வெள்ளி, டிசம்பர் 28, 2012

மொழி.....கலாச்சாரத்தின் பாலம்.


வணக்கம்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பதிவு பக்கம் வர முடியவில்லை. தற்போது சற்று பரவாயில்லை..இன்னும் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று இருந்தேன்.ஆனால் முக புத்தகத்தில் நான் பார்த்த இந்த குறும்படம்  என் மனதை கலங்கச்செய்தது. பதிவுலகத்தின் பக்கம் உடன் வர வேண்டும் என்று தோன்றிவிட்டது.








தமிழ் இனி.... மேலும் மேலும் சிறக்க வேண்டும். 

வேறு பதிவுகளுடன் அடுத்த வாரம் முதல் சந்திக்கலாம்.     நன்றி

நட்புடன் 
ரமாரவி.



(குறும்படம் சரியாக பார்க்க முடியும் என நினைக்கிறேன். முடியவில்லை என்றால் .----இங்கு  சென்று பார்க்கவும்.)

---------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, நவம்பர் 09, 2012

சுற்றுலா ......குளு குளு கூர்க்.--2







இப்படி  கடைத்தெரு வீடுகளை பார்த்துக்கொண்டே சென்றால்

10 நிமிடங்களில் தலைக்காவேரி செல்லுவதற்கான பாதை வந்து

விடுகிறது. அதில் செல்லும் முன் ஊரை திரும்பிப்பார்த்தால்

பசுமையான மலைச்சரிவில் பசை தடவி ஒட்ட

வைத்தாற்போல காணப்படும் வீடுகள், கடைகள் சாலைகள்,....

அதன் அழகு மனதை கொள்ளை கொண்டது.

இதனுடன் குளுமையான ஒரு சீதோஷண நிலை. மனதில்

சொல்ல முடியாத ஒரு சந்தோஷம் ஆக்கிரமித்துக்கொண்டது.

நகர வாழ்கையின் பரபரப்பை விட்டு விலகி அமைதியான

சூழ்நிலையில் இப்படி இயற்கை காட்சிகளை காணும் போது

நாம் அடையும் சந்தோஷம் எல்லையற்றதாக இருக்கிறது.

















மெர்காராவிலிருந்து தலைக்காவேரி சுமார் 35 கி.மீ இருக்கும்.

வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை சுமாரான

பாராமரிப்பு..இரண்டு புரமும் பசுமையான மேற்கு தொடர்ச்சி

மலைகள், சரிவுகளில் காப்பி தோட்டங்கள், இலேசான குளிர்

என மிகவும் சுகமான அனுபவத்துடன் பயணப்பட்டோம்.




தலைக்காவேரி.....

காவேரி நதி ஆரம்பிக்கும் இடம்.



















அழகிய பசுமையான மேற்கு தொடர்ச்சி மலைக்களுக்கிடையே

உள்ளது இந்த இடம். காவேரி ஒரு சிறு ஊற்றாக தன்

பயணத்தை இங்கிருந்து தொடங்குகிறாள். சுமார் 3

கீமீ.பூமிக்கடியிலேயே ஓடி அதன் பிறகு  காடுகளில்

வெளிப்பட்டு ஓடுவதாக கூறப்படுகிறது. குடகு மலைப்பகுதியில்

உள்ள பாகமண்டலா என்கிற இடத்தில் கனிகா என்கிற

நதியுடனும், சுஜோதி என்கிற கண்களுக்கு புலப்படாத புராண

நதியுடனும் காவேரி சங்கமிக்கிறது.  இங்கு பாகதீஸ்வரா என்கிற

ஈஸ்வரின் கோவில் உள்ளது. இந்த மூர்த்தியின் பெயராலேயே

இந்த இடம் பாகமண்டலா என்று அழைக்கப்படுகிறது.

.இங்குதான் காவேரியை நாம் பார்க்க முடிகிறது.

இரு நதிகளுமே மிகச்சிறிய ஓடை

அளவிற்கே இருப்பதை பார்க்க முடிகிறது.. 3 நதிகள்

சங்கமிப்பதால் இந்த இடத்தை திரிவேணி சங்கமம் என்றும்

அழைக்கிறார்கள்.



பாகமண்டலா.

பாகமண்டலா திரிவேணி சங்கமம்.

பாகமண்டலாவில் காவிரி.

திரிவேணி சங்கமம்.

பாகதீஸ்வரா கோவில்


































































பாகமண்டலாவிலிருந்து மறுபடி காவேரி காடுகளின் வழியே ஓடி மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு வெளிவந்து பிறகு ஸ்ரீரங்கபட்டிணம் சிவன்னசமுத்திரம் ஆகியஇடங்களின் வழியே தமிழகத்தை அடைகிறது.


அடுத்த பதிவு
அபி நீர்வீழ்ச்சி.....


அன்புடன்
ரமாரவி.

புதன், அக்டோபர் 31, 2012

சுற்றுலா.....குளு குளு கூர்க்..


 குளுமையான கூர்க்கிற்கு சுற்றுலா என்பதனால் உடனடியாக கிளம்பிவிட்டோம். ( ஆனால் பல அலுவல்களுக்கு நடுவில் செல்ல வேண்டி இருந்ததால் இரு தினங்கள் மட்டுமே பயணம். ஆனால் மறக்க முடியாத பயணம்.)

கூர்க்...





உயர்ந்து பனிபடர்ந்து நிற்கும் இமைய மலைத் தொடரைப் பார்த்தால்,அதன் கம்பீரமான அழகு மனதை கொள்ளை கொள்ளும்.

ஆனால், எங்கு திரும்பினாலும் பசுமையை போர்த்திக்கொண்டு இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் குளுமை கண்ணையும்,மனதையும் அதிகம் கவர்ந்து விடுகிறது.


முதல் நாள் மைசூருக்கு சென்று அரண்மனை, கே.ஆர்.எஸ். அணை எல்லாம் பார்த்து விட்டு  மைசூரிலேயே தங்கி விட்டோம். ஏற்கனவே மைசூர் சுற்றுலா பற்றி எழுதி விட்டதால் இங்கு கூர்க மட்டும்  பார்க்கலாம்...((- மைசூர் சுற்றுலா.))


மறு நாள் காலை 7 மணிக்கு கூர்க்கிற்கு கிளம்பினோம். கூர்க் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையை அதிகம் உள்ளடக்கிய ஒர் மாவட்டம்.இதன் தலைநகர் மெர்காரா எனப்படும் மடிக்கேரி ஆகும்.ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் மெர்காரா. கர்நாடகத்தில் இதற்கு பெயர் மடிக்கேரி.




11ம் நூற்றாண்டு வரை குடகின் வட பகுதி, கடம்பர்களாலும், தென் பகுதி கங்கர்களாலும் ஆளப்பட்டு வந்தது. 11ம் நூற்றாண்டில் இது சோழர்களின் வசம் வந்தது, அதற்கு பிறகு ஹொயிசாலர்கள், விஜயநகரத்து அரசர்கள்,  பிறகு சுமார் 200 வருடங்கள் ஹலெரி வம்சத்தினரால் ஆளப்பட்டு 17ம் நூற்றாண்டில் திப்பு சுல்தான் வசம் வந்தது. பிறகு 1834ல் ஆங்கிலேயரிடம் வந்து குடகு கூர்க் எனவும், மடிகேரி மெர்காரா எனவும் ஆகியது.



சுமார் 3500 அடி உயரத்தில்.


 மைசூரிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ளது. மெர்காரா வரையில் சாலை நல்ல பராமரிப்பில் இருந்தது மிகச்சீக்கிரத்தில் மெர்காரவை அடைய முடிந்தது. வழியில் நிறைய கிராமங்களும், பிலிகேரி, ஹன்சூரு மற்றும் குஷால்நகர் ஆகிய பெரிய ஊர்களும் இருக்கிறது. இதில் குஷால் நகர் சற்று பெரியதும் பரபரப்பு மிகுந்த ஊராகவும் இருக்கிறது. இதற்கு அருகில் உள்ள பைலகுப்பே (Bylakuppe) என்கிற இடம் இந்தியாவில் திபத்தியர்கள் இரண்டாவதாக அதிகமாக குடியேறிய இடமும், அவர்களது தங்க புத்தர் கோவில் உள்ள இடமும் ஆகும்.









மைசூர், ஸ்ரீரங்கப்பட்டிணம் ஆகிய இடங்களை மாதிரியே இப்பகுதிகளின் வளர்ச்சியில் திப்பு சுல்தானின் பங்கு பெருமிகிதத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.


இப்படி பல ஊர்களை கடந்து மெர்க்காரவை அடைந்தோம். மலை ஏறுவதே தெரியாமல் சற்றென்று மலைப்பகுதியை அடைந்து விட்டால் போல இருந்தது சாலை. மெர்காரா வருவதற்கு சற்று முன்னதாகவே காபி தோட்டங்களை பார்க்க முடிந்தது. மலைப்பதையை நெருங்க ஆரம்பித்ததும், எங்கு திரும்பினாலும் காபி தோட்டம்தான்.  சாலையின் இரு பக்கங்களிலும் மிக அழகாக பரமரிக்கபடும் மிகப்பெரிய அளவிலான காப்பி தோட்டங்களையும் அதன் நடுவே  பெரிய ஓட்டு வீடுகளும் காண முடிந்தது.

காபி தோட்டம்.




காபி தோட்டங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றால் மெர்க்காரா வந்து விடுகிறது. மலைச்சரிவுகளில் வீடுகள் கடைத்தெருக்கள் என மிக அழகான ஊர்.


 அடுத்த பதிவில்...தலைக்காவேரி..


.

வெள்ளி, அக்டோபர் 19, 2012

கோவில் தரிசனம்...........நலம் தரும் நாகமங்கலா.

நலம் தரும் நாக மங்கலா..........







நாகமங்கலா பெங்களூரிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் மாண்டியா மாவட்டத்தில் இருக்கிறது. இங்குள்ள செளமிய கேசவ பெருமாள் கோவில் நாக தோஷம் மற்றும் ஸர்ப்ப தோஷங்கள் நிவர்த்தி செய்ய விசேஷமாக கருதப்படுகிறது.





செளமிய கேசவ பெருமாள்.



மூலவர் செளமிய கேசவ பெருமாள் 4 கரங்களுடன், ஸ்ரீதேவி,பூதேவி நாச்சியார்களுடன் காட்சியளிக்கிறார். மேல் கைகளில் சங்கு வலது பக்கத்திலும் சக்கரம் இடது பக்கத்திலும்,கீழ் கைகளில் வலது பக்கத்தில் தாமரை புஷ்பமும்,இடது பக்கத்தில் கதையுடனும் காட்சித் தருகிறார்.  பல நூற்றாண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படும் இக்கோவில் ஹொய்சால மன்னனுக்குட்பட்ட பாளைக்காரர் ஜெய தேவன் என்பவரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இக்கோவில்,விஜயநகரம் மற்றும் ஹொயிசாலா ஆகிய இரு ராஜ்யங்களின் கட்டிட கலையையும் பிரதி பலிப்பதாக இருக்கிறது.







இக்கோவிலுக்கு பல விசேஷங்கள் சொல்லப்படுகிறது.....


நாக மண்டலம் என்பது ஆதிசேஷனை குறிக்கிறது. எனவே இக் கோவிலுக்கு வருவதால் நாக,ஸர்ப தோஷங்களை மட்டுமல்லாது நம் பாவங்களையும் பெருமாள் நீக்கி விடுகிறார் என்று சொல்லும் விதமாக இந்த இடம் ஆனந்த ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.



இக்கோவிலின் நடுவில் அமைந்துள்ள புவனேஸ்வரி மண்டபத்தின் மேல் கூரையில் காணப்படும் வேலைப்பாடு மிகச்சிறப்பு வாய்ந்தது. கூரையை நாம் ஒருபுரத்திலிருந்து பார்க்கும் போது ஆதிசேஷன் பெரிய சங்கை சுற்றி வளைத்தார் போல தெரிகிறார், மற்றொரு பக்கம் பார்த்தால் ஆதிசேஷன் தலைகீழாக உள்ள தாமைரை மொட்டை சுற்றி வளைத்து காணப்படுகிறர்.











இக்கோவிலில் அஷ்ட லக்‌ஷ்மிகளும் அருள்புரிகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.



 இக்கோவிலில் பல முக்கிய சன்னதிகள் உள்ளன.
முதலில் வேணுகோபாலன் ருக்மிணி,சத்யபாமாவுடன் ஒரு சன்னதியில் காட்சி கொடுக்கிறார்.




அடுத்து லக்‌ஷ்மி நரசிம்மர் ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.




தாயார் செளமிய நாயகியும் ஆண்டாளும் தனி சன்னதிகளில் காட்சியளிக்கிறார்கள்.



தாயார் செளமிய நாயகி

ஆண்டாள்.

  ----------------------------------------------------------------------------------------------------------------------------


கடைசி இரு படங்கள் தவிர மற்றவை நாங்கள் சென்ற போது எடுக்கப்பட்டவை.



அடுத்து குளு குளு கூர்க் பயணம்....


நட்புடன்
ரமாரவி.









செவ்வாய், அக்டோபர் 09, 2012

கோவில் தரிசனம். ...... கல்யாண கருடர்..

வணக்கம்.

மறுபடியும் பதிவு எழுத ஆரம்பிக்கும் பொழுது ஒரு ஆன்மீகப்பதிவுடன் எழுத ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது. கோடை விடுமுறையின் போது ஒரிரு  கோவில்களுக்கு சென்று வந்தோம். அவற்றில் முக்கியமானதும், புராதமானதுமான பிண்டிங்கநவிலே கோவில் பற்றி தெரிந்து கொள்ளலாம்....







பிண்டிங்கநவிலே......(BINDINGNAVILE)

பெங்களூரிலிருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் ஹாசன்,பேலூர் சேல்லும் வழியில் பேலூர் கிராஸ் என்கிற இடத்திலிருந்து சற்று உள்ளே இருக்கிறது பிண்டிங்நவிலே என்கிற இந்த ஊர். இங்கு மிகவும் பழமையான கேசவ பெருமாள் கோவில் இருக்கிறது.  முக்கிய தெய்வம் கேசவ பெருமாளாக இருந்த போதிலும், இங்குள்ள கருடன் சன்னதி சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. காரணம்.......இங்கு கருடருக்கு அவருடை இரண்டு தேவியருடன், திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.






                                                  சந்தன மரத்திலான கருடர்.


 5 அடிக்கும் மேலே உயரமான இந்த கருடர் சந்தன மரத்தால் ஆன திருஉருவமாக இருக்கிறார். கருடர் இங்கு வந்த விவரத்தை கோவில் பட்டர் ஓரு சிறு கதையாக விளக்கினார்.





                                                மூலவர் சென்ன கேசவப்பெருமாள்..





                                                       தாயார் சொளமியநாயகி.



சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன். பேலூரில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலுக்கு ஒரு கருட விக்கிரகம் தேவைபட அதற்காக காஞ்சீபுரத்திலிருந்து மரத்தால் செய்யப்பட்ட  கருடனை ஏளபண்ணிக்கொண்டு வந்தனராம். அந்த நாட்களில் காடுகளின் வழியாக இரவு பயணப்படுவது சிரமம் என்பதினால் பகல் பொழுதுகளில் பிரயாணம் செய்துவிட்டு இரவுப்பொழுதுகளில் சத்திரங்களிலேயோ, கோவில்களிலேயோ தங்கி பிறகு செல்வது வழக்கம். அப்படி பேலூர் செல்லும் வழியில் பிண்டிங்கநவிலே என்கிற இந்த ஊரை அடைந்த பொழுது இரவுப்பொழுதாகிவிட்டதால் கோவிலில் தங்கியிருக்கிறார்கள்.


காலையில் எழுந்து பேலுருக்கு செல்ல ஆயத்தமான பொழுது, கருடரை தூக்க முடியவில்லையாம். எவ்வளவு முயற்சி செய்தும் கருடரை தூக்க முடியாததால் ஏதோ தெய்வக்குற்றம் ஆகிவிட்டது என்று கலங்கி நின்றார்களாம். மைசூர் ராஜ்யத்திற்கு உட்பட்ட அந்த பகுதியின் பாளைக்காரரான ஜெயதேவர் என்பவர் அங்கு வர அவரிடம் முறையிட....



அவரும், தமக்கு கனவில் பெருமாள் வந்து கருடனை இந்த கோவிலிலேயே பிரதிஷ்டை செய்யும் படி கூறியதாகவும், அதற்காகத்தான் தான் அங்கு வந்ததாகவும், மேலும் தாம் வருவதற்கு தாமதமாகிவிட்டதால் அவர்களால் கருடரை தூக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவர்கள் கருடரை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார்களாம்... பிறகு கருடருக்கு தனி சன்னதி ஏற்படுத்தி அன்றிலிருந்து சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டதாம்.






சாதாரண மரத்தில் இருந்த இந்த கருடர் திரு உருவம்.சென்ற நூற்றாண்டில் சிதிலமடைய ஆரம்பித்த பொழுது, இந்த பகுதியை சேர்ந்த பி.வி.கருடாச்சாரிய ஐயங்கார் (BVK IYENGAR) என்பவரின் கனவில் பெருமாள் தோன்றி வேறு திரு உருவம் அமைக்க சொல்ல அவரும் பழைய திரு உருவை அகற்றிவிட்டு 1930 களில் சந்தன மரத்தை கொண்டு திரு உருவம் பிரதிஷ்டை செய்துள்ளார்.


இந்த கருடரின் உற்சவ மூர்த்திக்கு இரு தேவியர்கள் உண்டு. கருடருக்கு சிறப்பு பூஜையாக இரு தேவியருடன்  திருக்கல்யாண உற்சவம் செய்விக்கிறார்கள். வேறு எந்த கோவிலிலும் கருடருக்கு கல்யாண உற்சவம் நடப்பதாக தெரியவில்லை.கருடரின் திருமண உற்சவமே இக் கோவிலில் சிறப்பு. திருமணம் நல்ல படியாக அமையவும்,குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் இக்கோவிலில் கருடருக்கு விஷேச அர்ச்சனையோ அல்லது முடிந்தவர்கள் கல்யாண உற்சவமோ செய்து வைக்க அவர்களுடைய பிரார்தனையை நல்ல படியாக முடித்து கொடுக்கிறார் கருட பகவான்.






                                 
                                     உற்சவ கருடர் இரு தேவியர்களுடன்.
                                       (இவருக்குதான் கல்யாண உற்சவம்
                                                  செய்விக்கப்படுகிறது.)              



இந்த கருடரைப்பற்றி சொல்லப்படும் இன்னுமொரு சிறப்பான விஷயம்...   தேவலோகத்திலிருந்து (மேலக்கோட்டை பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு வரும்) வைரமுடியை கருடன் பூலோகத்திற்கு கொண்டு வந்த பொழுது இந்த இடத்தில்தான் அதனை கிருஷ்ணருக்கு அளித்தாராம்.




அடுத்தது நலம் தரும் நாகமங்கலா........


நட்புடன்
ரமாரவி..

ஞாயிறு, அக்டோபர் 07, 2012

அலுப்பு........


அலைகள்
பூக்கள்
குழந்தை
நண்பர்கள்
கவிதையும்கூட
அவ்வப்போது
அலுத்துப்போகிறது.

கனிமொழியின் அழகான கவிதை.








இந்த வரிசையில் எழுத்தும் சேர்ந்து விட்டது எனக்கு 4,5 மாதங்களுக்கு முன்.









நிறைய எழுத வேண்டும் என்று ஆசையாக பதிவு எழுத ஆரம்பித்தேன்.  ஏன் இந்த திடீர் அலுப்பு என்று யோசித்தேன். முதலில் காரணம் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது எனக்கு எழுதுவது அலுக்கவில்லை.......கணணி, இணைய இணைப்புகளின் பிரச்சனையால் அவற்றை சரி செய்ய அலைந்தும், ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காததால் கணணியிடம் ஏற்பட்ட அலுப்பில் எழுதுவதை நிறுத்திவிட்டேன் என்று.



இப்பொழுது இந்த ஓய்வு, எனக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. மீண்டும் எழுத வேண்டும் என்கிற வேகம் வந்து விட்டது. ஒரிரு தினங்களில் புதிய பதிவுகளுடன் சந்திக்கிறேன்.





அன்புடன்
ரமாரவி.

திங்கள், மே 07, 2012

காபி....








மேலே இருப்பது என்ன என்று தெரிகிறதா?? ஆம் காப்பி கொட்டை அரைக்கும் எந்திரம் தான். வலையில் ஏதோ படத்தை தேடும் பொழுது இதை பார்தேன். பார்த்தவுடன் காபி குடிக்கும் பழக்கத்தை நினைவு படுத்துவிட்டது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும்,கர்நாடகாவிலும் இந்த பில்டர் காபிக்கு ஒரு தனி மகிமை உண்டு. அதை விரும்பாதவரே கிடையாது என்று சொல்லலாம்.

அப்பொழுது தயாரிக்கப்பட்ட பிஸ்டர் டிகாக்‌ஷன்,தண்ணீர் கலக்காத பால் அளவான சக்கரை சேர்த்து சூடாக,நுரைக்க காப்பி தயாரித்து குடிக்கும் பொழுது....தேவாம்ருதமாக இருக்கும்.





எனக்கு சிறு வயதிலிருந்தே காபி குடிக்கும் பழக்கம் உண்டு. சுமார் ஏழு வயது எனறு நினைக்கிறேன்,என தம்பி தங்கை இருவரும், “வீவா”அல்லது, “ஹார்லிக்ஸ்” குடிக்கும் பொழுது என் அம்மாவிடம் எனக்கு காபிதான் வேண்டும் என்று அடம் பிடித்து காப்பி குடிப்பேன். அதுவும் திக்காக இருக்க வேண்டும் அம்மா அப்பா எப்படி குடிக்கிரார்களோ அப்படியே இருக்க வேண்டும். அம்மா, குழந்தைதானே என்று டிகாக்‌ஷனில் சிறிது தண்ணீர் கலக்கலாம் என்றாலும் விட மாட்டேனாம். சமையல் அறை மேடை அருகிலேயே நின்று கொண்டிருப்பேனாம். இப்படியே என் காப்பி சாப்பிடும் பழக்கம் தொடர்ந்தது.



பழைய மாம்பலத்தில் ஈஸ்வரன் கோவில் தெருவில் ராவ்ஜி மாமா கடை வைத்திருப்பார். அவர். கடைதான் எங்க வீட்டிற்கு மட்டுமில்லை, மொத்த மாம்பலத்திற்குமே......அப்பொழுதெல்லாம் காப்பி பொடி வாங்கி வர வேண்டும் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். மாமா கடைக்கு சென்றுவிடுவேன். ஒரு சிறிய பென்ச் போட்டிருப்பார். அதில் ஓரமாக உட்கார்ந்து கொண்டு விடுவேன். அவ்வளவுதான், பச்சை கொட்டை வாசனை, அது வறுக்கப்படும் பொழுது வரும் வாசனை,அரைத்து பொடி ஆக்கிய பிறகு வரும் வாசனை...........ஆஹா.. என்றிருக்கும்.







காப்பி கொட்டை வறுப்பதற்கு ஒரு மிஷின்,அரைப்பதற்கு ஒரு மிஷின்தான் வைத்திருப்பார்.அவர் காபி கொட்டையை பதமாக அதிகம் கருகாமல் வறுத்து அரைத்து கொடுப்பதை வாங்கி செல்ல நிறைபேர்கள் வருவார்கள். வருபவர்கள் மாமாவை விசாரித்துவிட்டு,கதை பேசிவிட்டு காப்பி பொடி வாங்கி செல்வார்கள். சில சமயம் நான் இருப்பதையே மறந்துவிடுவார்.நானும் நினைவு படுத்த மாட்டேன்.அந்த வாசனையை முகர்ந்து கொண்டோ அல்லது வறுக்கும் மிஷினில் காஸ் தீர்ந்து விட்டால் அவர் சிலிண்டர் மாற்றும் விதத்தை வேடிக்கை பார்த்துக்கொணடோ உட்கார்ந்திருப்பேன். ஒரிரு சமயம் 2 மணி நேரம்கூட ஆகிவிடும். என் அம்மா,அப்பா யாராவது என்னை தேடிக்கொண்டு கடைக்கு வரும் போதுதான். அவர் என்னை கவனிப்பார்.  “அடாடா..உன்னை மறந்துவிட்டேனே”என்று சொல்லி நான் கொண்டுகொடுத்த டப்பாவில் அரைத்த பொடியை போட்டு கொடுத்தனுப்புவார்.


எங்க பெரியம்மா வீட்டில் கடையிலிருந்து பொடி வாங்க மாட்டார்கள். பெரியம்மா காலையில் சமையல்,சாப்பாடு வேலை எல்லாம் முடித்துவிட்டு, பெரிய இரும்பு வாணலியை நன்றாக சூடுபடுத்தி, பச்சை காப்பி கொட்டையை பதமாக வறுத்து ஆறவைப்பார். மத்தியானம் காப்பி தயாரிக்கும் சமயம் அதை வீட்டில் இருக்கும் சிறிய மிஷினில் அரைத்து டிகாக்‌ஷன் தயாரிப்பார் பிறகு கறந்த பாலை தண்ணீர் விடாமல் நன்றாக காய்ச்சி தயாரித்த டிகாக்‌ஷனை கலந்து அளவான சக்கரை சேர்த்து நுரைக்க நுரைக்க எல்லோருக்கும் காப்பி கொடுப்பார்.அந்த காப்பியை குடிப்பதற்காகவே பெரியம்மா வீட்டிற்கு சென்ற நாட்கள் உண்டு.எனக்கு அவர் தயாரிக்கும் காப்பி மிகவும் பிடிக்கும்.நான் அதற்காகவே அங்கு செல்வதால் எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு உண்டு.இரண்டு டம்ப்ளர் காபி கிடைக்கும்.










வேலைக்கு போகும் நாட்களில் பார்ஸ் கார்னரில் எங்கள் ஆபிஸின் எதிரிலேயே,  “சரவணபவன் ”  காப்பி குடிப்பதற்காகவே காலை 11/30 மணிக்கும் மாலை 4 மணிக்கும் செல்வோம். விலை என்னதான் ஏற்றி வைத்தாலும் நாங்கள் காப்பி குடிப்பதை நிறுத்தவில்லை.


நானும் வீட்டில் மிக நன்றாக காபி தயாரிப்பேன். பாலில் தண்ணீர் கலக்காமல், டிகாக்‌ஷனும் திக்காக....ஒரு நாளைக்கு 4 டம்பளர் காப்பி குடிப்பேன்.



இப்படி நல்ல காப்பி எங்கு கிடைக்கும் என தேடிப்போய் குடிக்கும் நான் காபி குடிப்பதை 3 வருடங்களுக்கு முன் விட்டுவிட்டேன்.



அன்புடன்
ரமாரவி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------





திங்கள், ஏப்ரல் 30, 2012

வானொலி பெட்டி..

வணக்கம்.

செய்தி ..1.


எல்லோரும் நலமா? முதலில் சொல்லிக்கொள்ளாமல் காணாமல் போனதற்கு மன்னிக்கவும். கடந்த இருமாதங்களாக வீட்டில் வலைதள இணப்பில் பெரிய பிரச்சனை ஏற்பட்டு விட்டது. நான் வேலையாக இருக்கும் காலை மாலை இரு வேளைகளும் அதுவும் ஒழுங்காக வேலை செய்யும்,நான் ஒய்வு நேரத்தில் வலைத்தளங்களை படிக்கலாம் என்று வரும் பொழுது அதுவும் ஓய்வு எடுத்து கொண்டு விடும்.பல முறை தொலைபேசியில் புகார் கொடுத்தும் சரி வர வேலை செய்யவில்லை,சில முறை நேரில் சென்று புகார் கொடுத்து தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.இரு தினங்களாக சரியாக வேலை செய்கிறது. இனி வழக்கம் போல பதிவுகளை படிக்க முடியும் என நினைக்கிறேன்.இதற்கிடையில்,முதலில் சரி செய்ய வந்தவர்கள் (BSNL) உங்க வீட்டு தொலைபேசிதான் சரியில்லை என்று சொல்லிவிடவே, (அது சுமார் 12 வருடங்கள் பழைமையானது) புதியதாக இரண்டு தொலை பேசி வாங்கி விட்டோம். பிறகுதான் தெரிந்தது பிரச்சனை வீட்டு தொலை பேசியில் இல்லை அவர்கள் கேபிளில்தான் என்று.



செய்தி..2


ஹாஸ்டல் நினைவுகள் .--1 மற்றும் 2 ல் திருமதி அலமேலு அம்மா அவர்களை பற்றி குறிப்பிட்டு இருந்தேன். திருமதி வல்லி சிம்ஹன் (நாச்சியார் பதிவு) அவர்கள் திருமதி அலமேலு சம்பத் அவர்கள் தம்முடைய சின்ன மாமியார்தான் என்றும்,தற்பொழுது தள்ளாத வயதில் இருந்தாலும், அதே கம்பீரத்தோடு இருக்கிறார் என்ற விவரம் தெரிவித்திருக்கிறார். அதை படித்ததும் எனக்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டது. அவரிடம் அம்மாவின் இருப்பிட விலாசம் எல்லாம் பெற்றுகொண்டுள்ளேன். விரைவில் போய் பார்த்துவிட்டு வந்து உங்களுக்கும் விவரம் தெரிவிக்கிறேன்.


இரண்டு மாதங்களாக பதிவுகளை படிக்க முடியவில்லை.இன்றிலிருந்து படிக்க ஆரம்பித்து விடுவேன். மறுபடியும் உங்களையெல்லால் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.


அன்புடன்
ரமாரவி.

---------------------------------------------------------------------------------------------------------------------------

புதன், பிப்ரவரி 29, 2012

அறிந்து கொள்வோம்----- டொல்லு குனிதா.

டொல்லு குனிதா என்பது கர்நாடகாவில் கோவில் திருவிழாக்களில் முக்கியமாக வட கர்நாடகா பகுதிகளில் ஆடப்படும் ஒரு கிராமிய நடனம். பீரேஷ்வரா எனப்படும் சிவனை குறித்து ஆடப்படும் ஆட்டம். கர்நாடகத்தில் குருப கெளடா என்பவர்களின் முக்கிய தெய்வம் இந்த பீரேஷ்வர் ஆவார்.





டொல்லு என்றால் தோலினால் ஆன மத்தளம் போன்ற வாத்தியம். நமது தவிலைப்போன்றது. ஆனால் சத்தம் அதிகமாக சற்று வித்யாசமாக வரும். கோவில் திருவிழா சமயங்களில் மட்டும் அல்லாது இதர விழாக்களின் போதும் இதை வாசித்து சிவனை குறித்து பாடல்கள் பாடி நடனம் ஆடுவார்கள். இந்த வாத்தியத்தை பீரேஷ்வரா என்கிற சிவனுடைய கோவில்களில் உத்திரத்தில் கனமான கயிற்றினால் கட்டி தொங்கவிட்டு இருப்பர்கள். பூஜை சமயங்களில் இதை அடித்து ஓசை எழுப்புவார்கள்.


Image Detail



Image Detail


டொல்லாசுரன் என்கிற ராட்ஷசன், சிவனை குறித்து தவம் செய்தானாம். அவனுடைய தவத்திற்கு மனமிரங்கி சிவபெருமான் அவன் முன்னே தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க அவனும் தான் எல்லோரையும் விட பெரியவன் என்று இறுமாந்து சிவனை முழுங்கிவிட வேண்டும் என்று கேட்டான். சிவபெருமானும் அவனை அழிக்கும் சமயம் இதுதான் என்று கேட்ட வரத்தை அளித்தார். அதனால் டொல்லாசுரன் சிவனை விழுங்கி விட்டான்.



அவன் வயிற்றுக்குள்ளே போன பெருமான், கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பிக்க அந்த வலியை தாங்க முடியாத அசுரன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். அதனால் அவன் வயிற்றை கிழித்து கொண்டு சிவ பெருமான் வெளியே வந்து அவனுக்கு அருள் பாலித்து நற்கதி அளித்தார். கிழித்த அவன் உடலை ஒரு மத்தளம் செய்து தன்னுடை அடியார்களுக்கு அளித்துவிட்டார். அவர்களும் சிவனின் மகிமையை அந்த மத்தளத்தில் ஓசை எழுப்பி பாட ஆரம்பிக்க டொல்லு குனிதா என்கிற இசை தோன்றியது.



Image Detail




Image Detail



கர்நாடகா மாநிலத்தின் கிராமிய இசை நடனங்களில் முக்கியமானது இந்த டொல்லு குனிதாவும்,யக்‌ஷகானமும் ஆகும். பள்ளிகள், மற்றும் கல்லூரிகளில் நடக்கும் விழாக்களின் போதும் இவ்விரு நிகழ்ச்சிகளும் முக்கிய பங்கு வகிக்கும். யக்‌ஷகானத்தை பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.


அன்புடன்
ரமாரவி.
------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

ஹாஸ்டல் நினைவுகள் ....(அலமேலு அம்மா)---2

வாழ்கையில் சில மனிதர்களினால் அல்லது சில நிகழ்வுகளினால் நாம் சில நல்ல விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். அப்படி ஒரு நல்ல விஷயத்தை அன்று நான் அலமேலு அம்மாவிடமிருந்து தெரிந்து கொண்டேன்......அது ......





கொதிப்படந்த நிலையில் அந்தப்பெண் அப்படி பேசியதும், நாங்களெல்லாம் சிரித்ததை பார்த்தும், அலமேலு அம்மா ஏதும் பேசவில்லை.அவர் ஒன்றும் பேசாமல் இருந்தவுடன், அவரை எதிர்த்து பேசியதற்கு சிரித்து விட்டோமே என்று பயம் வந்து எங்கள் சிரிப்பு அடங்கிவிட்டது. திரும்பவும் அமைதி.அலமேலு அம்மா மெதுவாக நாற்காலியைவிட்டு எழுந்தார். எங்களைப்பார்த்து, இப்ப மணி 8 அகிவிட்டது உங்கள் இரவு உணவு நேரம் இது,நீங்கள் எல்லோரும் போய் சாப்பிடுங்கள். சாப்பிட்ட பிறகு 9 மணிக்கு இங்கு வாருங்கள் உங்களுடன் பேசுகிறேன் என்றார். பிறகு அந்த பெண்னைப்பார்த்து நீயும் போய் சாப்பிட்டுவிட்டு வாம்மா என்று மெதுவாக கூறினார். பிறகு அவரும் காப்பாளரின் அறைக்கு சென்றுவிடவே நாங்களும் மேற்கொண்டு என்ன நடக்கும் இந்தப்பெண் எப்படியோ தப்பிச்சுட்டாளே? என்று எங்களுக்குள் பேசிய படியே உணவருந்தச்சென்றோம்.


ஒரு மணி நேரம் கழித்து திரும்பவும் கூட்டத்திற்கு சென்று அமர்ந்தோம். அலமேலு அம்மா மறுபடியும் வந்தார். கூடவே அந்தப்பெண்ணும் வந்தாள். காப்பாளர் அறையில் தனியாக அவளுடன் பேசியிருக்கிறார். நிதானமாக எங்களைப் பார்த்து எல்லோரும் சாப்பிட்டீர்களா என்று கேட்டுவிட்டு தொடர்ந்து பேச ஆரம்பித்தார். இந்தப்பெண் என்னை எதிர்த்துப் பேசும் பொழுது நான் ஏன் பேசாமல் இருந்தேன் என்று உங்களுக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்திருக்கும். என்னுடைய விடுதியை சேர்ந்த பெண் தவறு செய்கிறாள் என்ற கோபத்தில் நான் அவளை கடிந்து கொண்டேன். ஆனால் அவளோ மரியாதை இல்லாமல் பேசி விட்டாள். நானும் கோபத்தில் இருந்தேன் அவளும் உணர்ச்சி வசப்பட்டிருந்தாள். சார் என்று அவள் சொன்னது, என் கணவரை. அவருடன் நான் சினிமாவிற்கு போவது தவறில்லை என்கிற சின்ன விஷயத்தினை கூட அவளால் யோசிக்க முடியவில்லை. அப்பொழுது நான் தொடர்ந்து அவள் தவறினை சுட்டிக்காட்டி திட்டி இருந்தால் அவள் கோபம் அதிகமாகுமே தவிர குறையாது. என் மேல் உள்ள கோபத்தில் யோசிக்கும் தன்மையைனை இழந்து அவள் மீண்டும் தவறு செய்ய துணிவாள். அதனால் நான் பேசாமல் இருந்து விட்டேன்.  சிறிது நேரம் கழிந்து அவளுடைய கோபம் தணிந்ததும் அவள் கட்டாயம் தான் செய்தது சரியா என்று யோசிப்பாள். அவள் தன் தவறை அப்போது உணர்ந்து கொள்ள தவறினாலும், மீண்டும் பேசும் பொழுது நாம் சொல்லவருவதை காது கொடுத்துதாவது கேட்பாள் என்கிற காரணத்தினால் நான் உங்களை எல்லாம் கலைந்து போகச்சொல்லி விட்டேன்.





அதே போல் அந்தப்பெண்ணை சாப்பிட்டு வரச்சொல்லிவிட்டு தனிமையில் அவள் செய்தது தவறு என்று சொல்லி சில புத்திமதிகள் கொடுத்திருக்கிறேன். அவள் நான் சொன்னதை கேட்டுக்கொண்டாள். அவளுக்கு அவளுடைய செய்கையின் விளைவுகளை சொல்லி திருந்துவதற்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளேன். அவள் திருந்தி சரியாக ஒழுக்கமாக இருந்தால் இங்கே தொடர்ந்து தங்கலாம். இது அவளுக்கு மட்டுமல்ல உங்கள் எல்லோருக்கும் பொருந்தும். என்றவர், தொடர்ந்து...



இரண்டு பேர் கோப வசமாக வாக்குவாதம் செய்யும் பொழுது நம்முடைய கருத்தை திணிக்க முயலுவது சரியாக இருக்காது.ஒருவர் பேசாமல் இருந்துவிட்டு சிறிது நேரம் கழிந்து அந்த கோபம் தணிந்ததும் நமது கருத்தை சொன்னால் அதற்கு கட்டாயம் வரவேறப்பு இருக்கும். பிரச்சனைகள் வந்து, கோபமாக இருக்கும் பொழுது நான் கடைபிடிக்கும் யுக்தி. இதில் பெரும்பாலும் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். இங்கு உள்ள 200 பேர்களில் 20 பேர்களுக்காவது இது புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்.அப்படி புரிந்து கொண்டால் நல்லது, என சொல்லி தமது பேச்சை முடித்து கொண்டு எங்களை கலைந்தும் போகச்சொல்லி விட்டார்.





அங்கு யார் புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை எனக்கு நன்றாக புரிந்தது. அன்று அலமேலு அம்மாவிடம் நான் தெரிந்து கொண்ட இந்த விஷயத்தினை இன்றுவரை என் வாழ்கையில் கடைபிடித்து வருகிறேன். என் கணவரோ பெண்களோ அல்லது குடும்பத்தினரோ கோபமாக இருக்கும் பொழுது என் கருத்துக்களை பெரும்பாலும் தவிர்த்து விடுகிறேன். சில நிமிடங்களோ அல்லது சில மணி நேரம் கழித்துத்தோ (பிரச்சனையின் தீவிரத்திற்கு தகுந்தற் போல்) என் கருத்துக்களை மெதுவாக சொல்லி அவர்களை யோசிக்க வைத்து முடிவு எடுக்க சொல்லுவேன். அலமேலு அம்மாவைப்போலவே இது என் வாழ்க்கையில் பிரச்சனைகளின் பொழுது கைகொடுக்கும் ஒரு முக்கிய யுக்தியாகி விட்டது. மகளிர் விடுதியில் முதல் நாளே நல்லதொரு விஷயத்தினை தெரிந்து கொண்டேன்.


அன்று சரி சரி என்று கேட்டுக்கொண்ட அந்தப் பெண் திருந்தவில்லை. மறுபடியும் தவறுதான் செய்தாள்.பள்ளிக்கூடத்திற்கு கூட போகாமல் வெளியில் சுற்றிக்கொண்டிருந்ததால் ,அவளின் தாயாரை வரவழைத்து விடுதியிலிருந்து திருப்பி அனுப்பப் பட்டுவிட்டாள்.


இது நடந்து முடிந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது.அதன்பிறகு நான் அங்கு இருந்த 1-1/2 வருடங்களில் ஒரிரு முறைதான் அலமேலு அம்மாவை பார்த்தேன்.அவருடன் பரிச்சயம் ஏற்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் அமையவில்லை. இருந்தாலும் என்னைக் கவர்ந்த ஒரு சிலரில் அலமேலு அம்மா முக்கியமானவர்.




அன்புடன்,
ரமாரவி.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------