குளுமையான கூர்க்கிற்கு சுற்றுலா என்பதனால் உடனடியாக கிளம்பிவிட்டோம். ( ஆனால் பல அலுவல்களுக்கு நடுவில் செல்ல வேண்டி இருந்ததால் இரு தினங்கள் மட்டுமே பயணம். ஆனால் மறக்க முடியாத பயணம்.)
கூர்க்...

உயர்ந்து பனிபடர்ந்து நிற்கும் இமைய மலைத் தொடரைப் பார்த்தால்,அதன் கம்பீரமான அழகு மனதை கொள்ளை கொள்ளும்.
ஆனால், எங்கு திரும்பினாலும் பசுமையை போர்த்திக்கொண்டு இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் குளுமை கண்ணையும்,மனதையும் அதிகம் கவர்ந்து விடுகிறது.
முதல் நாள் மைசூருக்கு சென்று அரண்மனை, கே.ஆர்.எஸ். அணை எல்லாம் பார்த்து விட்டு மைசூரிலேயே தங்கி விட்டோம். ஏற்கனவே மைசூர் சுற்றுலா பற்றி எழுதி விட்டதால் இங்கு கூர்க மட்டும் பார்க்கலாம்...((- மைசூர் சுற்றுலா.))
மறு நாள் காலை 7 மணிக்கு கூர்க்கிற்கு கிளம்பினோம். கூர்க் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையை அதிகம் உள்ளடக்கிய ஒர் மாவட்டம்.இதன் தலைநகர் மெர்காரா எனப்படும் மடிக்கேரி ஆகும்.ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் மெர்காரா. கர்நாடகத்தில் இதற்கு பெயர் மடிக்கேரி.
11ம் நூற்றாண்டு வரை குடகின் வட பகுதி, கடம்பர்களாலும், தென் பகுதி கங்கர்களாலும் ஆளப்பட்டு வந்தது. 11ம் நூற்றாண்டில் இது சோழர்களின் வசம் வந்தது, அதற்கு பிறகு ஹொயிசாலர்கள், விஜயநகரத்து அரசர்கள், பிறகு சுமார் 200 வருடங்கள் ஹலெரி வம்சத்தினரால் ஆளப்பட்டு 17ம் நூற்றாண்டில் திப்பு சுல்தான் வசம் வந்தது. பிறகு 1834ல் ஆங்கிலேயரிடம் வந்து குடகு கூர்க் எனவும், மடிகேரி மெர்காரா எனவும் ஆகியது.
சுமார் 3500 அடி உயரத்தில். |
மைசூரிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ளது. மெர்காரா வரையில் சாலை நல்ல பராமரிப்பில் இருந்தது மிகச்சீக்கிரத்தில் மெர்காரவை அடைய முடிந்தது. வழியில் நிறைய கிராமங்களும், பிலிகேரி, ஹன்சூரு மற்றும் குஷால்நகர் ஆகிய பெரிய ஊர்களும் இருக்கிறது. இதில் குஷால் நகர் சற்று பெரியதும் பரபரப்பு மிகுந்த ஊராகவும் இருக்கிறது. இதற்கு அருகில் உள்ள பைலகுப்பே (Bylakuppe) என்கிற இடம் இந்தியாவில் திபத்தியர்கள் இரண்டாவதாக அதிகமாக குடியேறிய இடமும், அவர்களது தங்க புத்தர் கோவில் உள்ள இடமும் ஆகும்.


மைசூர், ஸ்ரீரங்கப்பட்டிணம் ஆகிய இடங்களை மாதிரியே இப்பகுதிகளின் வளர்ச்சியில் திப்பு சுல்தானின் பங்கு பெருமிகிதத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படி பல ஊர்களை கடந்து மெர்க்காரவை அடைந்தோம். மலை ஏறுவதே தெரியாமல் சற்றென்று மலைப்பகுதியை அடைந்து விட்டால் போல இருந்தது சாலை. மெர்காரா வருவதற்கு சற்று முன்னதாகவே காபி தோட்டங்களை பார்க்க முடிந்தது. மலைப்பதையை நெருங்க ஆரம்பித்ததும், எங்கு திரும்பினாலும் காபி தோட்டம்தான். சாலையின் இரு பக்கங்களிலும் மிக அழகாக பரமரிக்கபடும் மிகப்பெரிய அளவிலான காப்பி தோட்டங்களையும் அதன் நடுவே பெரிய ஓட்டு வீடுகளும் காண முடிந்தது.
காபி தோட்டம். |
காபி தோட்டங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றால் மெர்க்காரா வந்து விடுகிறது. மலைச்சரிவுகளில் வீடுகள் கடைத்தெருக்கள் என மிக அழகான ஊர்.
அடுத்த பதிவில்...தலைக்காவேரி..
.