திங்கள், டிசம்பர் 12, 2011

மழலை உலகம் மகத்தானது..தொடர் பதிவு.

திருமதி ஏஞ்ஜலின் சுந்தரம், என்னை, ‘மழலை உலகம் மகத்தானது’  தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறார்.எனது நன்றியினை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.



மழலைகளை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு உற்சாகம் வருகிறது.
குழந்தைகளைப்பற்றி நினைக்கும் போதே அந்த கள்ளம் கபடம் இல்லாத பேச்சு,சிரிப்பு நம் மனதை கொள்ளை கொண்டு நாமும் குழந்தையாகிவிடுகிறோம். பதிவுலகில் ஏறத்தாழ எல்லோராலுமே மழலை உலகம் பற்றி பதிவு எழுதப்பட்டு விட்டது. நான் புதியதாக எழுத ஏதுமில்லை.

இருந்தாலும் சுமார் 11 வருடங்களுக்கு முன் ஒருவருக்கு ஏற்பட்ட குழந்தையை பற்றிய ஒரு சிறு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



அந்தக்குழந்தைக்கு அப்பொழுது சுமார் 4 வயது இருக்கும்.யு.கே.ஜி படித்துக்கொண்டிருந்தாள்.கிருஸ்துமஸ்க்கு பள்ளியில் விடுமுறை கொடுக்கப்பட்டது. அம்மா,அந்தக்குழந்தையையும் அவளுடையை அக்காவையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு சென்றார்கள்.அந்த ஊருக்கு முதன்முறையாக செல்வதால் பெரிய எதிப்பார்ப்புகள்,எந்தெந்த இடங்களை பார்க்க வேண்டும் என்ற பட்டியலுடன் சென்றார்கள்.


ஊருக்கு சென்று அடைந்த முதல் நாள் ஓய்வு எடுத்துக்கொண்டுவிட்டு அடுத்த நாள் வெளியே செல்ல ஆயுத்தம் செய்தார்கள்.குழந்தையின் தந்தை அந்த ஊரில் வேலைபார்பதால்,அவர் காலையில் அலுவலகம் கிளம்ப ஆயுத்தமானார்.தூங்கி எழுந்த இந்த குழந்தை திடீரென அழ ஆரம்பித்தது. என்னவென்று தெரியாமல் அம்மா அப்பா இருவரும் தவித்துப்போனார்கள்.


குழந்தையின் தந்தை குழந்தையை அருகில் அழைத்து ஜீரம் ஏதாவது இருக்கிறதா என சோதித்துப்பார்த்தார்.ஆனால் ஜீரம் ஏதுமில்லை,குழந்தையும் அழுகையை நிறுத்தவில்லை.கைகால் வலி ஏதாவதா என்று அறிந்துகொள்ள குழந்தையில் கை கால்களை சோதித்து பார்த்தால் அதுவும் இல்லை.ஆனால் குழந்தையின் காதுக்கு அருகில் கையை எடுத்துச்சென்ற போது குழந்தையின் அழுகை அதிகமானது.


உடனே மடியில் அமர்த்திக்கொண்டு காதை பார்த்ததில், காதின் உள்ளே ஏதோ வெண்மையாக தெரிந்தது.சளி பிடித்து இருப்பதால் காதில் ஏதோ வலி என்று நினைத்து மருத்துவரிடம் அழைத்து செல்ல சொல்லிவிட்டு,விடுப்பு எடுக்க முடியாத காரணத்தால்,அப்பா அலுவலகத்திற்கு சற்று சங்கடத்துடனே புறப்பட்டார்.


அம்மாவும் தமது வேலைகளை அவசரத்துடன் முடித்து கொண்டு மருத்துவமனைக்கு செல்ல தயாரானார். ஊருக்கும் புதியவர்,பாஷை வேறு தெரியாது. சற்று பதட்டத்துடன்,தொலைபேசி புத்தகத்தை பார்த்து பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொண்டார்.

அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே குழந்தைகளை அழைத்துக் கொண்டு மருத்துவ மனையை அடந்தார். குழந்தையின் அழுகை அதிகமானது. காத்திருப்போரின் எண்ணிக்கை வேறு அதிகமாக இருந்தது. செவிலியரிடம் குழந்தையின் வலியைப்பற்றி சொல்லி உடனடியாக மருத்துவரை பார்க்க அனுமதி கேட்டார்.சிறு நேரத்தில் அனுமதி கிடைத்து மருத்துவரின் அறைக்கு சென்று குழந்தை காதைப்பற்றி குறிப்பிட, மருத்துவரும் ஒரு நொடி குழந்தையின் காதை பார்த்து விட்டு, உடனே ஒரு சிறிய கொரடா மாதிரி ஒரு ஆயுதத்தை காதில் விட்டு வெளியில் எடுத்து பார்த்துவிட்டு அம்மாவிடம் சொன்னார்.

“ குழந்தை காதில் பேப்பரைதான் போட்டுக்கொண்டு இருக்கிறாள்,நான் அதனை வெளியே எடுத்து விட்டேன். இனி வலி இருக்காது பயப்பட தேவையில்லை.நீங்க போகலாம்.பீஸ் .ரூ.150/- ”

அந்த பேப்பரையும் அம்மாவிடம் கொடுத்தார்.அம்மா அந்த பேப்பரையும் கை பையில் பத்திரப்படுத்திக் கொண்டுவிட்டு மருத்துவருக்கு பணம் கொடுத்துவிட்டு வந்தார்.

குழந்தையின் அழுகை சற்று நேரத்தில் நின்று,மீண்டும் அது முன் போல சிரித்து விளையாட ஆரம்பித்தது.மனம் நிம்மதியான அம்மா அப்பாவிற்கும் தகவல் தெரிவித்தார்.





சாயங்காலம் அப்பா அலுவலகத்திலிருந்து வந்தவுடன் அம்மா மருத்துவ மனைக்கு சென்று வந்ததை விவரமாக தெரிவித்தார்.அப்பொழுத்துதான் மருத்துவர் கொடுத்த குழந்தையின் காதிலிருந்து எடுக்கப்பட்ட பேப்பர் நினைவுக்கு வர அதை எடுத்து பார்த்தார்.பார்த்தவுடன் அவருக்கு ஆச்சிரியமாக இருந்தது.

அம்மா அந்த காகிதத்தை அப்பவிடம் காண்பித்து “அதெப்படி பேப்பரை இவ்வளவு சின்னதாக மடிக்க முடியும்? பாருங்கள் எவ்வளவு சின்னதாக மடிக்கப்பட்டு இருக்கு?” என்று வியப்பாக கூறினார்.காகிதம் மடிக்கப்பட்டிருப்பதை பார்த்த அப்பாவிற்கும் ஆச்சர்யமாக இருந்தது.உடனே அவர் குழந்தையை கூப்பிட்டர்.




(குழந்தைக்கும் அப்பாவிற்கும் நடந்த சிறு உரையாடல்)

 “இவ்வளோ சின்னதா நீயா காகிதத்தை மடிச்ச? ”

  “ஆமாப்பா”

 “எப்படி இவ்வளவு சின்னதா மடிச்ச?’

 “ரொம்ப ஈஸிப்பா,கொடு நான் மடிச்சு காட்டரேன்”

 குழந்தை மடிப்பதை ஆச்சரியாமாக பார்த்தார்கள்.

 அப்பா: “உன்னால மட்டும்தான் இப்படி முடியும்ன்னு நினைக்கிறேன்.ஆச்சரியமா இருக்கு”

குழந்தை: “என் பிரேண்டும் மடிச்சாப்பா”

 “அப்படியா? எப்ப மடிச்சீங்க?”

 “ 22nd   அன்னைக்கு கிருஸ்மஸ் செலிபிரேஷன்ஸ் இருந்துது இல்லையா?அன்னைக்குதான் மடிச்சோம்?

 “சரி மடிச்சு ஏன் காதுல போட்டுண்ட?”

 “நான் போட்டுக்கலை, என் பிரேண்ட்,  ராக சுவேதா தான் போட்டா,

  நான் மடிச்சு அவ காதுல போட்டேன். அவ மடிச்சு என் காதுல போட்டா”





அப்பொழுது பயந்தாலும்,இன்று அந்தக்குடும்பம் அந்த நிகழ்ச்சியை நினைத்து பார்த்து சிரிக்காத நாட்களே இல்லை.அந்த மாதிரியான மழலை செயல்கள்....அவர்களது உலகமே மகத்தானதுதான்.







 
---------------------------------------------------------------------------------------------------------------------







செவ்வாய், டிசம்பர் 06, 2011

கோவில் தரிசனம்--பையூர் கரிய மாணிக்கம் பெருமாள்.

பையூர்--இது ஆரணிக்கருகில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். என் அப்பாவின் சொந்த ஊர். மூன்று தலைமுறைக்கு முன்னதாகவே சென்னைக்கு வந்து விட்டதால் அந்த ஊரின் தொடர்பு இல்லாமல் இருந்தது.

அந்த ஊரை சேர்ந்தவர்கள் வேலை விஷயமாக சென்னை மற்றும் வேறு ஊர்களில் குடியேறிவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து கோவிலை புதுப்பிக்கிறார்கள் என்று கேள்வி பட்டவுடன் என் அப்பா,தம்பி மற்றும் குடும்பத்தினர்கள் அவ்வேலையில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கோவில் பணிகளை சீரிய முறையில் முடிக்க உதவினார்கள். கடந்த 3/4 வருடங்களுக்கு முன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது
.

டிசம்பர் 3 ம் தேதி என் தம்பி அக்கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான். அன்று காலை 8 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி காஞ்சிபுரம்,செய்யாறு வழியாக சுமார் 11 மணிக்கு பையூர் கோவிலை அடந்தோம். மழையின் காரணமாக சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் பயணம் மிகவும் கஷ்டமாக இருந்தது.



முன்னரே தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டிருந்ததால் முகுந்தன் பட்டர் கோவிலில் இருந்தார்.சாதாரணமாக காலை ஒருமுறை,மாலை ஒருமுறை கோவில் திறக்கப்பட்டு,பூஜைகள் முடித்து திரும்பவும் கோவிலை மூடி விடுகிறார்கள். நாம் வரும் தகவல் தெரிவித்திருந்ததால் கோவிலை திறந்து வைத்திருந்தார்கள்.

அழகிய கோவில். உள் பிராகாரம்,வெளி பிராகாரம் உண்டு.  வெளி பிராகாரத்தில் வேலைகள் இன்னும் முடியவில்லை.

பெருமாள் கரிய மாணிக்கம்,தாயார்மரகதவல்லி. உற்சவ தாயாருக்கு, வேதவல்லி என்கிற திரு நாமம்.

கரிய மாணிக்க பெருமாள்.


மரகதவல்லி தாயருக்கும் ஆண்டாளுக்கும் சிறியதாக தனி சன்னிதிகள். மற்றும் ஆஞ்சனேயருக்கு உள் பிராகாரத்தில் தனி சன்னிதி.

மரகதவல்லி தாயார்.

ஆண்டாள்.


ஆஞ்சனேயர்.

புஜைகள் சிறப்பாக நடைபெற்று நாங்கள் வாங்கிச் சென்றிருந்த வஸ்திரங்கள், மாலைகள் ஆகியவற்றால் பெருமாள் அலங்கரிக்கப்பட்டார். தரிசனம் சிறப்பாக அமைந்தது.

                                               ஆழ்வார்,ஆச்சாரியர்கள்.





என் அப்பாவின் தாத்தா தனது வயலில் பயிர் வைப்பதற்காக உழுகையில் ஒரு அம்மன் சிலை கிடைத்தாம்.அதனால் அந்தப்பகுதியில் அம்மனுக்கு கோவில் கட்டி சிறிதளவு நிலத்தை கோவிலுக்காக வழங்கினாராம்.அக்கோவில், பொன்னி அம்மன் கோவில் என வழங்கப்பட்டு,பூஜைகள் சிறப்பாக நடை பெற்று வருகிறது.இது சுமார் 120 வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்தது என்பதால் விவரங்கள் தெரியவில்லை. அப்பாவிற்கும் தற்போது மறந்து விட்டதால் தகவல் அதிகம் கிடைக்கவில்லை. அந்த அம்மன் கோவில் எங்களது மூதாதயர்களின் நிலத்தில் இருப்பது மாத்திரம் தெரிகிறது.


பொன்னியம்மன்.





பொன்னியம்மன் கோவில்

  பொன்னியம்மன் கோவில் உழு நிலத்திற்கு அருகில் இருப்பதை காணலாம்.

3ம் தேதி எதற்காக சென்றோம் என்று சொல்ல வேண்டாமா? அப்பாவிற்கு 79 வயது முடிந்து 80 வயது ஆரம்பித்தது.அதற்காகத்தான் சிறப்பு புஜை,சொந்த ஊரில்.



           
-------------------------------------------------------------------------------------------------------------------