எதிரியாகிவிடும்.






---------------------------------------------------------------------------------------------------------------------
அதனால் இப்போ என்ன பண்ண போகிறேன் என்று கேட்கறீங்களா?
சும்மா இருக்கும் நான், சும்மா இருக்க விரும்பாமல், சும்மா இருப்பவர்களுக்காக   “சும்மா இருப்போர் சங்கம்”ஒன்றை சும்மா ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். சும்மா இருக்க விருப்பமுள்ளவர்கள் சேர்ந்து கொள்ளலாம். சும்மாதான் சேர்கை கட்டணம் ஏதும் கிடையாது.


நன்றி

ரமா ரவி.

திங்கள், பிப்ரவரி 02, 2015

வணக்கம்.

 கோடை விடுமுறை. என்பது அனைவருக்கும் 30 நாட்களிலிருந்து அதிகபட்டசம் 60 நாட்கள் இருக்கலாம் ஆனால்  எனக்கோ கிட்டதட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. படிப்பதோ எழுதுவதோ மறந்துவிடும் அளவிற்கு கடமைகள் செய்து முடிக்க வேண்டிய நிர்பந்தம். தற்பொழுது சற்று ஓய்வு கிடைத்துள்ளது.   இத்தனை நாட்கள் விட்டுப்போன  பதிவுகளை படிக்க தொடங்கியிருக்கிறேன்.


நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுவதால் வழக்கம்போல் ஆன்மீக பதிவுடன் ஆரம்பிக்கிறேன்.


உக்கிர நரஸிம்மர். மத்தூர்.

பெங்களூரிலிருந்து  மைசூர் செல்லும் வழியில் மத்தூர் என்கிற இடத்தில் அமைந்துள்ளது புகழ் பெற்ற இந்த உக்கிர நரஸிம்மர் கோவில்.

துவாபர யுகத்தின் கடைசியில் அர்ஜுனன் கிருஷ்ணரிடம் அவருடைய நரஸிம்ம அவதாரத்தை காணவேண்டி விருப்பம் தெரிவித்தானாம். கிருஷ்ணர் அதற்கு பிரகல்லாதனுக்காக தான் எடுத்த நரஸிம்ம அவதார திருக்கோலத்தை காண வேண்டுமானால் இந்த மத்துருக்கு சென்று காண வேண்டும் என்று தெரிவிக்க அர்ஜீனனும் இங்கு மத்தூருக்கு வந்து  இங்கு எட்டு திருக்கரங்களுடன் காட்சி அளித்த நரசிம்மரை வழிப்பட்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது.  அர்ஜுனன் வந்து வழிபட்டதால் இந்த மத்தூருக்கு முன்  காலத்தில் அர்ஜுனபுரி என்று பெயர் இருந்ததாகவும் தெரிகிறது.

இங்கு நரசிம்மர் எட்டு திருக்கரங்களுடன், நரஸிம்ம நாயகி மற்றும் செளமிய நாயகி என்கிற இரு தேவியர்களுடனும் கட்சியளிக்கிறார்.







காஞ்சிக்கண் வரதர்.

உக்கிர நரஸிம்மர் கோவிலுக்கு மிக அருகிலேயே காஞ்சிக்கண் வரதராஜர் கோவில் உள்ளது.

காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் வரதராஜரைப்போலவே மிக அழகான நின்ற திருக்கோலத்தில் வரதர் காட்சியளிக்கிறார். இக்கோவிலின் பட்டர்கள் வரதர் அங்கு கோவில் கொண்ட வரலற்றை மிக அழகாக தெரிவித்தார்கள்.

விஷ்ணுவர்தனன்,(பிட்டிராஜன்)  என்கிற அரசன் வயதான தன் தாயாரின் கண் பார்வை சரி இல்லாததை நினைத்து வருந்த அவனின் மந்திரிகள் காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதனை சென்று சேவித்தால் கண்பார்வை சரிபடும் என தெரிவித்தார்கள்.  மிகவும் வயது சென்ற தாயாரை வெகுதூரம் அழைத்து செல்வது கடினம் என வருத்தத்துடன் இருந்தான், அச்சமயம் அங்கு எழுந்தருளிய ஸ்ரீ ராமானுஜரை அரசன் சேவிக்க சென்ற போது அரசனுடைய வருத்தத்தை அறிந்த அவர் காஞ்சியில் உள்ளது மாதிரியே மத்தூரில் வரதருக்கு ஒரு கோவில் கட்டி 48 நாட்கள் பூஜை செய்து வழிபட அரசனுக்கு தெரிவித்தார். அது மாதிரியே அரசனும் கோவில் கட்டி பூஜை செய்ய அவனுடை தாயாருக்கு கண் பார்வை சரியாகி 48 வது நாளில் வரதன் அவருக்கு காட்சி அளித்ததாக தல புராணம்  சொல்லப்படுகிறது.


காஞ்சிபுரத்தில் எப்படி படிக்கட்டுகளில் ஏறிச்சென்று வரதனை வழி பட வேண்டுமோ அவ்வாறே இங்கு சுமார் 15/20 படிக்கட்டுகளில் ஏறிச்சென்றால் மிக அழகான 16 அடி உயரமான வரதனை தரிசிக்கலாம்.


ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இவருக்கு திருமஞ்சனம் , (அபிஷேகம்) செய்விக்கப்படுகிறது.






நன்றி

ரமா ரவி.
----------------------------------------------------------------------------------------------------------------------